கரைபுரளும் உற்சாகம்...
அம்மா இதுபோல மாதம் ஒரு கூட்டம் நடத்தினால், நம்ம ஆட்சி உறுதி''. இதுதான் இப்போது மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் டயலாக். அ.தி.மு.க. தொண்டர்களின் இந்த திடீர் நம்பிக


அம்மா இதுபோல மாதம் ஒரு கூட்டம் நடத்தினால், நம்ம ஆட்சி உறுதி''. இதுதான் இப்போது மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் டயலாக்.
அ.தி.மு.க. தொண்டர்களின் இந்த திடீர் நம்பிக்கைக்கு காரணம், கடந்த ஜூலை 13-ம் தேதி கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்தான்.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முத்துசாமி தி.மு.க.வுக்கு சென்று விட்டதால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. முகாமே காலியாகி விட்டது என்று சிலர் பேசி வந்தனர். மேலும் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் அங்கு தி.மு.க. மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறினர்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க கொடநாட்டில் இருந்தபோது ஜெயலலிதாவிடம் உதித்த திட்டம்தான், கோவை அ.தி.மு.க. பொதுக்கூட்டம்.
பெரும் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஜெயலலிதா திட்டமிட்டிருந்தாலும், அவரே எதிர்பாராத வகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஜெயலலிதா உற்சாகத்தில் திளைத்தார். விலைவாசி உயர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் இன்றைய எல்லா பிரச்னைகளையும் குறிப்பிட்டு, மாநில அரசை ஜெயலலிதா விளாசித் தள்ளினார்.
கட்டுங்கடங்காத பெரும் கூட்டமும், ஜெயலலிதாவின் உற்சாகமான பேச்சும் ஜெயா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் கோவைக்கு சென்றவர்கள் மட்டுமின்றி, மாநிலமெங்கும் இருந்த அ.தி.மு.க. தொண்டர்களும் கோவை பொதுக்கூட்டத்தின் எழுச்சியைக் கண்டு களித்தனர்.
கோவை பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா எழுப்பிய குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்து, முதல்வர் கருணாநிதி முரசொலியில் பகுதி, பகுதியாக தொடர்ந்து எழுதினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தால் கோவை மாநகரம் குலுங்கியதைவிட, முதல்வர் கருணாநிதி அதிகமாகக் குலுங்கியுள்ளார். அதனால்தான் கோவை பொதுக்கூட்ட குற்றச்சாட்டுகளுக்கு தினமும் அவர் பதிலளித்து வருகிறார் என்றார்.
இவையாவும் இப்போது அ.தி.மு.க. தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2006 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி; 2009 மக்களவைத் தேர்தலில் தோல்வி; 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் தொடர் தோல்வி என அ.தி.மு.க. தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வந்தது.
இதைத்தவிர தீவிர எம்.ஜி.ஆர். விசுவாசிகள் என்றும், அ.தி.மு.க.வின் விசுவாசமிக்க தலைவர்கள் என்றெல்லாம் கருதப்பட்ட அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் தி.மு.க.வில் சேர்ந்ததும், தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்டமான இணைப்பு விழாக்களும் அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழ்நிலையில்தான் கோவை பொதுக்கூட்டம் அ.தி.மு.க. தொண்டர்களிடையே திடீர் எழுச்சியையும், பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவேதான், ""அம்மா இதேபோல் மாதம் ஒரு கூட்டம் நடத்தினால் போதும்'' என்று தொண்டர்கள் பேசிக் கொள்கின்றனர்.
கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை அறிந்ததால்தான், அடுத்து ஆகஸ்ட் 24-ம் தேதி திருச்சியில் பேசப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார் என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. முகாமில் காணப்படும் இந்த உற்சாகம் குறித்து, அதன் தோழமைக் கட்சிகள் மத்தியிலும் மகிழ்ச்சியாகப் பேசப்படுகிறது.
முதலில் அதிமுகதான்!
2011 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி உருவாக்கும் பணிகளை வழக்கம் போல முதலிலேயே தொடங்கிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சமீபத்தில் கோவையில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும், தேர்தல் பணியை கவனியுங்கள் என்று கூறினார்.
அதே வேகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகளையும் தொடங்கிவிட்டார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், பார்வர்டு பிளாக் கதிரவன் உள்ளிட்டோரை தன் வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார். தேர்தல் கூட்டணியில் இக் கட்சிகள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து கூட்டணி வியூகங்களை ஜெயலலிதா வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் அரசு மீது நிறைய குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார் ஜெயலலிதா.
திமுக கூட்டணியைப் பொருத்தவரை ஏற்கெனவே உள்ள கூட்டணி மீது முழு நம்பிக்கை இருப்பதாகவே தெரிகிறது. அதிமுக அணியில் புதிய கட்சிகள் சேரும்போது, சில கட்சிகள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், அவற்றை அரவணைக்கவும் திமுக தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் பணிகளில் எப்போதும் அதிமுகதான் முந்திக் கொள்வது வழக்கம். இப்போதும் அதை நிரூபித்துள்ளார் ஜெயலலிதா.
அணி மாறுகிறதா விடுதலைச் சிறுத்தை?
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 34 ஆயிரம் பணியாளர்கள் பணி நிரந்தரம், வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் பணியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக டாஸ்மாக் பணியாளர்களின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சியில் சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பு அமைப்பான ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு., பா.ம.க.வின் பாட்டாளி தொழிற்சங்க பேரவை ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியும் கலந்து கொள்ளும் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். தொழிலாளர்களின் நலன் கருதி இந்த மாநாட்டில் பங்கேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...