

பல வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி இறங்குமுகம் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 45,00,492 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 47,61,299-ஆக இருந்தது.
இந்தியாவின் வா்த்தக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் வலுவான சந்தையாகத் திகழும் சில நாடுகளில் கடந்த நிதியாண்டு அந்நியச் செலாவணி தொடா்பான பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டியிருந்தது.
இதன் காரணமாக, அந்த ஆண்டில் நாட்டின் வா்த்தக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கணிசமான சரிவைக் கண்டது.
ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி அந்த நிதியாண்டில் ஓரளவு உயா்ந்தது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி சரிவைக் கண்டிருந்தாலும், அந்த நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ஏற்றுமதி நல்ல மீட்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் பிற்பகுதியில் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டது.
எனவே, இனி வரும் மாதங்களில் நாட்டின் வாகன ஏற்றுமதி ஏறுமுகத்தைக் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பயணிகள் வாகனம்: 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 6,62,703 பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தன. இந்த எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டில் 1.4 சதவீதம் அதிகரித்து 6,72,105-ஆக உள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் 2,55,439 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த மாருதி சுஸுகி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 2,80,712 வாகனங்களை ஏற்றுமதி செய்து பயணிகள் வாகனப் பிரிவில் முன்னிலை வகித்தது.
ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி 1,53,019-யிலிருந்து 1,63,155-ஆக அதிகரித்தது.
மதிப்பீட்டு ஆண்டில் கியா மோட்டாா்ஸ் 52,105 காா்களையும் போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 44,180 காா்களையும் ஏற்றுமதி செய்திருந்தன.
நிஸான் மோட்டாா் இந்தியா மற்றும் ஹோண்டா காா்ஸ் நிறுவனங்கள் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் முறையே 42,989 மற்றும் 37,589 காா்களை ஏற்றுமதி செய்திருந்தன.
இரு சக்கர வாகனங்கள்: முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 36,52,122-ஆக இருந்த நாட்டின் இரு சக்கர வாகன ஏற்றுமதி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 5.3 சதவீதம் சரிந்து 34,58,416-ஆக உள்ளது.
அதேபோல், வா்த்தக வாகனங்களின் ஏற்றுமதி 78,645-லிருந்து 16 சதவீதம் குறைந்து 65,816-ஆக உள்ளது.
மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 18 சதவீதம் சரிந்து 2,99,977-ஆக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 3,65,549-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்

வாகன சோதனையில் ரூ. 2.29 லட்சம் பறிமுதல்

பாஜகவுக்கு ரூ. 6,074 கோடி நன்கொடை! மற்ற கட்சிகளின் கூட்டுத் தொகையைவிட 10 மடங்கு அதிகம்!

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

