முரண்பாடுகளா... முட்டுக்கட்டைகளா...
முரண்பாடுகளைக் கடந்து, மாநிலத்தின் பொதுப் பிரச்னைகளில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கவே முடியாதா? இது தமிழக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. அண்மையில் முதல்வர் கருணாநிதியும் இதே கருத்தை வலியுறுத


முரண்பாடுகளைக் கடந்து, மாநிலத்தின் பொதுப் பிரச்னைகளில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு
நிற்கவே முடியாதா? இது தமிழக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. அண்மையில் முதல்வர்
கருணாநிதியும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இதற்கு என்னதான் செய்ய வேண்டும்?
டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. எம்.பி.)
மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, பொது பிரச்னைகளுக்காக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலாவது, எல்லா கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும். அதுபோன்ற கூட்டங்களில் கட்சிகள் ஒன்றையொன்று குறை கூறுவதை நிறுத்திக் கொண்டு, மாநிலத்தின் பிரச்னை பற்றியும், அவற்றை தீர்ப்பதற்கான தங்கள் ஆலோசனைகளையும் கூறி அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
தில்லியிலும், பிற மாநிலங்களிலும் காணப்படும் அரசியல் பண்பாடு தமிழகத்திலும் இருக்க வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் ஏக்கமாக உள்ளது. பொதுப் பிரச்னைகளில் மாநிலத்தில் ஒற்றுமையான அணுகுமுறையை ஏற்படுத்த தி.மு.க. எப்போதும் தயாராக உள்ளது. இதற்கு மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
டாக்டர் மைத்ரேயன் (அ.தி.மு.க. எம்.பி.)
பொதுப் பிரச்னைகளில் எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கக் கூடிய அரசியல் பண்பாடு, நாகரிகம் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வெறும் வாயளவில் மட்டுமே கூறி வருகிறார். அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதில் அவர்தான் முன்னுதாரணமாக திகழ வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில், பொதுப் பிரச்னைகளில் கைகோர்த்து செயல்படவோ, அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளவோ தயாராகாத முதல்வர் கருணாநிதி, இப்போது ஊருக்கு உபதேசம் செய்யக் கிளம்பி இருக்கிறார்.
கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைக் கூட பறிக்கக் கூடிய வகையில், அரசை விமர்சிப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். ஒற்றுமைக்கான சூழ்நிலையை கெடுத்த பின்னர், அரசியல் கட்சிகளால் எப்படி ஒன்றுபட்டு நிற்க முடியும்? அடுத்தாற்போல அமைய இருக்கும் எங்கள் ஆட்சியில், கருணாநிதி இந்த விஷயத்தில் ஒரு முன்னுதாரணம் படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்)
தமிழ்நாட்டில் 1967 வரை இருந்த அரசியல் பண்பாட்டை, அதன் பின்னர் காண முடியவில்லை. இங்கு ஆளும் கட்சித் தலைவர்களும் , எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசியலில் மட்டுமல்ல: தனிப்பட்ட முறையிலும் எதிரிகள்தான் என்ற மிக மோசமான கலாசாரம் காணப்படுகிறது.
இதனை மாற்றி, இங்கு ஏற்கெனவே இருந்த அரசியல் பண்பாட்டை மீட்க வேண்டும். இதற்கான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கடமை, மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதிக்கு உள்ளது. எல்லோரும் இதே கருத்தைக் கூறுகின்றனர். ஆனால் நடைமுறை என்று வரும்போது பின்வாங்கி விடுகிறார்கள். அதுதான் வேதனையாக இருக்கிறது.
சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர்)
நீர் தேவைகளுக்கு தமிழகம் அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. ஆனால், இங்கு நிலவும் அரசியல் முரண்பாடுகளால் நதி நீர் பிரச்னைகள் உள்பட நம் மாநிலத்தின் நலன்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்திருக்குமானால், இலங்கையில் இவ்வளவு மிக மோசமான நிலைமை நிச்சயம் ஏற்பட்டிருக்காது. இனிமேலாவது பொதுப் பிரச்னைகளில் ஒன்றுபட்டு நிற்கும் அரசியல் கலாசாரம் இங்கு வர வேண்டும். அதற்கான அழுத்தம் தமிழக மக்களிடமிருந்து வர வேண்டும். இதற்காக மக்களை தயார் செய்ய, ஒரு விழிப்புணர்வு இயக்கத்தின் தேவை இப்போது மிக அதிகமாக உள்ளது.
ஜி. ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்)
பொதுப் பிரச்னைகளில் மக்கள் நலன், மாநில நலன், தேச நலன் ஆகியவற்றை முதன்மையாகக் கருதாமல், தங்கள் கட்சிக்கான அரசியல் நலனை முன்னிறுத்தியே இங்குள்ள சில கட்சிகள் செயல்படுகின்றன. அதுதான் பொதுப் பிரச்னைகளில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தடையாக உள்ளது.
எனினும், பொதுப் பிரச்னைகளில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். எல்லா காலங்களிலும் அதற்கான முன்முயற்சிகளை ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிகள்தான் மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் மீது பழியைப் போடுவதில் அர்த்தம் இல்லை. எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாக நடத்துவதை நிறுத்திக்கொண்டால், பிரச்னை தீர்ந்துவிடும்.
பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க. மாநிலத் தலைவர்)
திராவிட கட்சிகள் என்ற பெயரால் கட்சி நடத்துபவர்களால்தான் தமிழ்நாட்டில் இந்த மோசமான நிலைமை ஏற்பட்டது. இதனை மாற்ற தி.மு.க.தான் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களாவது பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துப் பேச வேண்டும். அவ்வாறு பேசுவதால் இழப்பதற்கு எதுவும் இல்லை.
இதனால் எதையும் இழந்து விடக் கூடிய அளவுக்கு பலவீனமானவர்கள் எந்தக் கட்சியிலும் இல்லை.
பிற மாநிலங்களில் கட்சி கொள்கைகள் வேறாக இருந்தாலும் மாநில நன்மை கருதி பொது பிரச்னைகளில் இணைந்து செயலாற்றுவதை பார்க்க முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...