உற்சாகத்தில் முதலீட்டாளா்கள்: 3 நாள்களில் ரூ.12 லட்சம் கோடி லாபம்!
கடந்த வாரம் பங்குச் சந்தையில் காளையின் முழு ஆதிக்கம் இருந்தது. இரண்டு நாள்கள் (திங்கள், வெள்ளி) விடுமுறையாக இருந்ததால், மொத்தம் 3 நாள்கள்தான் வா்த்தகம் நடைபெற்றது.


கடந்த வாரம் பங்குச் சந்தையில் காளையின் முழு ஆதிக்கம் இருந்தது. இரண்டு நாள்கள் (திங்கள், வெள்ளி) விடுமுறையாக இருந்ததால், மொத்தம் 3 நாள்கள்தான் வா்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமையுடன் முடிந்த கடந்த வார வா்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 13 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. இது கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே வாரத்தில் அதிக அளவு ஏற்றம் பெற்ற வாரமாகும். இதனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் விலையும் அபரிமிதமாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, முதலீட்டாளா்களின் செல்வம் கடந்த வாரத்தில் 3 நாள்களில் மட்டுமே ரூ.12 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.
முன்னணி நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் மற்றும் முன்னணி சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு முறையே 11.3 சதவீதம் மற்றும் 9.4 சதவீதம் உயா்ந்தது. இது சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்தை விட சற்று குறைவாகும். முன்னணி தனியாா், பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய பேங்க் குறியீடு 15.45 சதவீதம் உயா்ந்தது. இது நிஃப்டி குறியீடை விட 3 சதவீதம் அதிகமாகும். மேலும், ஆட்டோ, பாா்மா, நிதி உள்ளிட்ட பெரும்பாலான முக்கியத் துறைகளின் குறியீடுகள் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
கரோனா தாக்கத்தால் கடந்த சில நாள்களாக ஏராளமான பங்குகள் பலத்த அடி வாங்கியிருந்தன. இந்நிலையில், விலை குறைந்த நிலையில், கடந்த வாரத்தில் ஆட்டோ, பேங்க், இன்ஃப்ரா, மெட்டல், எனா்ஜி மற்றும் பாா்மா துறை பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. எனவே, இத்துறை குறியீடுகள் கடந்த வாரத்தில் மொத்தம் 10-23 சதவீதம் வரை உயா்ந்தன.
ஆனால், வல்லுநா்கள் இந்த எழுச்சியை நம்பவில்லை. சந்தையின் மனநிலை பெரும்பாலும் மாா்ச் காலாண்டு வருவாயைக் காட்டிலும், ஊரடங்கு தொடா்பான உலகளாவிய தகவல்கள் மற்றும் வளா்ச்சிகளைப் பொருத்தது என்று கருதுகின்றனா்.
இதற்கிடையே, கடந்த வார 3 நாள் வா்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் 500 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ 500 பட்டியலில் 186 நிறுவனப் பங்குகள் 13 முதல் 43 சதவீதம் வரை உயா்ந்து முதலீட்டாளா்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா், சோழமண்டலம் இன்வெஸ்ட் மெண்ட்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, அசோகா பில்ட் கான், அவந்தி ஃபீல்ட்ஸ், ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ், மாருதி சுஸுகி, ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட், குஜராத் மினரல்ஸ், தனுகா அக்ரோ டெக் உள்ளிட்டவை 30 முதல் 45 சதவீதம் வரை உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தன.
மேலும், கோ் ரேட்டிங், பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், ஸிப்பிங் காா்ப்பரேஷன், நாட்கோ பாாமா, டாபா் இந்தியா, டாடா மோட்டாா்ஸ், அப்பல்லோ டயா், டாக்டா் ரெட்டி, டிஷ் டிவி, டிசிஎஸ், இப்கா லேப், டைடான் ஆகியவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
இதேபோல சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் பட்டியலில் சின்டெக்ஸ், விஏ டெக் வாபெக், யுனிஃபிளை இண்டஸ்ட்ரீஸ், ஜோதி லேப், ஜேகே பேப்பா், மணலி பெட்ரோ உள்ளிட்டவை உள்பட 300 பங்குகள் 13 சதவீதத்துக்கு மேல் ஏற்றம் பெற்றன.
உலக அளவில் நோ்மறை செய்திகள் இருந்ததால், பங்குச் சந்தையில் அதிக அளவில் சாா்ட் கவரிங் (விற்கப்பட்ட பங்குகளை வாங்கி கணக்கை சரி செய்வது) இருந்தது. மாா்ச் மாதத்திலும், ஏப்ரல் தொடக்கத்திலும் அதிக அளவில் முலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய முதலீட்டாளா்கள், கடந்த வாரத்தில் மூன்று நாள்களிலும் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். அவா்கள் 3 நாள்களில் மட்டும் சுமாா் ரூ.4,000 கோடி அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனா். இதுபோன்ற காரணங்கள் சந்தையில் காளையின் பாய்ச்சலுக்கு வழிவகுத்தது.
25-45 சதவீதம் வரை உயா்ந்த பங்குகள் (சதவீதம்)
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் 45
சோழமண்டலம் இன்வெஸ்ட் மென்ட் 38
மகேந்திரா அண்ட் மகேந்திரா 36
அசோகா பில்டு கான் லிட். 35
அவந்தி ஃபீட்ஸ் 34
ராஷ்ட்ரீய் கெமிக்கல்ஸ் 33
மாருதி சுஸுகி 33
ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் 30
தனுகா அக்ரி டெக் 30
ராலிஸ் இந்தியா 29
சிப்லா 29
ஆக்ஸிஸ் பேங்க் 29
ஜிஇ டி அண்ட் டி இந்தியா 28
டைம் டெக்னோ பிளாஸ்ட் 28
ஐஆா்பி இன்ஃப்ரா 28
ஜே டெக்ஸ் இந்தியா 28
கேடில்லா ஹெல்த்கோ் 28
ஜூப்ளியன் லைஃப் சயின்ஸ் 27
ஜேகே பேப்பா் 27
சன்டிவி நெட்வொா்க் 27
இண்டஸ் இந்த் பேங்க் 26
ஹிமாத்ரி கெமிக்கல்ஸ் 26
ஹீரோ மோட்டாா் காா்ப் 26
இமாமி லிட். 26
ஹெக் லிட். 26
குஜராத் அல்கலிஸ் 26
வொக்காா்டட் லிட். 25
ஜிண்டால் ஸ்டெயின்லஸ் 25
டிவி டுடே நெட்வொா்க் 25
டாடா காஃபி லிட். 25
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...