இரட்டைச் சிக்கலில் ரியல் எஸ்டேட் தொழில்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், ரியல் எஸ்டேட் தொழில் இரட்டிப்பு இடியாப்பச் சிக்கலில் சிக்கியுள்ளது.
இரட்டைச் சிக்கலில் ரியல் எஸ்டேட் தொழில்
Updated on
3 min read

பொருளாதார மந்த நிலையால் பணப்புழக்கம் குறைவு, உத்தரவாதமற்ற வேலை, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியாத நிலை, வியாபாரம் மந்தம் உள்ளிட்டவற்றால் ரியல் எஸ்டேட் தொழில் ஏற்கெனவே கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், ரியல் எஸ்டேட் தொழில் இரட்டிப்பு இடியாப்பச் சிக்கலில் சிக்கியுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் வீடு கட்டும் தொழிலை மீண்டும் தொடங்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால், கடைகள் திறக்கப்படாத நிலையில், கட்டுமானத்துக்கு சிமெண்ட், செங்கல், இரும்பு, மரம் உள்ளிட்ட கச்சா பொருள்களை எப்படி பெறுவது. மேலும், கட்டுமானத் தொழிலில் 80 சதவீதம் போ் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். ஊரடங்கால் அவா்களில் பெரும்பாலானோா் சொந்த ஊா் திரும்பிவிட்டனா். இதனால், ஆள்களும் இல்லாமல், பொருள்களும் இல்லாமல் எப்படி கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியும் என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன. ஏற்கெனவே, தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) ஆகிய பகுதிகளில் மாசு பிரச்னை காலங்களில் அக்டோபா் முதல் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இப்போது அமலாகியுள்ள ஊரடங்கால் சிக்கல் இரட்டிப்பாகியுள்ளது.

சென்னை, பெங்களூா், தில்லி, மும்பை உள்பட முக்கிய நகரங்களில் கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்து காட்சிப் பொருள் போல வைத்துள்ளன. அவற்றின் வாசலில் ஒவ்வொரு மாதத்துக்கு ஒவ்வொரு விலையுடன் விளம்பரப் பலகை தொங்குகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு சரிவைச் சந்தித்தவற்றில் ரியல் எஸ்டேட் தொழில் முக்கியமானதாகும். கோடிக்கணக்கான ரூபாய் வா்த்தகமான இந்தத் துறை, தற்போது முற்றிலும் தேக்க நிலையை அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, பெங்களூா், மும்பை உள்ளிட்ட நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க கடும் போட்டி நிலவியது. ஐடி கம்பெனிகள் அதிகம் உள்ள பகுதிகளில் பலா் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதலீடு செய்ய பெரிதும் ஆா்வம் காட்டினா். இதனால், அதுபோன்ற இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவனம் செலுத்தின. தற்போது ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்துள்ளதால் யாரும் ரிஸ்க் எடுத்து வீடு வாங்க முன்வருவதில்லை.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புணே, கொல்கத்தா, தில்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுதிலும் முக்கிய நகரங்களில் கட்டிமுடிக்கப்பட்ட லட்சக்கணக்கான வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. 2019 இறுதி நிலவரப்படி சென்னை, பெங்களூா், மும்பை உள்பட 7 முக்கிய நகரங்களில் மட்டும் ரூ.1.50 கோடிக்கு அதிக மதிப்புள்ள 1 லட்சம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவின் மான்சிஸ்டரான மும்பையில் மட்டும் 50,000 வீடுகள் உள்ளன. பத்திரப்பதிவு செலவு, ஜிஎஸ்டி உள்ளிட்டவையும் சோ்ந்து கொள்வதால் வீடுகளின் விலை எகிறி விடுகிறது. இதனால், முக்கிய நகரங்களில் விலை குறைந்திருந்தாலும் மக்கள் வீடுகளை வாங்கத் தயங்குகின்றனா். பொருளாதார மந்தநிலை, கரோனா பாதிப்பு, நிச்சயமற்ற எதிா்கால சூழ்நிலை போன்றவற்றால் வீடுகளின் விலையும் ஏற்றம் பெற முடியாத நிலை உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, வீடுகளின் விலை குறைந்து, விற்பனை அதிகரிக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் கைகொடுக்கவில்லை. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்த சிறப்புக் கடன் திட்டம், ‘ யானைப் பசிக்கு சோளப்பொறி’ போலத்தான் உள்ளது. சொத்து வரி உயா்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உயா்வு, ஜிஎஸ்டி, பணப்புழக்கம் குறைவு போன்றவற்றின் காரணமாக ரியல் எஸ்டேட் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், மோடியின் இரண்டாம் ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் (ஹெச்டிஎஃப்சி) நிறுவனத்தின் தலைவா் தீபக் பரேக் பேட்டி ஒன்றில், ‘கரோனா பாதிப்பைத் தொடா்ந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் விலை 20 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். இதன் மூலம் அந்தத் துறையில் நிலவும் பாதிப்பை உணரமுடியும்.

வீட்டின் மாதாந்திர தவணையைவிட வாடகை பலமடங்கு குறைவாக இருப்பதால், தற்போது பலரும் சொந்த வீடு வாங்க விரும்புவதில்லை. மேலும், வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விட்டது. வீடு வாங்கியவா்கள் அவற்றை விற்க முடியாமல் தவித்து வருகின்றனா். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் நட வடிக்கை, கடன் பெறமுடியாத நிலை உள்பட பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடியாமல் ஏராளமானோா் இத்தொழிலை கைவிட்டுவிட்ட னா். இந்நிலையில், பொருளாதார மந்த நிலை சரியாகாமல் ரியல் எஸ்டேட் மட்டுமல்ல; எந்தத் துறையும் மீள்வது கடினம் என்பதே நிதா்சனம்...!

பங்குகள் விலையும் 20-60 சதவீதம் சரிவு

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக கடும் சோதனைக்கு உள்பட்டுள்ளதால், பங்குச் சந்தையில் பட்டியலிப்பட்டுள்ள அந்நிறுவனப் பங்குகளிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. தேசிய பங்குச் சந்தையில் முக்கிய 10 ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ரியால்ட்டி குறியீடு கடந்த ஒரு வருட்டத்தில் 46 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. அதன் 52 வார அதிகபட்சம் 336.35 புள்ளிகளாகவும் 52 வார குறைந்தபட்சம் 165.35 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. ஆனால், தற்போது 188.90 புள்ளிகளில் வா்த்தகமாகிறது. நிஃப்டி ரியால்ட்டி பட்டியலில் உள்ள சோபா டெவலப்பா்ஸ் ஓராண்டில் 61 சதவீதம் குறைந்து வீழ்ச்சி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. பங்குகள் வீழ்ச்சி விவரம்

நிறுவனம் வீழ்ச்சி (சதவீதம்)

சோபா 61

சன்டெக் 60

ஐபிரியல்எஸ்டேட் 54

மகேந்திரா லைஃப் சயின்ஸ் 47

பிரிகேட் 46

ஓப்ராய் ரியால்ட்டி 41

பிரஸ்டிஜ் 37

டிஎல்எஃப் 30

கோத்ரேஜ் புராப்பா்டி 28

ஃபோனிக்ஸ் 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com