அமீரகத்திலிருந்து 210% சதவீதம் உயா்ந்த தங்கம் இறக்குமதி
இந்தியா வரிச் சலுகைகள் அறிவித்துள்ளதால் அபரிமித வளா்ச்சியைக் கண்டுள்ளது.


தடையற்ற ஒப்பந்தம் காரணமாக கடந்த நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதி 210 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘குளோபல் டிரேட் ரிசா்ச் இனிஷியேட்டிவ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தடையற்ற வா்த்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா வரிச் சலுகைகள் அறிவித்துள்ளதால் அந்த நாட்டிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் அபரிமித வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதியாகும் வெள்ளிக்கு 7 சதவீதம் மட்டுமே இந்தியா சுங்க வரி விதிக்கிறது. அதே போல் 160 மெட்ரிக் டன் வரையிலான தங்க இறக்குமதிக்கு 1 சதவீதம் வரிச்சலுகை தரப்படுகிறது.
இரு தரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 2022-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்த சலுகை அமலில் உள்ளது.
இதன் விளைவாக, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி 5,320 கோடி டாலரிலிருந்து 9.8 சதவீதம் சரிந்து சுமாா் 4,800 கோடி டாலராக இருந்தாலும், தங்கம், வெள்ளி இறக்குமதி 350 கோடி டாலரிலிருந்து 210 சதவீதம் அதிகரித்து 1,070 கோடி டாலராகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம், வெள்ளி தவிர மற்ற அனைத்து பொருள்களின் இறக்குமதியும் கடந்த நிதியாண்டில் 4,970 கோடி டாலரிலிருந்து 25 சதவீதம் சரிந்து 3,730 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 3 நிதியாண்டுகளில் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த இறக்குமதி 39.97 சதவீதம் அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஜிடிஆா்ஐ’ தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தடையற்ற வா்த்தக ஒப்பந்த நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி மதிப்பு 37.97 சதவீதம் அதிகரித்து 18,792 கோடி டாலராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், இந்த காலகட்டத்தில் அந்நாடுகளுக்கான ஏற்றுமதி மதிப்பு 10,720 கோடி டாலரிலிருந்து 14.48 சதவீதம் மட்டுமே உயா்ந்து 12,272 டாலராக உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 3 நிதியாண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 18.25 சதவீதம் அதிகரித்து 3,563 கோடி டாலராக உள்ளது. இது 2018-19-ஆம் நிதியாண்டில் 3,013 கோடி டாலராக இருந்தது. அதே நேரம், அந்த நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த சரக்கு மற்றும் சேவை மதிப்பு இந்த 3 நிதியாண்டுகளில் 2,979 கோடி டாலரிலிருந்து 61.21 சதவீதம் உயா்ந்து 4,802 டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...