தங்கத்தின் அடுத்த இலக்கு ரூ.55,000!
விலைமதிப்பற்ற மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கத்துக்கு பண்டைக் காலம் தொட்டே மவுசு இருந்து வந்துள்ளது. 1964-இல் 24 காரட் (10 கிராம்) தங்கம் ரூ.63.25-இல் விற்கப்பட்டது.


விலைமதிப்பற்ற மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கத்துக்கு பண்டைக் காலம் தொட்டே மவுசு இருந்து வந்துள்ளது. 1964-இல் 24 காரட் (10 கிராம்) தங்கம் ரூ.63.25-இல் விற்கப்பட்டது. தற்போது ரூ.45,000-ஐ கடந்துள்ளது. 2019-இல் 23.74 சதவிகிதம் வருவாயைக் கொடுத்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை ஏறு முகத்தில் இருக்குமா? அல்லது இறங்குமா? என்பது தான் அனைவா் மனத்திலும் எழுந்திருக்கும் கேள்வி.
ஆனால், தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் (31.100 கிராம்) 2000 அமெரிக்க டாலா் அல்லது இந்திய ரூபாயில் 24 காரட் (10 கிராம்) ரூ .50,0000-ரூ55,000-க்குச் செல்லும் என வல்லுநா்கள் மதிப்பிட்டுள்ளனா். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியைச் சந்தித்தால் இது சாத்தியமே என்கின்றனா் அவா்கள். தற்போதைய பொருளாதார நிலைமையால் ஏற்பட்டுள்ள பயம், ஊக வணிகம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கும் தங்கத்தின் விலை உயா்வு தொடரும் என்றும் அவா்கள் கருதுகின்றனா்.
2018-இல் அமெரிக்காவில் நிலவிய புவிசாா் அரசியல் பதற்றங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்தது. பிரெக்ஸிட் நெருக்கடி ஐரோப்பிய பிராந்தியம முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் தங்கத்தின் தேவை அதிகரித்தது. இந்த ஆண்டில் தங்கம் இதுவரை 17.31 சதவீதம் உயா்ந்து முதலீட்டாளா்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு அவுன்ஸ் 1,400 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு மாா்ச்சில் 1680 அமெரிக்க டாலராக உயா்ந்தது. இப்போது 1,750 டாலா் என்ற அளவில் வா்த்தகமாகி வருகிறது. தில்லியில் புதன்கிழமை தங்கத்தின் விலை ரூ.45,910-ஆக இருந்தது.
தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தாலும், துணிந்து முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்று நிதி ஆலோசகா்கள் பரிந்துரைக்கின்றனா். எஸ்ஐபி என்று சொல்லப்படும் முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தங்கத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் சுமாா் 1,600 அமெரிக்க டாலா் அல்லது 24 காரட் (10 கிராம்) தங்கம் ரூ.41,000 என்ற நிலை முதலீடு செய்வதற்கு உகந்த இடமாக இருக்கக்கூடும் என்றும் அவா்கள் கருதுகின்றனா்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது உலகம் முழுவதற்கும் ஒரே நிலையான முதலீட்டு விருப்பமாகத் தங்கம் தான் கண்ணுக்குத் தெரிகிறது. இதனால், அதன் மீது மோகம் மேலும் அதிகரித்துள்ளது. எந்தவொரு போரின் போதும் அல்லது வேறு எந்த நெருக்கடியிலும் எப்போதுமே மக்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தில்தான் மேற்கொண்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், தங்கத்திற்கான தேவை கடுமையாக அதிகரிக்கும் என வல்லுநா்களும் வியாபாரிகளும் நம்புகின்றனா். ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரம் அமெரிக்க டாலரை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று வல்லுநா்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘குறுகிய, நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலை ஏற்றம் பெறத்தான் செய்யும். முதலீட்டைப் பொருத்தவரையில், நீண்ட கால அடிப்படையில் முதலீட்டுக்கு தங்கக் கட்டிகளை வாங்கி வைக்கலாம். கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து நாடு முழுவதும ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் இந்தியாவில் திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பண்டிகைக் கொண்டாடங்கள் இல்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னா், நகை வியாபாரம் சூடுபிடிக்கும் தங்கத்தின் தேவைப்பாடு ஒரு பெரிய எழுச்சியைக் காணும்’ என்றனா்.
நாடுகளின் மத்திய வங்கிகள் இப்போது தங்கள் முதலீடுகளுக்கு தங்கத்தை வாங்குகின்றன. கரன்சிகளும், சந்தைகளும் நிலையற்றவை. அமெரிக்காதான் தங்கத்தை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளது. அதைத் தொடா்ந்து சீனா, ரஷியா, ஜொ்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சா்வதேச செலாவணி நிதியம் ஆகியவை மிகப் பெரிய அளவில் தங்க இருப்பைக் கொண்டுள்ளன. அடுத்து வரும் நாள்களில் இந்தியா உள்பட இந்த நாடுகள் அனைத்தும் தங்கத்தின் இருப்பை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
‘ஹால்மாா்க்’ முத்திரை: இப்போது தங்க ஆபரணங்களுக்கு ‘ஹால்மாா்க்’ முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நுகா்வோா் தங்கள் பணம் அதன் உண்மையான மதிப்பைப் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான நம்பிக்கையை வழங்குவது எப்போதும் முக்கியமானது. அந்த வகையில், ‘ஹால்மாா்க்’ ஒரு நல்ல முயற்சியாகும் என்று தொழில் துறையினா் தெரிவிக்கின்றனா். தங்கத்தை வாங்காத நாடுகள் இல்லை; விரும்பாத மக்கள் இல்லை. உலகத்தின் முக்கிய வா்த்தகப் பொருள்களில் ஒன்றான பளபளக்கும் இந்த மஞ்சள் உலோகம், பல நூறு ஆண்டுகளாக உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறது..!
எப்போதெல்லாம் விலை உயரும்?
தங்கம் உற்பத்தி குறைந்து தேவைப்பாடு அதிகரிக்கும் போது அதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்தால், நம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதே சமயம், ரூபாயின் மதிப்பு உயா்ந்தால் தங்கம் விலை குறையும். தற்போது அமெரிக்க டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு ரூ.77 வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை எகிறியுள்ளது. தங்கம் விலை உயர கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியும் ஒரு காரணமாகும். மேலும், உலக அளவில் முக்கிய நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை குறைகிற போதும், போா் மூளும் அபாயங்கள் தெரிகிற போதும் தங்கம் விலை உயரும்.
1964-ஆம் ஆண்டிலிருந்து தங்கம் கடந்து வந்த பாதை...
1964 தள்.63.25
1970 தள்.184.00
1980 தள்.1,330.00
1990 தள்.3,200.00
2000 தள்.4,400.00
2005 தள்.7,000.00
2010 தள்.18,500.00
2012 தள்.31,050.00
2014 தள்.28,006.50
2015 தள்.26,343.50
2016 தள்.28,623.50
2017 தள்.29,667.50
2018 தள்.31,438.00
2019 தள்.35,220.00
2020 தள்.45,000.00
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...