

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும், வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3.55 லட்சத்துக்கு விற்பனையாகிறது.
இதெல்லாம் நாள்தோறும் மக்கள் கேட்டறிந்து வரும் தகவல்கள்தான். ஆனால், இதுநாள் வரை தங்கம், வெள்ளி விலைகளை விட அதிகமாக இருந்து வந்த பிளாட்டினம் விலை இப்போது எப்படி இருக்கிறது என்று அறியலாம்.
ஜனவரி 23ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் பிளாட்டினம் சென்னையில் ரூ.8,952க்கும், 8 கிராம் பிளாட்டினம் ரூ.71,616க்கும் விற்பனையாகிறது.
ஜனவரி மாதம் முதலே, பிளாட்டினம் விலை படிப்படியாக நாள்தோறும் உயர்வைக் கண்டு வருகிறது.
உலகளவில் பல்வேறு நிலையற்ற காரணிகள் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பதற்றமான சூழல் போன்றவற்றால், அமெரிக்க முடிவுகளுடன் தொடர்பில்லாத சொத்துகளின் விலைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்தான் பிளாட்டினம் விலைகளும் நாள்தோறும் மாறி வருகிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பு, க்ரீன்லாந்து மீது ராணுவம் பயன்படுத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அன்று மட்டும், தங்கம், வெள்ளி விலைகளுடன் பிளாட்டினம் விலையும் குறைந்தது. ஆனால் மீண்டும் அதன் விலை உயர்வு தொடர்ந்தது.
தொடர்ச்சியாக மூன்று மாதங்கள், பிளாட்டினம் விலை உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதம் இந்த விலை உயர்வு 7 சதவிகிதமாக இருந்தது, டிசம்தில் 20 சதவிகிதமாக இருந்த நிலையில், இன்று வரை ஜனவரியில் இந்த விலை உயர்வு 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக தொழிற்சாலை தேவை அதிகரிப்பு மற்றும் உலக நாடுகளிடையே பதற்றம்தான் உள்ளன.
பல்வேறு அரசியல் நடவடிக்கை மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, அமெரிக்க டாலர் பலவீனமடைந்து வருகிறது. இதனால், இதர நாடுகளின் பணத்தில் உலோகங்களை வாங்குவது மலிவாகிறது. இதனால் பலரும் உலோகங்களில் முதலீடு செய்ய முனையும்போது, அதன் விலை உயருகிறது.
மற்றொருபக்கம், தென்னாப்ரிக்காவிலிருந்து 2025ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக பிளாட்டினத்தின் உலகத் தேவையில் 70 சதவிகிதம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், என்ஜின் உற்பத்தி, தொழிற்சாலைகளில் க்ரீன் ஹைட்ரஜன் பயன்பாடு மற்றும் ஃபைபர் ஒளியியலில் பயன்பாடு விரிவடைந்து வருவதால் பிளாட்டினம் தேவை அதிகரித்து விலை உயர்வுக்கு வித்திடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.