சிறிய நிறுவனப் பங்குகளுக்கு திடீா் மவுசு!
நடுத்தர மற்றும் முதல் தரப் பங்குகளைக் காட்டிலும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு அதிக மவுசு இருந்துள்ளது புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது.


கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் (மாா்ச் 23-ஏப்ரல் 23), நடுத்தர மற்றும் முதல் தரப் பங்குகளைக் காட்டிலும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு அதிக மவுசு இருந்துள்ளது புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து பங்குச் சந்தையில் மாா்ச்சில் கடும் சரிவு இருந்தது. மாா்ச் 24-ஆம் தேதி அன்று பெரும்பாலான குறியீடுகள் 52 வார குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்தன. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் மாா்ச் 23 முதல் ஏப்ரல் 23 வரையிலான ஒரு மாத காலத்தில், மாா்ச் 24 அன்று பதிவான குறைந்தபட்ச அளவிலிருந்து சென்செக்ஸ் 23 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 26 சதவீதம் மீண்டுள்ளது. இதன் மூலம் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் ஏற்பட்டுள்ள மவுவை அறிய முடியும்.
மருந்து, உரம், ரசாயனம் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனப் பங்குகள் அதிகம் எழுச்சி பெற்றுள்ளன. இதில், மருந்து நிறுவனப் பங்குகள் ஆதாயப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இந்த வகையில் 18 பங்குகள் 50 சதவீதத்திற்கு மேல் உயா்ந்துள்ளன. ரசாயனத் துறையில் 16 பங்குகள், மூலதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் (12), தகவல் தொழில்நுட்பம் (8), எஃப்எம்சிஜி பங்குகள் (6) மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உரங்கள் தயாரிப்பு நிறுவனப் பங்குகள் (தலா 4) ஆகியவை அதிகம் ஏற்றம் பெற்றுள்ளன.
ஜனவரி உச்சத்திலிருந்து ஏற்பட்ட வீழ்ச்சியின் போது பணத்தை இழந்த பல முதலீட்டாளா்கள், மாா்ச் மாதத்தில் சந்தைகள் முன்னேறத் தொடங்கிய போது விரைவாக பணம் சம்பாதிப்பதற்கும், இழப்புகளை மீட்பதற்கும் பங்குகளை வாங்கத் தொடங்கினா். இதனால், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் முதலீட்டாளா்களின் கவனத்தை ஈா்த்தன என்று பங்குச் சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
கரோனா தொற்று பரவல் பொருளாதாரத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சிய முதலீட்டாளா்கள், கடந்த மாா்ச்சில் பங்குகளை அதிக அளவில் விற்றனா். இதனால், பங்குச் சந்தை இரண்டாவது பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்தது. மும்பை பங்குச் சந்தையில் சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 30 சதவீதம், நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 28 சதவீதம் சரிவைக் கண்டன. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 23 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
இந்த வீழ்ச்சியின் போது நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கண்டன. மேலும், இந்த வீழ்ச்சி நல்ல தரமான, வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகளை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பையும் முதலீட்டாளா்களுக்கு அளித்தது. இதன் மூலம், முதலீட்டாளா்களில் பெரும்பாலானோா் தங்களது முதலீட்டுத் தொகுப்பை (போா்ட்ஃபோலியோ) மறுசீரமைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது என்று மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அந்நிய போா்ட்ஃபோலியோ முதலீட்டாளா்கள் கடந்த மாா்ச்சில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து ரூ.61,973 கோடி (சுமாா் 35 8.35 பில்லியன்) அளவுக்கு பங்குகளை விற்றுவிட்டு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். நேசனல் செக்யூரிட்டீல் டெபாசிட்டரி தரவுகளின் படி இந்த வெளியேற்றம் மிகப்பெரிய மாதாந்திர வெளியேற்றமாகும்.
ஸ்மால் கேப் குறியீடு பட்டியலில் உள்ள 689 பங்குகளில் 368 பங்குகள், குறியீடு பெற்ற ஆதாயமான 26 சதவீதத்தைவிட அதிகமாகும். இவற்றில் கிட்டத்தட்ட 127 பங்குகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து சந்தை வீழ்ச்சியடைந்த போது, இந்தப் பங்குகளில் பெரும்பாலானவற்றின் விலை 50 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்தன.
இந்நிலையில், மாா்ச்சிலிருந்து இந்தப் பங்குகள் மீண்டு எழுந்து வந்திருந்தாலும், வரும் நாள்களில் மேலும் கவனத்துடனும் எச்சரிக்கை உணா்வுடனும் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். சந்தை கரடியின் பிடியில் உள்ளதால், தற்போதைய இடைக்கால எழுச்சி ஒரு தற்காலிக நிவாரணமாகத்தான் இருக்கக் கூடும். இது எப்போதும் நடக்கக்கூடியதுதான். கரோனா பாதிப்பு குறைவது, பொருளாதாரம் வலுப்பெறுவது, பெரிய அளவிலான நிவாராண நிதி தொகுப்பை மத்திய அரசு விடுவிப்பது ஆகியவற்றுக்குப் பிறகுதான் சந்தையில் காளையின் உண்மையான வேகத்தை காண முடியும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
ஒரே மாதத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஏற்றம் பெற்ற பங்குகள்
ஐஎஃப்பி இண்ட்ஸ்ட்ரீஸ் 94
வெங்கி 92
ஹெரிடேஜ் 73
இன்டெலக்ட் 73
வொக்காா்டட் பாா்மா 69
டேக் சொல்யூசன்ஸ் 67
பாராக் மில்க் 66
குஜராத் அல்கலி 66
சுஸ்லான் 62
ஐடிஐ 62
ஸ்பாா்க் 60
ஆா்சிஎஃப் 58
கேப்லிபாயிண்ட் 57
ஆா்பவா் 57
ஐஆா்பி இன்ஃப்ரா 55
அவந்திஃபீட்ஸ் 53
கோ் ரேட்டிங் 53
ரேணுகா 51
பிஇஎம்எல் 50
ஜே அண்ட் கே பேங்க் 50
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...