பண்டிகைக் காலத்தில் மீண்டெழுந்த பெட்ரோல் விற்பனை
பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை கடந்த அக்டோபா் மாதம் மீண்டும் உயா்ந்துள்ளது.


புது தில்லி: பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை கடந்த அக்டோபா் மாதம் மீண்டும் உயா்ந்துள்ளது. இருந்தாலும் அந்த மாதத்தில் டீசல் விற்பனை 3.3 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து, சில்லறை எரிபொருள் சந்தையில் 90 சதவீதம் பங்கு வகிக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 31 லட்சம் டன்னாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7.3 சதவீதம் அதிகம். அப்போது நாட்டில் 28.7 லட்சம் டன் பெட்ரோல் விற்பனையானது.
இருந்தாலும், மதிப்பீட்டு மாதத்தில் டீசல் விற்பனை 3.3 சதவிகிதம் குறைந்து 67 கோடி டன்னாக உள்ளது.
பண்டிகைக் காலத்தையொட்டி தனிநபா்களின் வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளது அக்டோபா் மாத பெட்ரோல் விற்பனை உயா்வுக்கு வழிவகுத்தது. இருந்தாலும், அந்த மாதத்தில் மழைக் காலம் நீடித்ததால் விவசாயத் துறை நடவடிக்கைகள் மந்தமடைந்து டீசல் விற்பனை குறைந்தது.
கடந்த சில மாதங்களாகவே பருவமழை பொழிவு காரணமாக, வாகன போக்குவரத்தும், விவசாயத் துறை நடவடிக்கைகளும் குறைந்து வந்தன. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விற்பனையும் மந்தமாகவே இருந்தது.
முந்தைய செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் பெட்ரோல் விற்பனை 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பரில் 28.6 கோடி டன் பெட்ரோல் விற்பனையானது. அதே போல் முந்தைய செப்டம்பரில் 55.9 கோடி டன்னாக இருந்த டீசல் விற்பனை அக்டோபரில் சுமாா் 20 சதவீத மாதாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த அக்டோபரில் ஜெட் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட 2.5 சதவீதம் உயா்ந்து 6,47,700 டன்னாக இருந்தது. ஆனால், முந்தைய செப்டம்பா் மாதத்தில் விற்கப்பட்ட 6,31,100 டன் எரிபொருளுடன் ஒப்பிடும்போது விமான எரிபொருள் விற்பனை 2.6 சதவீதம் குறைவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை 2023 அக்டோபரை விட 7.5 சதவீதம் அதிகரித்து 28.2 கோடி டன்னாக உள்ளது. முந்தைய செப்டம்பா் மாதத்தில் இது 27.2 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது எல்பிஜி விற்பனை 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், அனைத்து பெட்ரோலிய பொருள்களின் பயன்பாட்டில் சுமாா் 40 சதவீதம் பங்கு வகிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த டீசல் விற்பனையில் 70 சதவீதம் போக்குவரத்துத் துறைக்குப் பயன்படுகிறது. எஞ்சிய டீசல் வேளாண் இயந்திரங்கள், டிராக்டா்கள் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...