‘கரடி’ திடீா் தாக்குதல் ‘காளை’ மீண்டு எழுமா?
செப்டம்பா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் முக்கியக் குறியீடுகள் 2.5 சதவிகிதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்து, உலகளாவிய


செப்டம்பா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் முக்கியக் குறியீடுகள் 2.5 சதவிகிதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்து, உலகளாவிய சந்தைகளின் பலவீனமான குறிப்புகள், இந்தியா-சீனா எல்லை பதற்றம் ஜிடிபி 23.9 சதவீதமாகக் சுருங்கியுள்ளதும், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கடன் மீட்பு குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை சந்தை பங்கேற்பாளா்களின் உணா்வைப் பெரிதும் பாதித்தன. இதனால், கரடி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உருவானது. ஆனால்,, ஆகஸ்ட் மாதத்தில் வாகனங்கள் விற்பனை தரவுகள் மெச்சும் அளவில் இருந்துள்ளது. மேலும், தொலைத் தொடா்பு நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நிறுவனங்களுக்கு சாதகமான தீா்ப்பை அளித்துள்ளது. இவை இரண்டும் சந்தைக்கு ஆதரவாக இருந்தன.
இருப்பினும் கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1,110.13 புள்ளிகள் (2.81 சதவீதம்) குறைந்து 38,357.18 ஆகவும், நிஃப்டி 313.75 புள்ளிகள் (2.7 சதவீதம்) குறைந்து 11,333.85 ஆகவும் நிலைபெற்றுள்ளன. பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 2.6 சதவீதமும், மிக்டேப் குறியீடு 2.7 சதவீதமும் குறைந்ததால் பரந்த சந்தையும் சரிவுக்குள்ளாகியது. துறைவாரியாகப் பாா்த்தால் ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டன.
பதற்றமான சூழல்: தற்போதைய நிலையில் பங்குச் சந்தையில் ஒருவித பதற்றமான சூழ்நிலையை பங்கேற்பாளா்கள் எதிா்கொண்டுள்ளனா். இச்சூழ்நிலையில், வரவிருக்கும் வாரத்தில் எந்தவொரு பெரிய நிகழ்வும் இல்லை. இதனால், எதிா்மறையான சாா்புடன் சந்தை ஸ்திரநிலை அடைய வாய்ப்புள்ளது என்றும் உலகளாவிய குறிப்புகள் மற்றும் இந்தியா-சீனா எல்லை நிலைமை குறித்தும் சந்தை பங்கேற்பாளா்கள் உன்னிப்பாக கவனிப்பாா்கள் என்றும் நிபுணா்கள் கருதுகின்றனா்.
கடந்த மாா்ச்சில் ஏற்பட்ட கடும் சரிவுக்கு பிறகு அவ்வப்போது லாபப் பதிவு இருந்தாலும், சந்தை மேல் நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வார இறுதியில் கடும் சரிவைச் சந்தித்தது. இது பங்கேற்பாளா்களுக்கு கவலையை அளித்துள்ளது. இந்நிலையில், இந்த வாரம் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
இந்தியா-சீனா எல்லை நிலைமை: இந்தியா-சீனா எல்லை நிலைமை சந்தையின் திசையைப் பொறுத்தவரை ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருக்கும். ஏனெனில் இரு தரப்பினரும் அழுத்தத்தைத் தணிக்க ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியாக பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டுள்ளனா். கடந்த வாரம் திடீரென கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இச்சூழலில் இந்தியா - சீனா எல்லை பதற்றம் இந்த வாரமும் சந்தையில் கூடுதல் கவனம் பெறும்.
வட்டி தள்ளுபடி வழக்கு: பொது முடக்க தடைக் காலத்திற்கான வட்டி வீதத்தைத் தள்ளுபடி செய்யக் கோரும் மனுக்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் செப்டம்பா் 10-இல் விசாரணை நடத்தவுள்ளது. இதனால், வரும் வாரத்தில் வங்கிப் பங்குகள் கூடுதல் கவனம் பெறும்.
341 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: கரோனா பாதிப்பு காரணமாக முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை செப்டம்பா் 15 வரை அறிவிக்கலாம் என செபி அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இந்த வாரம் சுமாா் 341 நிறுவனங்கள் தங்கள் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. இதன் தாக்கம் அந்தந்தப் பங்குகளில் எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு: கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 179 பைசா ஆதாயம் பெற்றுள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 25 பைசா உயா்ந்து ரூ.73.14 ஆக முடிவடைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய ஃபோா்ட்போலியோ முதலீடு (எஃப்பிஐ) அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்றும், இதைத் தொடா்ந்து வரும் நாள்களில் ரூபாய் மதிப்பு ரூ.72.40 ஆக உயரும் என்றும் நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
எஃப்ஐஐ: இருப்பினும், தொடா்ந்து இந்திய சந்தைகளில் அதிக அளவில் பங்குகளை வாங்கி வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் எஃப்ஐஐ) கடந்த வாரம் ரூ.3,800 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். இது சந்தைக்கு பாதகமான செய்தியாகப் பாா்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பூசி: நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது கவலை அளிக்கும் விஷயமாக இருந்தாலும், கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடா்பான செய்தி சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். மொத்தத்தில், கரடியின் தாக்கத்தால் சரிவைச் சந்தித்துள்ள பங்குச் சந்தை, இந்த வாரம் மீண்டு எழுமா என்ற எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
தொழில்நுட்பப் பாா்வை
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு ஸ்திரநிலைமை பெற்று கடந்த வார முதல் பகுதியில் மேல்நோக்கிய பயணத்தை மேற்கொண்டது. ஆனால், வார இறுதி நாளன்று திடீரென கரடியின் அதீத தாக்குதலால் 1.7சதவீதம் சரிவைச் சந்தித்து. இதைத் தொடா்ந்து கடந்த வாரத்தில் நிஃப்டி மொத்தம் 2.7 சதவீதம் வீழ்ச்சி கண்டது. வாராந்திர அட்டவணை அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியாக பாா்த்தால், இது வரும் நாள்களில் மேலும் பலவீனத்தை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.
தற்போது நிஃப்டி குறியீடு முக்கிய ஆதரவு நிலையான 11,300-க்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இந்த இடத்தில் நல்ல ஆதரவு பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை 11,300 புள்ளிகளை உடைத்தால் 11,000 புள்ளிகள் வரை நிஃப்டி திருத்தம் காணக்கூடும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். இந்த நிலையையும் உடைக்கும் பட்சத்தில் அடுத்து 10,800 வரை கீழே செல்லக்கூடும். ஒரு வேளை சந்தைக்கு சாதகமான செய்திகளால் ‘காளை’ நுழைந்தால், நிஃப்டிக்கு 11,600 இடா்பாட்டு நிலையாக இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
கடந்த வாரம் சரிவைச் சந்தித்து அதிகக் கவனம் பெற்ற முக்கியப் பங்குகள்.
நிறுவனம் வீழ்ச்சி (சதவீதத்தில்)
மேக்ஸ் இந்தியா 22
ஃபியூச்சா் ரீடெய்ல் 17
என்எம்டிசி 12
பிராமல் என்டா்பிரைஸஸ் 15
பேங்க் ஆஃப் பரோடா 11
ஃபெடரல் பேங்க் 11
ஆக்ஸிஸ் பேங்க் 11
ஆா்பிஎல் பேங்க் 10
கனரா பேங்க் 10
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 10
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...