பங்குச்சந்தை: 6 ஆண்டுகளில் மோசமான பட்ஜெட் நாள்! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு!

பட்ஜெட் அறிவிப்பால் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது பற்றி...
BSE
பங்குச்சந்தை
Updated on
2 min read

மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பங்குச்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,947.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,843.43 புள்ளிகள் குறைந்து 80,722.94 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி அதிகபட்சமாக இன்று 700 புள்ளிகள் வரை சரிந்தது. எனினும் வர்த்தக நிறைவில், நிஃப்டி 593.45 புள்ளிகள் குறைந்து 24,825.45 புள்ளிகளில் நிலை பெற்றது.

துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ஐடி குறியீட்டைத் தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் இன்று சரிவுடன் முடிவடைந்தன. நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்தது. தொடர்ந்து நிஃப்டி உலோகக் குறியீடு 4 சதவீதமும் நிஃப்டி வங்கி, நிதிச் சேவைகள் குறியீடுகள் தலா 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து நிறைவு பெற்றன.

நிஃப்டி 50 பங்குகளில், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி ஆகியவை தலா சுமார் 6 சதவீதம் சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தன. எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், நெஸ்லே இந்தியா, ஐடிசி, டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன.

அதேநேரத்தில் விப்ரோ, டிசிஎஸ், மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகிய பங்குகள் தலா 2 சதவீதம் லாபம் பெற்றுள்ளன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் டிசிஎஸ், சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி தவிர மற்ற நிறுவனங்கள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றும்போது பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக வணிகத்தைக் (Speculative Trading) கட்டுப்படுத்தும் நோக்கில், பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் செலுத்தப்படும் வரியான பங்குகள் பரிவர்த்தனை வரியை(Securities Transaction Tax) உயர்த்தி அறிவித்தார்.

இதன்படி ஃபியூச்சர்ஸ் மீதான வரி 0.02%ல் இருந்து 0.05% ஆகவும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%ல் இருந்து 0.15% ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த வரி உயர்த்தப்பட்டது வர்த்தக முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. வரும் வாரங்களில்தான் இதன் தாக்கத்தை கணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 6 ஆண்டு பட்ஜெட் நாள்களில் இன்றைய நாள் பங்குச்சந்தைக்கு மிகவும் மோசமான நாள் என்று கூறப்பட்டுள்ளது.

BSE
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 'செக்' வைத்த பட்ஜெட்! எஸ்டிடி என்பது என்ன?
Summary

Stock Market: Sensex, Nifty 50 see worst budget day in six years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com