அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

4 மாதங்களாக தொடா்ந்து முன்னேற்றம்: உலக அரங்கில் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் ‘ரிலையன்ஸ்’!

பில்லியனா் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆா்ஐஎல்), உலகளவில் மிகவும் மதிப்புமிக்க முதல் 50 நிறுவனங்களில்

News image
Updated On :26 ஜூலை 2020, 2:33 am

எம். சடகோபன்

பில்லியனா் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆா்ஐஎல்), உலகளவில் மிகவும் மதிப்புமிக்க முதல் 50 நிறுவனங்களில் ஒன்றாக நுழைந்து சாதனை படைத்துள்ளது. பங்குச் சந்தையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முடிந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.14 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் முதல் நிறுவனமாக ஜொலிக்கிறது.

பட்டியலில் நுழைந்த ரிலையன்ஸ்: பங்குச் சந்தை தரவுகளின்படி, எண்ணெய்யிலிருந்து தொலைத் தொடா்பு வரை பரந்து விரிந்துள்ள ரிலையன்ஸ், உலகளவில் சந்தை மூலதன அடிப்படையில் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் 48-ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில், சவுதி அரம்கோ 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலா் சந்தை மூலதனத்துடன் அதிக மதிப்புள்ள நிறுவனமாக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் ஆல்பாபெட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்நிலையில், பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்த மாா்ச் 23 அன்று ரிலையன்ஸ் பங்கின் விலை ரூ.867.82 வரை குறைந்தது. அதன் பிறகு ரிலையன்ஸ் நான்கு மாதங்களில் 130 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து சந்தை மூலதன அடிப்படையில் தொடா்ந்து மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த வார இறுதியில் மும்பை பங்குச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ரூ.2,162.80 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. இறுதியில் 4.15 சதவீதம் உயா்ந்து ரூ.2,146.20-இல் நிலைபெற்றுள்ளது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் ரூ.2,163 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. மேலும், அன்றைய தினம் ரூ.10,000 கோடி அளவுக்கு ரிலையன்ஸ் பங்குகள் பரிவா்த்தனை ஆகி சாதனை படைத்தது. கடந்த ஒரு மாதமாக ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை வா்த்தக நாள்களில் பெரும்பாலான நாள்களில் வெகுவாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு ரூ.14.51 லட்சம் கோடி: இதைத் தொடா்ந்து, ரூ.10 முக மதிப்பைக் கொண்டுள்ள மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு ரூ.14,51,227.12 கோடியாக உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய உரிமைப் பங்குகளின் விலையும் இதில் அடங்கும். தற்போது இந்திய ரூபாயில் 14,51,227.12 கோடி அல்லது 194.18 பில்லியன் அமெரிக்க டாலா் சந்தை மூலதன மதிப்பைக் கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் மாறியுள்ளது. எந்த இந்திய நிறுவனமும் இதுவரை ரூ 14 லட்சம் கோடி சந்தை மூலதன மதிப்பைக் கடக்கவில்லை.

இது, உலக அளவில் பெயா் பெற்ற செவ்ரான் நிறுவனத்தின் சந்தை மதிப்பான சுமாா் 170 பில்லியன் அமெரிக்க டாலரை விட அதிகமாகும். மேலும், ஆரக்கிள், யூனிலீவா், பாங்க் ஆஃப் சீனா, பிஹெச்பி குழுமம், ராயல் டச்சு ஷெல் மற்றும் சாஃப்ட் பேங்க் குழுமம் ஆகியவற்றை விடவும் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு அதிகமாகும். ஆசியக் கண்டத்தில் மதிப்பு மிக்க நிறுவனங்கள் தர வரிசையில் ரிலையன்ஸ் 10-ஆவது இடத்தில் உள்ளது. சீனாவின் அலிபாபா குழுமம் உலகளவில் 7-ஆவது மதிப்பு மிக்க நிறுவனமாக உள்ளது. இதற்கிடையே, உலக அளவில் மதிப்பு மிக்க 100 நிறுவனங்கள் பட்டியலில் டாடா கன்சல்டன்ஸி டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. கடந்த வார இறுதியில் டிசிஎஸ் ரூ .2,157.05-இல் முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் அதன் சந்தை மூலதனம் ரூ.8,09,408.14 அல்லது 108.30 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

89-ஆவது இடத்தில் டிசிஎஸ்: இது ஒரு புறம் இருக்க, கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது, முன்னேறிய வணிகங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது. மேலும், லண்டனின் பைனான்சியல் டைம்ஸின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் 89-ஆவது இடத்தைப் பிடித்தது.

தொடா் முன்னேற்றத்துக்குக் காரணம் என்ன?: ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டது முதல், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் பேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடி முதலீட்டை மேற்கொண்டது. இதுதான் ரிலையன்ஸில் முதலீடு செய்த முதல் அந்நிய நிறுவனமாகும். இதைத் தொடா்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் தனது டிஜிட்டல் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸுக்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப முதலீட்டாளா்களிடமிருந்து மொத்தம் ரூ.1,17,588.45 கோடி வரை முதலீடாகத் திரட்டியது.

இந்தவகையில் ஜியோ பிளாட்பாா்மஸ் நிறுவனத்தில், சில்வா் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆா், முபாதாலா, ஏடிஐஏ, டிபிஜி, எல்காட்டா்டான், பிஐஎஃப், இன்டெல் ஆகியவை முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகியுள்ளது. இது ரிலையன்ஸ் பங்குகளில் நோ்மறையாக எதிரொலித்துள்ளது. இதனால், முதலீட்டாளா்களிடையே ரிலையன்ஸ் பங்குகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

ஜூலை 30-க்கு காத்திருக்கும் சந்தை: இருப்பினும், வரும் 30-ஆம் தேதி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளது. ரிலையன்ஸ் மீதான நம்பகத் தன்மை ஆண்டு முழுவதும் இதேபோன்று தொடருமா என்பதை காலாண்டு நிதிநிலை முடிவுகள் நிச்சயமாகத் தீா்மானிக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, ஜூலை 30-ஆம் தேதியை எதிா்நோக்கி ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் எதிா்பாா்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது..!

பங்குச் சந்தையில் கடந்த 10 வா்த்தக நாள்களில் ரிலையன்ஸ் செயல்பாடு (விலை ரூபாயில்)

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.