மூலப்பொருள் தொடர் விலையேற்றம்: முடங்கும் தொழில் துறை
கோவையில் கரோனாவுக்குப் பிறகு மெதுவாக மீளத் தொடங்கியிருக்கும் தொழில் துறையை, மூலப் பொருள் விலை உயர்வு மீண்டும் முடக்கத்தை நோக்கி நகர்த்தி வருகிறது.
தொழில் துறைக்கு பெயர் பெற்ற கோவையில் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு தொழில்கள் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொண்டு, அதில் வெற்றி பெற்றுத்தான் நிலைபெற்றுள்ளன. மூலப் பொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, சர்வதேசப் பொருளாதார மந்தநிலை, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொழில் துறை சந்தித்த சவால்களில் சில.
ஆனால் ஒட்டுமொத்த தொழில் துறையையும் தொடர்ந்து 6 மாதங்களுக்கு முடக்கிப் போட்டது யாருமே எதிர்பார்த்திராத கரோனா வைரஸ். பல தொழில்கள் இன்னும் முழுமையாக செயல்படாத நிலையில் தற்போது பெரும்பாலான குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையைத் தாக்கி மீண்டும் அவற்றை முடக்கத் தொடங்கியிருக்கிறது மூலப்பொருள்கள் விலை உயர்வு.
பல்வேறு இயந்திரத் தொழில்களுக்கு அவசியம் தேவைப்படும் ஸ்டீல், பவுண்டரி பொருள்களான கோக், பிக் அயர்ன், காஸ்டு அயர்ன், ஸ்டீல் ஸ்கிரேப், சிஐ போரிங், எச்.ஆர்., சி.ஆர். தகடுகள், தாமிரம், அலுமினியம் ஆகியவற்றின் விலை பொதுமுடக்க காலத்துக்குப் பிறகு 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு டன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஸ்டீல் தற்போது ரூ.47 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஸ்டீல் பிளேட், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
அதேபோல கடந்த மார்ச் மாதத்தில் கிலோ ரூ.450 ஆக இருந்த காப்பர் விலை தற்போது ரூ.650 ஆக உயர்ந்துள்ளது. பிக் அயர்ன் எனப்படும் தேனிரும்பின் விலை டன்னுக்கு ரூ.35 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. எலெக்ட்ரிகல் ஸ்டீலின் விலை கிலோவுக்கு ரூ.63 வரை உயர்ந்துவிட்டது. துத்தநாகத்தின் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.220 ஆகியிருக்கிறது.
இதுபோன்ற விலை உயர்வுகள் இயந்திரங்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பு, பம்ப்செட், கிரைண்டர் தயாரிப்பு உள்ளிட்ட பல குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழில் முனைவோரையும், அவர்களிடம் ஜாப் ஆர்டர்கள் வாங்கி வேலை செய்பவர்களையும் நேரடியாக பாதித்திருக்கிறது. மூலப்பொருள் விலை உயர்வால் பம்ப்செட் விலை 15 சதவீதம் வரையிலும் கிரைண்டர்களின் விலை 20 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன.
மூலப்பொருள் விலை உயர்வால் ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை செய்து முடிக்க முடியாமலும், அதன் காரணமாக புதிய ஆர்டர்களை எடுக்க முடியாமலும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு.
பொது முடக்கம் முடிவுக்கு வந்த பிறகு நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் நிதி, சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மூலப்பொருள்களின் விலை உயர்வானது தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை பாதிப்பதுடன், ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் செய்யும் பணிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. எம்.எஸ்.எம்.இ. துறைக்கு முக்கியத் தேவையான ஸ்டீலின் விலையை வரலாற்றில் இதுவரை இல்லாதபடி ஒரே நாளில் பல முறை மாற்றி அமைக்கும் அவலமும் உள்ளது.
அதேபோல இறக்குமதிக்கு அனுமதி பெற்ற மூலப்பொருள்களின் விலையும் கடுமையாகவே உள்ளது. இறக்குமதி தீர்வை அதிகரித்ததாலும் உள்ளூர் தயாரிப்பாளர்கள் தகுந்த விலையில் வழங்க இயலாததாலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருள்கள் தற்போது வெளிச் சந்தையில் அதிக விலையில் விற்கப்படுவதால் அரசு இதற்கான அதிகபட்ச விலையை முடிவு செய்து விற்பனை விலையாக உறுதி செய்ய வேண்டும். மேலும், கோவையில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் செயில் மூலப்பொருள் கிடங்கைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார் அவர்.
மூலப்பொருள் விலை உயர்வு பம்ப்செட் ஏற்றுமதி வணிகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக்.
பொது முடக்க முடிவுக்கு பிறகு உலக நாடுகள் தங்களின் பொருள்கள் தேவைக்கு சீனாவைத் தவிர்த்துவிட்டு இந்தியாவை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் பம்ப்செட் ஏற்றுமதிக்கான சர்வதேச விசாரணைகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், பம்ப்செட் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள், பேக்கிங் பொருள்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் பம்ப்செட் விலை உயரும். இது உலகளாவிய பங்களிப்பில் சுமார் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்திய பம்ப்செட் நிறுவனங்கள் தங்களின் சந்தைப் பங்களிப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளும். ஸ்டீல், அயன் ஓர் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்வதாலும், எலக்ட்ரிகல் ஸ்டீலை இறக்குமதி செய்யத் தடை இருப்பதாலும் மூலப்பொருள் விலை உயருவதாகக் கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் தொழில் துறை மீண்டும் ஒரு முடக்கத்தைச் சந்திக்கும் என்கிறார் அவர்.
இதற்கிடையே அண்மைக் காலமாக நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மூலப்பொருள் விலை உயர்வை விரைவுப்படுத்துவதாக தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
- க.தங்கராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

