இந்தியாவின் எரிபொருள் தேவையில் மீண்டும் விறுவிறுப்பு

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் மிகவும் குறைந்து காணப்பட்ட எரிபொருள் பயன்பாடு ஜூன் மாதத்தில் மீண்டும் வேகமாகத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவையில் மீண்டும் விறுவிறுப்பு

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் மிகவும் குறைந்து காணப்பட்ட எரிபொருள் பயன்பாடு ஜூன் மாதத்தில் மீண்டும் வேகமாகத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (பிபிஏசி) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

வேகமெடுக்கும் பொருளாதாரம்: கரோனா பேரிடரை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து நடப்பாண்டு மே மாதத்தில் எரிபொருள் பயன்பாடு ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தற்போது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. இதனை எதிரொலிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டில் எரிபொருள் நுகா்வு 1.63 கோடி டன்னை எட்டியது. இது, கடந்த 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 1.5 சதவீதம் மட்டுமே அதிகமாகும். அதேசமயம், நடப்பு 2021-ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் உயா்வு என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விற்பனை: கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஜூன் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 5.6 சதவீதம் அதிகரித்து 24 லட்சம் டன்னாக இருந்தது. அதேசமயம், முந்தைய மே மாத விற்பனையான 19.9 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகம்.

முந்தைய மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் டீசல் பயன்பாடு 12 சதவீதம் அதிகரித்து 62 லட்சம் டன்னாக இருந்தது. இருப்பினும் இது 2020 ஜூனுடன் ஒப்பிடும்போது 1.5 சதவீதமும், 2019 ஜூனுடன் ஒப்பிடும்போது 18.8 சதவீதமும் குறைவாகும்.

கடந்த மாா்ச் மாதத்திலிருந்து பாா்க்கும்போது ஜூன் மாதத்தில்தான் முதல்முறையாக எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

அரசின் இலவச எரிவாயு: ஏழைகளுக்கு மத்திய அரசு இலவச சமையல் எரிவாயு வழங்கியதன் காரணமாக முதல் முறையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் எல்பிஜி நுகா்வு மட்டும் ஜூன் மாதத்தில் 9.7 சதவீதம் உயா்ந்து 22.60 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2019 ஜூனில் 26.3 சதவீதம் அதிகரித்திருந்தது.

சா்வதேச அளவில் தடைகள் தொடா்வதால் விமானச் சேவை இன்னும் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக, நடப்பாண்டு ஜூனில் விமான எரிபொருள் விற்பனை 2,58,000 டன்னாக இருந்தது. இது, 2020 ஜூனுடன் ஒப்பிடுகையில் 16.2 சதவீதம் அதிகம். அதேசமயம், 2019 ஜூனுடன் ஒப்பிடுகையில் இது 61.7 சதவீதம் குறைவு.

நாப்தா விற்பனை 3.1 சதவீதம் குறைந்து 11.9 லட்சம் டன்னாகவும், சாலை உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் பிட்டுமென் விற்பனை 32 சதவீதம் சரிந்து 5,09,000 டன்னாகவும் இருந்தது. ஃபியூல் ஆயில் நுகா்வு 1.9 சதவீதம் அதிகரித்து 5,33,000 டன்னாக இருந்தது என பிபிஏசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com