டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிரம்மாஸ்திரமா, புஸ்வாணமா?

காங்கிரஸýக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்கிற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏவிய அஸ்திரம் இந்திய அரசியலையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அலைக்கற்றை ஊழல் பரபரப்பைவிட ஜெயலலிதாவின் அஸ்திரம் ஏற்படுத்திய ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:16 pm

வி.தேவதாசன்

காங்கிரஸýக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்கிற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏவிய அஸ்திரம் இந்திய அரசியலையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அலைக்கற்றை ஊழல் பரபரப்பைவிட ஜெயலலிதாவின் அஸ்திரம் ஏற்படுத்திய பரபரப்புதான் அதிகம்.

தொலைக்காட்சி பேட்டியில் அவர் தெரிவித்த ஒவ்வொரு வார்த்தையும் அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை நெருக்கடியில் தள்ளுவதற்காகவே அவர் இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தி உள்ளார் என்பது வெட்ட வெளிச்சம்.

ஊழலுக்கு காரணமான தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுதான் இந்த பிரச்னை. ஆனால் ராசாவைப் பதவி நீக்கம் செய்வதால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமானால், அரசைப் பாதுகாக்க நிபந்தனையற்ற ஆதரவை அ.தி.மு.க. அளிக்கும் என்று அவர் சொல்வதுதான் புதிது.

இதை மேலோட்டமாகப் பார்த்தால்,காங்கிரஸ் கட்சியுடன் எவ்வாறேனும் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த அளவுக்கு ஜெயலலிதா இறங்கிச் சென்றுள்ளார் என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தவே ஜெயலலிதா இந்த அஸ்திரத்தை ஏவி உள்ளார். இது பலவீனம் இல்லை; அவரது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தனது இந்த வெளிப்படையான அறிவிப்பால் காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி உடனடியாக ஏற்பட்டு விடாது என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். எனினும், அ.தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு தரும் நிலையில், கறைபடிந்த தி.மு.க. அமைச்சரால் மத்திய அரசு தொடர் நெருக்கடிகளைச் சந்திப்பது தேவைதானா என்ற விவாதத்தை காங்கிரஸ் கட்சிக்குள் உருவாக்குவதுதான் ஜெயலலிதாவின் இப்போதைய நோக்கமாக இருக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஊழல் புகார்களுக்கு உள்ளான காங்கிரஸ் தலைவர்களின் பதவிகளையே பறித்த கட்சித் தலைமை, தி.மு.க. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஆட்சிக்கு நிச்சயம் பாதிப்பில்லை என்று ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். எனவே, ராசா மீதான நடவடிக்கையை இனியும் தள்ளிப்போட முடியாத நிர்பந்தத்துக்கு காங்கிரஸ் தலைமை நிச்சயம் தள்ளப்படும். இதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு என்ற பேச்சும் உள்ளது.

இது உண்மைதான் என்பது போல, காங்கிரஸ் கட்சியும், தி.மு.க. தலைமையும்ஜெயலலிதாவின் அறிக்கை குறித்த தங்கள் கருத்துகளை உடனடியாக தெரிவித்துள்ளன. மத்திய அரசுக்கு ஆதரவு என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பை அலட்சியம் செய்வது போல வெளியில் அக்கட்சிகள் பேசினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடிய அறிவிப்பு அல்ல என்றுதான் இரண்டு கட்சிகளுக்குள்ளும் பேசப்படுகிறதாம்.

இதற்கிடையே, ஒருவேளை அமைச்சர் ஆ. ராசாவை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைமை வற்புறுத்துமானால்,என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து விவாதிக்க தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் ஆ. ராசாவை மட்டுமின்றி, தி.மு.க.வின் அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்யச் சொல்வது; மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவை தி.மு.க. எடுக்கலாம் என்று பேசப்படுகிறது.

அதாவது, ராசா மட்டும் ராஜினாமா செய்தால், அது ஊழல் புகாரை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தால், அது அரசியல் நிர்பந்தம் என்றாகிவிடும்.

அதேபோல் மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதன் மூலம் காங்கிரûஸ அதிமுக நெருங்க விடாமல் தடுக்க முடியும் என்ற யோசனை தி.மு.க. தலைமையிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு நடந்தால் அதுவே ஜெயலலிதாவின் அரசியல் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கும்.

ஒருவேளை இதற்குப் பிறகும் காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், ஜெயலலிதா தனது அடுத்த அஸ்திரத்தைப் பயன்படுத்துவாராம். அது தி.மு.க.வை மட்டுமின்றி காங்கிரûஸயும் சேர்ந்தே தாக்குவதாக இருக்குமாம்.

சுதந்திர இந்தியாவில் நடந்த இவ்வளவு பெரிய ஊழலுக்கு காரணமான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள்தான் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, தானே வீதிகளில் இறங்கி ஜெயலலிதா போராடுவார். இதையும் அவரே தனது தொலைக்காட்சி பேட்டி மூலம் காங்கிரஸ் தலைமைக்கு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஜெயலலிதா வீசியிருப்பது பிரம்மாஸ்திரமா, இல்லை புஸ்வாணமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.