இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) கடந்த ஜூன் காலாண்டில் 8.7 சதவீத நிகர லாப வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.12,040 கோடியாக உள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 8.7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.11,074 கோடியாக இருந்தது.
எனினும், முந்தைய மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 3.1 சதவீதம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 5.4 சதவீதம் அதிகரித்து ரூ.62,613 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.