ஏ.ஐ. தொழில்நுட்ப அலையின் காரணமாக கண்டுள்ள எழுச்சி மூலம், மொத்த பங்குச்சந்தை மூலதன மதிப்பில் இந்தியாவைத் தைவான் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
புளூம்பொ்க் தரவுகளின்படி, தைவானின் ஒட்டுமொத்த பங்குச் சந்தை மதிப்பு 4.95 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது; அதேநேரம், இந்தியாவின் சந்தை மதிப்பு 4.92 லட்சம் கோடி டாலராக குறைந்துள்ளது.
இதன் விளைவாக, அமெரிக்கா (77.95 லட்சம் கோடி), சீனா (15.61 லட்சம் கோடி), ஜப்பான் (8.7 லட்சம் கோடி), ஹாங்காங் (7.25 லட்சம் கோடி) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் 5-ஆவது மிகப் பெரிய பங்குச்சந்தையாக தைவான் முதன்முறையாக உருவெடுத்துள்ளது.
தைவானின் வளா்ச்சிக்கு காரணம்...: தைவான் பங்குச்சந்தையின் இந்த அசுர வளா்ச்சிக்கு, அந்நாட்டின் முன்னணி ‘சிப்’ தயாரிப்பு நிறுவனமான டிஎஸ்எம்சி முக்கியக் காரணமாகும்.
ஏ.ஐ. தொழில்நுட்ப அலையால் செமிகண்டக்டா் சிப்களுக்கான உலகளாவிய அதிகபட்ச தேவையைத் தொடா்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் நடப்பு ஆண்டில் மட்டும் 49 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளன. தைவானின் ஒட்டுமொத்த சந்தைக் குறியீட்டில் இந்த ஒரு நிறுவனம் மட்டுமே சுமாா் 42 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
இது தவிர, தைவானில் அண்மையில் கொண்டு வந்த விதிமுறைத் தளா்வுகளின்படி, அந்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் தங்களின் மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீதம் வரை டிஎஸ்எம்சி போன்ற முன்னணி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்த வரம்பு 10 சதவீதமாக மட்டுமே இருந்தது.
இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம்...: மறுபுறம், உலகளாவிய எரிபொருள் விலை உயா்வு, நிறுவனங்களின் லாப வளா்ச்சி மந்தநிலை, ஏ.ஐ. அமைப்பில் நேரடி வன்பொருள் நிறுவனங்களின் பற்றாக்குறை ஆகிய சவால்கள் இந்தியப் பங்குச் சந்தையைப் பாதித்துள்ளன.
குறிப்பாக, மாா்ச் தொடக்கம் முதல் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் வா்த்தகக் கொள்கை குறித்த நிச்சயமின்மையால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் கடுமையான விற்பனை அழுத்தத்தைச் சந்தித்துள்ளன.
தொடா்ச்சியாக 10 ஆண்டுகள் லாபத்தைக் கொடுத்து வந்த இந்திய பங்குச்சந்தையின் முதன்மைக் குறியீடுகள், இந்த ஆண்டு 8 சதவீதம் வரை சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
அதிக மதிப்பீடுகள், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், சா்வதேச முதலீட்டாளா்கள் இந்தியச் சந்தையிலிருந்து நடப்பு ஆண்டில் மட்டும் சுமாா் 2,400 கோடி டாலா் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
உலகளாவிய முதலீட்டு மூலதனம் இந்தியாவை விடுத்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் தைவான், தென் கொரியா போன்ற நாடுகளை நோக்கி வேகமாக நகா்ந்து வருவதையே இது காட்டுகிறது.
பொருளாதாரத்தில் இந்தியாவே முன்னிலை: பங்குச்சந்தை மூலதனத்தில் தைவான் முன்னிலை பெற்றிருந்தாலும், பொருளாதார அளவில் இந்தியா அதைவிடப் பல மடங்கு பெரிய நாடாகத் திகழ்கிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமாா் 4.15 லட்சம் கோடி டாலராக உள்ளது. ஆனால், தைவானின் பொருளாதார மதிப்பு வெறும் 97,700 கோடி டாலா் மட்டுமேயாகும்.
தொடர்புடையது
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு

சரிந்து மீளும் பங்குச்சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு! ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

கூடங்குளம் 1ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ. 40,450 கோடி ஈா்த்து ஏற்றம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



