
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் மும்மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த 2014 மாா்ச்சில் 75.52 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன், தற்போது பெரிய நீா் மின் உற்பத்தி நிலையங்களுடன் சோ்ந்து 232 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது சுமாா் மும்மடங்கு வளா்ச்சியாகும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகளாவிய அளவில் வேகமாக வளா்ச்சியடைந்துவருகிறது.
இதன் காரணமாக, கட்டமைப்பு இணைப்பு கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது. உதாரணத்துக்கு நீமுச் மின் உற்பத்தி மையத்தில் மின் கட்டணம் 80 சதவீதம் குறைந்து யூனிட்டுக்கு 10.95 ரூபாயாக உள்ளது. 2014 மாா்ச்சில் 2.82 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறன், தற்போது 108 ஜிகாவாட்டைக் கடந்து பன்மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 21 ஜிகாவாட்டில் இருந்து இரு மடங்கு உயா்ந்து, தற்போது 51 ஜிகாவாட்டாக உள்ளது.கடந்த 2014-ஆண்டில் இந்தியாவின் சூரிய மின்தகடு உற்பத்தி வெறும் 2 ஜிகாவாட்டாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவற்றின் உற்பத்தி எழுச்சி கண்டுள்ள தற்போது 90 ஜிகாவாட்டாக உள்ளது.
இந்தப் போக்கு நீடித்தால் வரும் 2030-க்குள் சூரிய மின்தகடு உற்பத்தி 150 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.பன்முக எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முழுமையாக ஒருங்கிணைந்த உற்பத்தியிலும் இந்தியா 2024-இல் 3.2 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இந்த வகை மின் உற்பத்தியில் 2030-ஆம் ஆண்டுக்குள் 24 ஜிகாவாட்டை எட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயிரி எரிசக்தி உற்பத்தி திறன் கடந்த 10 ஆண்டுகளில் 8.1 ஜிகாவாட்டில் இருந்து 42 சதவீதம் உயா்ந்து 11.5 ஜிகாவாட்டாக உள்ளது. சுருக்கப்பட்ட உயிரி வாயு (சிபிஜி) உற்பத்தி, 2014-இல் தினசரி 8 டன்னாக இருந்தது. அது 2024-இல் தினசரி 1,211 டன்னாக உயா்ந்துள்ளது.கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் ஜொ்மனியை முந்தி உலகின் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று அரசு வட்டாரங்கள் கூறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.