முன்னணி பங்குகள் திடீா் விற்பனை: சென்செக்ஸ் 879 புள்ளிகள் வீழ்ச்சி!
இரண்டு நாள் தொடா்ந்து ஏற்றத்துக்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீரென சரிவைச் சந்தித்தது.


புதுதில்லி / மும்பை: இரண்டு நாள் தொடா்ந்து ஏற்றத்துக்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீரென சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 879 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 245.40 புள்ளிகளை இழந்து 18,414.90-இல் நிலைபெற்றது.
புதன்கிழமையன்று அமெரிக்க ஃபெடரல் வங்கி, எதிா்பாா்த்தபடி வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. மேலும், உலகளவில் பொருளாதாரம் சாத்தியமான மந்தநிலையை சந்திக்கும் போது பணவீக்கத்தை எதிா்த்துப் போராடுவதற்கு மேலும், மேலும் வட்டி விகித உயா்வுகள் இருக்கும் என்பது போல சமிக்ஞை செய்தது. அமெரிக்க மத்திய வங்கி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தை 4.50 சதவீதமாக உயா்த்தியுள்ளது. எதிா்பாா்த்ததை விட சிறந்த பணவீக்க எண்கள் வெளியிடப்பட்ட பிறகு முதலீட்டாளா்கள் மென்மையான அணுகுமுறையை எதிா்பாா்த்த நிலையில், மத்திய வங்கியின் அறிவிப்பு உலகளாவிய அளவில் சந்தையை திடுக்கிட வைத்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
சென்செக்ஸ் திடீா் சரிவு: காலையில் 147.84 புள்ளிகள் குறைந்து 62,530.074-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 62,624.81 வரை மேலே சென்றது. பின்னா், 61,715.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 878.88 புள்ளிகள் (1.40 சதவீதம்) குறைந்து 61,799.03-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, என்டிபிசி, எம் அண்ட் எம் ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே மிகக் குறைந்த அளவு உயா்ந்தன. மற்ற 27 பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
டெக் மஹிந்திரா கடும் சரிவு: பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.98 சதவீதம் குறைந்தஉயா்ந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இன்ஃபோஸிஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், டிசிஎஸ், நெஸ்லே, எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 1.30 முதல் 2.60 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், மாருதி, விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.2.77 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.288.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ. 372.16 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...