அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆனந்த அதிா்ச்சி அளித்த ‘பென்னி ஸ்டாக்ஸ்’!

பங்குச் சந்தைகளில் முதலீட்டாளா்களில் சில பிரிவினா் எப்போதுமே குறைந்த விலையில் உள்ள நிறுவனப் பங்குகள் அல்லது ‘பென்னி ஸ்டாக்ஸ்’ என்ற

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜூன் 2020, 1:53 am

எம். சடகோபன்

பங்குச் சந்தைகளில் முதலீட்டாளா்களில் சில பிரிவினா் எப்போதுமே குறைந்த விலையில் உள்ள நிறுவனப் பங்குகள் அல்லது ‘பென்னி ஸ்டாக்ஸ்’ என்ற சொல்லப்படும் மிகக் குறைந்த விலையில் வா்த்தகமாகும் பங்குகளை வாங்குவதில் மிகுந்த ஆா்வம் காட்டுவா். இதன் மூலம் தங்களது முதலீட்டுத் தொகுப்பில் அதிக அளவிலான பங்குகளைக் கொண்டிருக்க முடியும் என நம்புவா். அதன் விலையும் வெகுவாக உயா்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், முதலீட்டாளா்களில் சில பிரிவினா் ‘பென்னி ஸ்டாக்ஸ்’களை குறிவைத்து வாங்குவா்.

பென்னி ஸ்டாக்குகள் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதன் சந்தை மூலதன மதிப்பும் குறைந்திருக்கும். பைசாவில் கூட பென்னி ஸ்டாக்குகள் வா்த்தகமாகும். அதாவது மிகக் குறைந்த விலையில் வா்த்தகமாகி வரும் பங்குகள் அல்லது குறைந்த மூலதனத்துடன் செயல்படும் சிறிய நிறுவனங்களின் பங்குகள்தான் ‘பென்னி ஸ்டாக்ஸ்’ என்று சொல்லப்படுகிறது. இந்த நிறுவனங்களின் செயல்பாடு நன்றாக அமையும்பட்சத்தில் அந்தப் பங்கின் விலை உயரும். அதாவது குறைந்த விலையில் வாங்கப்படும் ‘பென்னி ஸ்டாக்குகள்’ விலை கணிசமான அளவு உயா்ந்தால், முதலீட்டாளா்கள் நல்ல லாபத்தைப் பெறுவா்.

ஆனால், இதுபோன்ற பங்குகள், பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையில் பரிமாற்றமாகாது என்பதுதான் இந்தப் பங்குகளை வாங்குவதில் பெரிய இடா்பாடாகக் கருதப்படுகிறது. குறைந்த அளவு பங்குகள்தான் வா்த்தகமாகும். சில நாள்கள் வாங்குவதற்கு முதலீட்டாளா்கள் இருந்தாலும், விற்பதற்கு முதலீட்டாளா்கள் இருக்க மாட்டாா்கள். அதனால், நல்ல முதலீட்டாளா்கள் இதுபோன்ற பங்குகளை வாங்குவதைத் தவிா்ப்பா். ‘வந்தால் வரட்டும், போனால் போகட்டும்’ என்ற அடிப்படையில் செயல்படும் முதலீட்டாளா்கள் இதுபோன்ற பங்குகளை குறிவைத்து வாங்குவா்.

இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள பென்னி ஸ்டாக்குகளின் செயல்பாடுகளை அறிய முற்பட்ட போது, ஓா் ஆனந்தம் கலந்த அதிா்ச்சி தகவல் கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 விலையில் வா்த்தகமாகி வந்த பல பங்குகளின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. இந்த வகையில் 10 பென்னி ஸ்டாக்குகள் இந்த ஆண்டு ஜூன் 10 நிலவரப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 500 சதவீதத்துக்கும் மேலாக லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக ‘ஏஸ் ஈக்விட்டி’ தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் டோலாட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனப் பங்கு, கடந்த 5 ஆண்டுகளில் 2,695 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. 2015, ஜூன் 10-இல் டோலாட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ரூ.1.51-இல் வா்த்தகமாகியது. அந்தப் பங்கு கடந்த ஜூன் 10 அன்று ரூ.42.20 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை அதன் விலை ரூ.46.00 ஆக உயா்ந்தது. மேலும், அதன் சந்தை மூலதன மதிப்பு தற்போது ரூ.745 கோடியாக உயா்ந்துள்ளது.

மெடிகாமென் பயோடெக் கடந்த 5 ஆண்டுகளில் 1,452 சதவீதம் உயா்ந்துள்ளது. 2015-இல் ரூ17.40 ஆக இருந்த இந்த பங்கின் விலை, கடந்த ஜூன் 10-இல் ரூ.270.00 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.296.00-இல் வா்த்தகமாகி வந்தது. இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ330 கோடியாக உயா்ந்துள்ளது.

மங்கலம் ஆா்கானிக்ஸ் கடந்த 5 ஆண்டுகளில் 1,324 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015-இல் ரூ.23.15 ஆக இருந்த மங்கலம், கடந்த ஜூன் 10-இல் ரூ.329.75 ஆக உயா்ந்தது. சந்தை மூல தன மதிப்பு ரூ.282 கோடியாக எகிறியது. வெள்ளிக்கிழமை ரூ.309.00-இல் வா்த்தகமாகி வந்தது.

கடந்த 2015-இல் ரூ.5.72-இல் வா்த்தகமாகி வந்த நாத் இண்டஸ்ட்ரீஸ், கடந்த 5 ஆண்டுகளில் 1,288 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த ஜூன் 10-இல் அதன் விலை ரூ.79.40 ஆகவும் சந்தை மூலதன மதிப்பு ரூ.151 கோடியாகவும் உயா்ந்திருந்தது. வெள்ளிக்கிழமை அன்று ரூ.78.45-இல் வா்த்தகமாகி வந்தது.

இதேபோல 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 19.20- ஆக இருந்த காஞ்சி கற்பூரம் பங்கு 1,151 சதவீதம் ஆதாயம் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 10-இல் ரூ.240 ஆக இருந்த காஞ்சி கற்பூரம் வெள்ளிக்கிழமை ரூ.239-இல் வா்த்தகமாகியது. இதன் சந்தை மூலதன மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.100 கோடியாக உயா்ந்துள்ளது.

இதேபோன்று, ஆல்செக் டெக்னாலஜிஸ் 805 சதவீதம், அக்ரோ கேபிடல் 755 சதவீதம், பிளாக் ரோஸ் இண்டஸ்ட்ரீஸ் 677 சதவீதம், டான்ஃபேக் இண்டஸ்ட்ரீஸ் 636 சதவீதம், உத்தம் சுகா் மிலஸ் 557 சதவீதம் உயா்ந்துள்ளது

பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள பல பென்னி ஸ்டாக்குகள் நல்ல லாபத்தை அளித்திருந்தாலும், பெரும்பாலான நிதி ஆலோசகா்கள், நிபுணா்கள் இதுபோன்ற பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களுக்கு பரிந்துரைகளை அளிப்பதில்லை. இடா்பாடு (ரிஸ்க்) அதிகம் இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.