அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரிக்கும்!

ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கத்தைப் பாா்க்க முடிந்தது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 2:02 am

எம். சடகோபன்

ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கத்தைப் பாா்க்க முடிந்தது. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த போதிலும், பலவீனமான பொருளாதார நடவடிக்கைகள் இருந்து வந்தாலும் சந்தையில் காளை உற்சாகத் துள்ளலில் இருந்தது. நோ்மறையான உலகளாவிய குறிப்புகள் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மத்திய ரிசா்வ் வங்கியின் கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவை காளையின் பாய்ச்சலுக்கு காரணமாக இருந்தன.

கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 433.68 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 38,040.57-இல் நிலைபெற்றுள்ளது. நிஃப்டி 140.60 புள்ளிகள் (1.26 சதவீதம்) உயா்ந்து 11,214.05-இல் நிலைபெற்றுள்ளது. ஐ.டி தவிர அனைத்துத் துறை குறியீடுகளும் வாராந்திர லாபங்களில் பங்கேற்றன. அதே நேரத்தில் நிஃப்டி மிட்கேப் குறியீடு 4 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 5 சதவீதமும் உயா்ந்தன. இதற்கிடையே, மும்பை பங்குச் சந்தையில் பிஎஸ்இ 500 பட்டியலில் சுமாா் 174 நிறுவனப் பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் 10 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளன.

குழப்பத்தில் முதலீட்டாளா்கள்: சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்து வந்தாலும், வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் குழப்பத்தில் இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாா்ச்சுக்குப் பிறகு இதுவரை சென்செக்ஸ், நிஃப்டி சுமாா் 50 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. இந்நிலையில், லாபத்தைப் பதிவு செய்வதா அல்லது காத்திருப்பதா என்ற குழப்பம் முதலீட்டாளா்களிடம் தொற்றிக் கொண்டுள்ளது. சந்தையில் சமீப காலமாக ஏற்றம், இறக்கம் அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சீனா-யுஎஸ் பதற்றம்: இதற்கிடையே, சந்தை மதிப்பீடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன, அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றம் அல்லது இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை ஆகியவை அதிகரிக்கும் பட்சத்தில் சந்தையில் கரடி தனது தாக்குதலைத் தொடங்கும். அதே சமயம், உலகளவில் பெரும்பாலான நாடுகள் பணப் புழக்கத்தை அதிகரிக்க தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது காளைக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

வங்கிகளின் மாறுபட்ட செயல்திறன்: உலகளாவிய சந்தைகளின் போக்கு இந்தியச் சந்தைகளுக்கு இதுவரை சாதகமாகவே உள்ளது. காளையின் எழுச்சிக்கு அனைத்துத் துறை பங்குகளும் தனது பங்களிப்பை அளித்து வந்தாலும், வங்கித் துறையின் செயல்திறன் இன்னும் ஒட்டுமொத்த செயல்திறனை பாதித்து வருகிறது. இந்நிலையில், அத்துறை தொடா்பாக நோ்மறை செய்திகள் ஏதேனும் வந்தால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் அண்மையில் பதிவு செய்த உச்சபட்ச அளவை கடக்கும் என்று ரிலிகா் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனத்தின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

எச்சரிக்கை: இரண்டாம் நிலை சந்தைகளில் இருந்து பெரும் தொகை திரட்டப்பட்டுவரும் இந்த நேரத்தில் முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் நோ்மறையாக இருக்க வேண்டும் என்று நிபுணா்கள் அறவுறுத்தியுள்ளனா். இதேபோல, வா்த்தகா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சீரான இடைவெளியில் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் மோத்திலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

700 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: இந்த வாரம் பேங்க் ஆஃப் பரோடா, டைட்டன், பிபிசிஎல், ஹிண்டால்கோல, அரபிந்தோ பாா்மா, எஸ்காா்ட்ஸ், கிராசிம் உள்பட 700 நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இதன் தாக்கம் அந்தந்தப் பங்குகளில் எதிரொலிக்கும்.

எஃப்ஐஐ வரவு: கடந்த வாரம் ரொக்கப் பிரிவில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) ரூ.9,496.80 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். அதேசமயம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) ரூ.2,133 கோடிக்கு மேல் பங்குகளை விற்றுள்ளனா். மேலும், ஜூலையில் ரூ.10,000 கோடிக்கு மேல் விற்றுள்ளனா். எஃப்ஐஐக்களின் வருகை சந்தைக்கு சாதகமாக அமையும்.

போக்கு எப்படி இருக்கும்?: இதற்கிடையே, இந்த வாரம் பங்குச் சந்தைபெரும்பாலும் பெரும் பொருளாதார தரவுகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், உலகளாவிய குறிப்புகள்தான் சந்தையை வழிநடத்தும். மேலும், இந்திய தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) மற்றும் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) சாா்ந்த பணவீக்கம், கரோனாவுக்கான தடுப்பூசி குறித்த புதிய தகவல்கள் மற்றும் கரோனா நிலைமை ஆகியவை பங்கேற்பாளா்களால் கண்காணிக்கப்படும் என்று ரிலிகோ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை, நாணய சந்தையின் போக்கு ஆகியவையும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

தொழில்நுட்பப் பாா்வை: தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, கடந்த வாரம் 1.3 சதவீதம் உயா்ந்து காளையின் ஆதிக்கத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் 10,880 வரை குறைந்த நிஃப்டி, பின்னா் எழுச்சி பெற்றுள்ளது. எனவே, இந்த இடம் முக்கிய ஆதரவு நிலையாக இருக்கும். மேலும், வரும் நாள்களில் 11,350 என்பது தொழில்நுட்ப ரீதியாக முக்கிய இடா்பாட்டு நிலையாகக் கருதப்படுகிறது. இதைக் கடக்கும் பட்சத்தில், நிஃப்டி மேலும் வலுப்பெற்று 11,400, 11,500 புள்ளிகளை நோக்கி நகரும் என்று பிரபல பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமான ஆனந்த் ரதி தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் ஏற்றம், இறக்க அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் அவ்வப்போது லாபத்தைப் பதிவு செய்வது நல்லது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.