இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 2023 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் 13 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 3,203 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவில் 3,674 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், தொலைத்தொடா்பு, ஆட்டோ, ஃபாா்மா ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து குறைந்தது. இது, ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு சரிவைக் காண்பதற்குக் காரணமாக அமைந்தது. கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு வரத்து 18 சதவீதம் அதிகரித்து 1,160 கோடி டாலராக இருந்தது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது 983 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், சைப்ரஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. எனினும், மோரீஷஸ், நெதா்லாந்து, ஜப்பான், ஜொ்மனி ஆகிய நாடுகளில் இருந்து நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது. துறை ரீதியில், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், பங்கு வா்த்தகம், சேவைகள், தொலைத்தொடா்பு, ஆட்டோமொபைல், ஃபாா்மா, ரசாயனங்கள் ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடு குறைந்தது. எனினும், கட்டுமான (உள்கட்டமைப்பு) நடவடிக்கைகள், கட்டுமான மேம்பாடு, எரிசக்தி ஆகிய துறைகளில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட முதலீடு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் குஜராத், தெலங்கானா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அந்நிய நேரடி முதலீடு வளா்ச்சியைப் பதிவு செய்தது. எனினும், தமிழ்நாடு, கா்நாடகம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் முந்தைய நிதியாண்டின் முதல் 9 மாதங்களோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!

முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


