டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரியாருக்கு விடுதலை

சமூக விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த பெரியாரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படாததால், அவரது எழுத்துகளும், பேச்சுகளும் சிலரிடம் மட்டும் சிறைபட்டு கிடப்பதாக பெரியாரிய சிந்தனையாளர்கள் பலர் கவலைப்பட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:36 pm

வி.தேவதாசன்

சமூக விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த பெரியாரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படாததால், அவரது எழுத்துகளும், பேச்சுகளும் சிலரிடம் மட்டும் சிறைபட்டு கிடப்பதாக பெரியாரிய சிந்தனையாளர்கள் பலர் கவலைப்பட்டு வந்தனர்.

 ஆனால், இப்போது பெரியார் அமைப்புகளிடையே நிலவும் போட்டியின் காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் பெரியாரின் சிந்தனைகள், ஆயிரக்கணக்கான பிரதிகளாகப்  பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளன.

 1925-ம் ஆண்டு முதல் 1938-ம் ஆண்டு வரை "குடி அரசு' இதழில் பெரியார் எழுதிய எழுத்துகள், பேச்சுகளை 27 தொகுதிகளாகத் தொகுத்து, 2008 செப்டம்பரில் வெளியிட பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது. இதற்காக, முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 2 ஆயிரம் பேர் அந்த அமைப்பிடம் பணம் செலுத்தி, பதிவு செய்தனர்.

 எனினும், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை வெளியிடும் பதிப்புரிமை தங்களுக்கு மட்டுமே உள்ளதாகக் கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். அந்த தடையாணையை சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் நீக்கியது. இந்த வழக்கில் வீரமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது,

இதனால் 2 ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீங்கியது. இதனைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் "குடி அரசு' தொகுப்புகளை கடந்த இரு தினங்களாக சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் வெளியிட்டுள்ளது. முன் வெளியீட்டுத் திட்டங்களில் பதிவு செய்தவர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

 மேலும் 27 தொகுதிகளையும் தங்கள் அமைப்பின் இணையதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

 இதற்கிடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற காலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பு அமைப்பான பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் சார்பில் "பெரியார் களஞ்சியம்' என்ற பெயரில் "குடி அரசு' நூல் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த சில மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 இதேபோல் வே.ஆனைமுத்து தலைமையில் செயல்படும் பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மார்ச் மாதம் நடைபெற்ற விழாவில் "பெரியார்  ஈ.வெ.ரா. சிந்தனைகள்' இரணடாம் பதிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அப்போது 20 நூல்கள் வெளியிடப்பட்டன.

 ஆக, பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை. எனினும், பெரியார் அமைப்புகளிடையே நிலவும் போட்டியின் காரணமாக, பெரியாரின் சிந்தனைகள் குறித்த நூல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெளிவந்துள்ளன.

 அமைப்புகளிடையே நிலவும் போட்டியின் காரணமாக நேர்த்தியான தயாரிப்பு, உள்ளடக்கம் போன்றவற்றில் எல்லா அமைப்புகளும் அக்கறை காட்டுகின்றன. மேலும், விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தால் மிகவும் பொறுப்புணர்வுடன் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

 மொத்தத்தில், அமைப்புகளிடையே போட்டி இருந்தாலும், பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வேறுபட்ட முனைகளிலிருந்து பெரியாரின் சிந்தனைகள் குறித்த நூல்கள் கிடைப்பதால், அவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய காலம் என்றால் அது மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.