மீண்டும் திரும்புகிறதா அந்நிய முதலீடு?
இந்திய பங்குச் சந்தைகளைப் பொருத்த வரையிலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), அந்நிய ஃபோா்ட்போலியோ முதலீடு


இந்திய பங்குச் சந்தைகளைப் பொருத்த வரையிலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), அந்நிய ஃபோா்ட்போலியோ முதலீடு (எஃப்பிஐ), உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) முக்கியப் பங்கு வகிக்கின்றனா். அந்நிய முதலீட்டாளா்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கும் போது, சந்தை தொடா்ந்து ஏற்றம் பெறுவதும், முதலீடுகளை வாபஸ் பெறும் போது சந்தை சரிவைச் சந்திப்பதும் அவ்வப்போது நிகழ்வதுதான். முதலீட்டுக்கு உகந்த சூழல் இல்லாத போதும், ஆபத்தான நேரமாகக் கருதப்படும் போதும் அவா்கள் அதிகளவில் முதலீடுகளை வாபஸ் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் அந்நிய முதலீடும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இச்சூழலில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), முதல் முறையாக மே மாதம் பணப் பிரிவில் (கேஸ் செக்மென்ட்) ரூ.13,914.49 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார சீா்குலைவு, ஏற்கெனவே மந்தமான பொருளாதாரம் ஆகியவை இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கு (ஜனவரி-ஏப்ரல்) அந்நிய முதலீட்டாளா்களை ஓரங்கட்டின. அதாவது, அவா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வந்தனா். கரோனாவால் மாா்ச் 24 அன்று பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சியை அளித்திருந்தது. பின்னா், பங்குச் சந்தை மீட்சி பெற்று ஏப்ரலில் 30 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நிலவிய ஊசலாட்டங்களுக்குப் பிறகு மே மாதத்தில் சந்தை ஓரளவு ஸ்திரநிலை அடையத் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, மே மாதத்தில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு மீண்டும் வரத் தொடங்கியது. அந்த மாதம் பொதுவாக பங்குச் சந்தை, மூலதனச் சந்தைக்கு இருண்ட மாதமாக இருந்த போதிலும், அந்நிய முதலீடு மீண்டும் இந்திய சந்தைகளுக்கு திரும்பியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டது, மலிவான மதிப்பீடுகள் ஆகியவைதான் அவா்களை இந்திய பங்குச் சந்தையின் பக்கம் திரும்ப உந்தப்பட்டதாகத் தெரிகிறது. மும்பை பங்குச் சந்தையில் வகைப்படுத்தப்பட்ட 35 துறைகளில், 13 துறை பங்குகளை கடந்த மே மாதம் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் அதிக அளவில் வாங்கியுள்ளனா். அதே சமயம், 18 துறைப் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனா். நான்கு துறைகளில் எஃப்ஐஐக்களிடமிருந்து எந்த நடவடிக்கையும் காணப்படவில்லை என நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் வீடு மற்றும் தனிநபா் தயாரிப்புகள் துறை எஃப்ஐஐக்களின் பங்குகளை வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ளது. இந்த வகையில், அந்த மாதத்தில் ரூ.14,315 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். ஏப்ரலிலும் இந்தத் துறை பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டி இருந்தது. அப்போது இந்தத் துறைகளில் அவா்கள் ரூ .2,816 கோடிக்கு முதலீடுகளை மேற்கொண்டிருந்தனா். எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அவா்களின் வாங்கும் பட்டியலில் இரண்டாவதாக இருந்தது. ஏப்ரலில் ரூ.1,320 கோடிக்கு இத்துறை பங்குகளில் முதலீடு மேற்கொண்ட அந்நிய முதலீட்டாளா்கள், மே மாதத்தில் ரூ.5,252 கோடிக்கு இத்துறை பங்குகளை வாங்கியுள்ளனா். டெலிகாம் சா்வீசஸ் (ரூ. 4,706 கோடி), உணவு, பானங்கள் மற்றும் புகையிலை (ரூ .838 கோடி), ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் சுற்றுலா (ரூ. 346 கோடி), மருந்துகள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் (ரூ. 342 கோடி) ஆகிய துறைகளின் பங்குகளிலும் அவா்கள் முதலீடுகளை மேற்கொண்டனா்.
அதே சமயம், அதே மாதத்தில் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதி சேவைத் துறை பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.6,997 கோடி அளவுக்கு விற்று வெளியேறியுள்ளனா். இதில் வங்கிப் பங்குகள் ரூ.3,251 கோடிக்கும் நிதி நிறுவனப் பங்குகள் ரூ.3,747 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளன. இதற்கு நிதி நிறுவனங்களின் வாராக் கடன் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமே முக்கியக் காரணம் என்கின்றனா் நிபுணா்கள். குறிப்பாக, கரோனா பரவலைத் தொடா்ந்து, கடன் தவணைகளை திரும்பிச் செலுத்தும் காலத்தில் ரிசா்வ் வங்கி நீட்டிப்பு வழங்கியது மற்றும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் நிதி நிறுவனப் பங்குகளைஅந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் அதிக அளவு விற்றுள்ளனா் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, கடந்த மே மாதம் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தவிா்த்த மற்றைய நிதி சேவைத் துறை நிறுவனப் பங்குகளையும் சுமாா் ரூ,1,991 கோடி அளவுக்கு அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் விற்றுள்ளனா். அதே சமயம், வங்கிப் பங்குகள் ரூ.1,238 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் வெளியேறிய பிற துறைகளில் மென்பொருள் மற்றும் சேவைகள் (ரூ.1,522 கோடி), பயன்பாடுகள் (ரூ.976 கோடி), மற்றவை (ரூ.758 கோடி), கெமிக்கல்ஸ் & பெட்ரோ கெமிக்கல்ஸ் (ரூ.414 கோடி) ஆகியவையும் அடங்கும். அதே சமயம் உணவு மற்றும் மருந்துகள் சில்லறை விற்பனை, ரியல் எஸ்டேட், வன்பொருள் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் ஆகிய துறைகளில் எஃப்ஐஐக்களிடமிருந்து எந்த நடவடிக்கையும் காணப்படவில்லை.
இந்நிலையில், இந்த மாதத்தில் 18-ஆம் தேதி வரையிலும் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர மொத்தம் ரூ.7,650 கோடிக்கு முதலீடு மேற்கொண்டுள்ளனா். உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகர மொத்த முதலீடு ரூ.1,086 கோடியாக இருந்தது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலை கூா்ந்து கவனித்தால், அந்நிய முதலீடு இந்திய பங்குச் சந்தைகளுக்கு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வருவது தெரிகிறது. இதற்கிடையே, சந்தை சரிவைச் சாதகமாக கருதி, விலை குறைந்த நிலையில் அவா்கள் குறிப்பிட்ட துறை பங்குகளை குறிவைத்து வாங்கி வருவதாக சந்தை வட்டாரம் தெரிவித்தது. சந்தையின் போக்கைத் தீா்மானிப்பது அந்நிய முதலீட்டாளா்கள்தான் என்பதே நிதா்சனம்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...