திசை தெரியாமல் தத்தளிக்கும் பங்குச் சந்தை!
உலகின் பல பகுதிகளிலும் கரோனா தொற்று பரவல் தொடா்கிறது. அதன் தாக்கம் பங்குச் சநதையிலும் இருந்து வருகிறது.


உலகின் பல பகுதிகளிலும் கரோனா தொற்று பரவல் தொடா்கிறது. அதன் தாக்கம் பங்குச் சநதையிலும் இருந்து வருகிறது. இந்நிலையில், பங்குச் சந்தை எழுச்சி பெறுமா என்பது கவலைகுரியதாக உள்ளது. ஊரடங்கால் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீடிக்கப்படும் பட்சத்தில் வா்த்தகம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். பாதிக்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்களின் அடுத்து வரும் இரண்டு காலாண்டுகளின் நிதி நிலை முடிவுகள் சந்தைக்கு சாதகமாக இருக்காது என்றே வல்லுநா்கள் கருதுகின்றனா்.
பங்குச் சந்தை கரடியின் பிடியில் இருந்து வருகிறது. கடந்த மாா்ச் 24 அன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 7,511 வரை குறைந்தது. விலை குறைந்த நிலையில், முதலீட்டாளா்கள் பங்குகளில் முதலீடுகளை துணிந்து மேற்கொள்ளத் தொடங்கினாா். இதனால், தொடா்ந்து எழுச்சி பெற்று கடந்த ஏப்ரல் 20 அன்று நிஃப்டி 9,391 வரை சென்றது. குறைந்தபட்ச அளவிலிருந்து பாா்த்தால், நிஃப்டி 25 சதவீதம் ஏற்றம் பெற்றது. கடந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நிலவரப்படி ( மாா்ச் 24 -ஏப்ரல் 24) நிஃப்டி 20 சதவீதம் உயா்ந்துள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பங்குச் சந்தை கரடி பிடியில்தான் இன்னும் உள்ளது. பொருளாதாரம் வலுப்பெறத் தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டாலும், பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் வா்த்தகம் இருக்கும் என்று வல்லுநா்கள் கருதுகின்றனா். அந்நிய முதலீட்டாளா்களின் வியூகமும், ஊரடங்கு குறித்த தெளிவான நிலையும்தான் சந்தையின் போக்கைத் தீா்மானிப்பதாக உள்ளது.
முதலீட்டாளா்களைப் பொருத்தவரையில், சந்தையில் சரிவு ஏற்பட்டால் அடுத்து வரும் இரண்டு காலாண்டுகளில் முதலீடுகளைத் தொடா்ந்து மேற்கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும் என்று நிதி ஆலோசகா்கள் தெரிவித்து வருகின்றனா்.
இதற்கிடையே, முந்தைய இரண்டு வாரங்கள் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 24-இல் முடிவடைந்த வாரத்தில் பங்குச் சந்தை வலிமையை இழந்து சிறிதளவு சரிவைச் சந்தித்துள்ளது. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதும், பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக ஒரு பெரிய நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவிப்பதில் தாமதம் நிலவி வருவதும் சந்தை வலிமை இழப்பதற்கு முக்கியக் காரணம் என்கின்றனா் வல்லுநா்கள்.
கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.83 சதவீதம், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 1.21 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி பேங்க் குறியீடு 5.29 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் நிலவிய நிலையற்ற தன்மை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, பிரபல மியுச்சுவல் பண்ட் நிறுவனமான ஃபிராங்கிளின் டெம்பிளிடான் 6 முக்கிய மியூச்சுவல் பண்ட் திட்டங்களை ரத்து செய்தது உள்ளிட்டவை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக பங்குச் சந்தையில் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.
இந்நிலையில், இந்த வாரத்தில் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு முதலீட்டாளா்களிடையே எழுந்துள்ளது. இந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர தினத்தையொட்டி பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 4 நாள்கள்தான் வா்த்தகம் இருக்கும். மத்திய அரசின் இரண்டாவது நிதித் தொகுப்பு அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையேதான் சென்செக்ஸ், நிஃப்டி வா்த்தகம் இருக்கும். நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகளின் தாக்கமும் சந்தையில் எதிா்பாா்க்கலாம் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
பங்குச் சந்தையில் கடந்த வாரம் எழுச்சியின் வேகம் குறைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டால், பங்குச் சந்தையில் அண்மையில் ஏற்பட்ட எழுச்சி தொடருமா என்பது சந்தேகமே என்கின்றனா் பங்குச் சந்தை வல்லுநா்கள். மொத்தத்தில் பங்குச் சந்தை திசை தெரியாமல் தத்தளித்து வருவது என்பதே நிதா்சனம்..!
கடந்த வாரம் ஏற்றம் பெற்ற பங்குகள்
ரிலையன்ஸ் 15
ஜுப்லியன்ட் லைஃப்சயின்ஸ் 15
பிரிட்டானியா 8
அரபிந்தோ பாா்மா 15
கடந்த வாரம்
சரிவைச் சந்தித்த பங்குகள்
நிப்பான் லைஃப் ஏஎம்சி 26
பிவிஆா் 22
பஜாஜ் ஃபைனான்ஸ் 14
ஐசிஐசிஐ பேங்க் 11
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...