கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி மக்களின் விருப்பமாக மாறும் மின்சார வாகனங்கள்; தரவுகள் சொல்வது என்ன?

ஜூலை முதல் செப்டம்பர் வரையில், தில்லியின் பதிவு செய்யப்படும் வாகனங்களில் ஏழு சதவிகிதம் மின்சார வாகனங்களாக உள்ளன.

தில்லியில் தனிப்பட்ட அளவில் பயணம் செய்யும் மக்கள், மின்சார வாகனங்களை நோக்கி செல்வது தெரியவந்துள்ளது. வரலாற்றில் இதுவரை அல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உச்சம் தொட்டது. விலை தினந்தோறும் ஏற்றப்பட்டுவரும் நிலையில், மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இயற்கை எரிபொருள் வாகனங்கள், கலப்பின எரிபொருள் வாகனங்கள் ஆகியவை சேர்ந்து பதிவு செய்யப்படுவதை காட்டிலும் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை முதல் செப்டம்பர் வரையில், தில்லி போக்குவரத்து கழகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் ஏழு சதவிகிதம் மின்சார வாகனங்களாக உள்ளன. பதிவு செய்யப்பட்டவற்றில், 6 சதவிகிதம் இயற்கை எரிபொருன் வாகனங்களாக உள்ளன.

மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுவது அதிகரித்தபோதிலும், தில்லியில் பதிவாகும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களாகவே உள்ளன. ஜூலை முதல் செப்டம்பர் வரை, தில்லியில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் 7,869 மின்சார வாகனங்கள், 6,857 சிஎன்ஜி வாகனங்கள், 7,257 சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயக்கப்படும் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படும் 93,091 வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், "எங்கள் மின்சார வாகனக் கொள்கையின் நல்ல முடிவுகளை நாங்கள் காண்கிறோம். மேலும், இதுபோன்ற வாகனங்களை ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்கு பார்வையின்படி தில்லியை நாட்டின் மின்சார வாகன தலைநகராக மாற்றும் கனவை நனவாக்க உறுதி பூண்டுள்ளோம்" என்றார்.

தில்லி அரசு அதன் மின்சார வாகனக் கொள்கையை ஆகஸ்ட் 2020 இல் அறிமுகப்படுத்தியது. அதன்பின் மொத்த வாகனப் பதிவுகளின் எண்ணிக்கையில் மின்சார வாகனங்களின் பங்கு ஒரு சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாக அதிகரித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களில் பெரும்பாலானவை மின்சார ரிக்‌ஷாக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களே ஆகும்.

ஆனால், மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருவதாக மாநில போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com