டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு மூலம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் தனது பலத்தை ரிலையன்ஸ் அதிகரித்துள்ளது.
6 மாதங்களுக்கு முன்பு அறிவித்த இந்த ஒப்பந்தத்துக்கு தற்போது சிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இந்த இணைவின் மூலம் 8.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 72 ஆயிரம் கோடி ரூபாய்) ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியாகாம்18 சேனல்கள் மற்றும் டிஸ்னி இணைகிறது.
இந்தப் புதிய கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் 63.16 சதவிகித பங்கினையும் மீதமுள்ள 36.84 சதவிகித பங்கினை டிஸ்னியும் பெறவிருக்கின்றன. இதில் 2 நேரலை சேவைகளும் 120 தொலைக்காட்சி சேனல்களும் இதில் அடங்கும்.
இந்தப் புதிய நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தலைவராக செயல்படவுள்ளார். டிஸ்னி இந்தியாவின் தலைவர் உதய் சங்கர், உதவி தலைவராகவும் ஆலோசகராகவும் செயல்படுவார்.
கலர், ஸ்டார்பிளஸ், ஸ்டார்கோல்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 என கூட்டு நிறுவனத்தின் சேனல்கள் இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமாக அமையும் என ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஐபிஎல், ஐசிசி, பிபா கால்பந்தாட்ட தொடர், கிரிக்கெட் போட்டிகள், பிரிமீயர் லீக் மற்றும் விம்பிள்டன் ஆகிய விளையாட்டுகளின் பிரத்யேக ஒளிப்பரப்பு உரிமங்களும் இதில் உண்டு.
இந்தியாவின் செய்தி மற்றும் பொழுதுபோக்கு துறையில் இந்த இணைப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.