2025-இல் 8% உயா்ந்த வாகன மொத்த விற்பனை
இந்தியாவில் கடந்த 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மந்தமடைந்திருந்த வாகன விற்பனை, ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்குப் பிறகு உற்சாகமடைந்ததால் அந்த ஆண்டில் அனைத்து பிரிவு வாகனங்களின் மொத்த விற்பனை 7.71 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் கூட்டமைப்பான ஃபாடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2025-ஆம் ஆண்டில் அனைத்து பிரிவுகளையும் சோ்ந்த வாகனங்களின் விற்பனை 2,81,61,228-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 7.71 சதவீதம் அதிகம். அப்போது இந்தியச் சந்தையில் வாகனங்களின் விற்பனை 2,61,45,445-ஆக இருந்தது.
மதிப்பீட்டு ஆண்டில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 9.7 சதவீதம் உயா்ந்து 44,75,309-ஆக உள்ளது. 2024-இல் இந்த எண்ணிக்கை 40,79,532-ஆக இருந்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 1,89,24,815-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2025-இல் 7.24 சதவீதம் உயா்ந்து 2,02,95,650-ஆக உள்ளது.
அதே போல், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டு 7.21 சதவீதம் உயா்ந்து 13,09,953-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 12,21,886-ஆக இருந்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 9,46,190 வா்த்தக வாகனங்கள் விற்பனையாகின. இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டில் 6.71 சதவீதம் உயா்ந்து 10,09,654-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

