
ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்தியா ரூ.36,000 கோடிக்கு எஃகு இறக்குமதி
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில், இந்தியா ரூ.36,193.9 கோடி மதிப்பிலான முடிவுற்ற எஃகை இறக்குமதி செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில், இந்தியா ரூ.36,193.9 கோடி மதிப்பிலான முடிவுற்ற எஃகை இறக்குமதி செய்துள்ளது.
உலகின் 2-ஆவது பெரிய கச்சா எஃகு உற்பத்தி நாடாக இந்தியா விளங்கும்போதிலும், எஃகு இறக்குமதிக்கான செலவு கடந்த ஆண்டின் ரூ.26,172.6 கோடியுடன் ஒப்பிடுகையில் 38.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக எஃகு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, ஹாட் ரோல்டு சுருள்கள், பட்டைகள், கோல்ட் ரோல்டு சுருள்கள், தகடுகள், ஜிபி, ஜிசி தகடுகள் மற்றும் எஃகு கம்பிகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலகட்டத்தில், நாட்டின் மொத்த முடிவுற்ற எஃகு இறக்குமதி 29.5 சதவீதம் அதிகரித்து, 34.87 லட்சம் டன்னாகப் பதிவாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 26.92 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு ஆண்டு இறக்குமதியில் சீனா, தென் கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, வியத்நாம் ஆகிய 5 நாடுகள் முதன்மையாகப் பங்களித்துள்ளன.
நடப்பாண்டு ஆகஸ்டில் மட்டும் ரூ.7,863.1 கோடி மதிப்பிலான 7.2 லட்சம் டன் முடிவுற்ற எஃகு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் இறக்குமதி செய்யப்பட்ட 6.7 லட்சம் டன்னுடன் (மதிப்பு ரூ.6,377.6 கோடி) ஒப்பிடுகையில் 9 சதவீதம் கூடுதலாகும்.
அதேநேரம், முடிவுற்ற எஃகு ஏற்றுமதியிலும் இந்தியா கணிசமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 34.1 சதவீதம் உயா்ந்து, 29.8 லட்சம் டன்னாக (ரூ.23,646.6 கோடி) அதிகரித்துள்ளது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 22.2 லட்சம் டன்னாக (ரூ.17,911.1 கோடி) இருந்தது. வியத்நாம், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, பெல்ஜியம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உயா்தர எஃகு உற்பத்தியை அதிகரிக்குமாறு உள்நாட்டு நிறுவனங்களை மத்திய அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, உயா் மதிப்புடைய எஃகு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ரூ.6,322 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கடந்த 2021-இல் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டம் (பிஎல்ஐ) தொடங்கப்பட்டு, நிறுவனங்களின் கூடுதல் விற்பனை அடிப்படையில் நிதிச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





