சரியும் தில்லி செல்வாக்கு
ராசா குற்றமற்றவர், அவர் பதவி விலகத் தேவையில்லை என்று நவம்பர் 14-ம் தேதி காலை வரை உரக்கப் பேசிக் கொண்டிருந்த திமுக தலைமைக்கு, மாலை தில்லியிலிருந்து வந்த நெருக்கடியால் அவரைப் பறிகொடுக்க வேண்டிய கட்டாயம


ராசா குற்றமற்றவர், அவர் பதவி விலகத் தேவையில்லை என்று நவம்பர் 14-ம் தேதி காலை வரை உரக்கப் பேசிக் கொண்டிருந்த திமுக தலைமைக்கு, மாலை தில்லியிலிருந்து வந்த நெருக்கடியால் அவரைப் பறிகொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தில்லி அரசியலில் திமுகவுக்கு ஏற்பட்ட பெரும் சரிவாகவே கருதப்படுகிறது.
தனிப் பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸின் சரிவு என்று தொடங்கியதோ அன்றிலிருந்து தில்லியில் மாநிலக் கட்சிகளின் கை ஓங்கத் தொடங்கியது. இதில் மூத்த மாநிலக் கட்சியான திமுகவுக்கு கிடைத்த மரியாதையோ தனி.
வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, தேவகெüடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என எல்லா கூட்டணி அரசுகளிலும் ஒரு மாநிலக் கட்சி மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தது என்றால், அது இந்தியாவிலேயே தி.மு.க.வாகத்தான் இருக்க முடியும்.
தில்லி அரசியல் களத்தில் பிற கட்சிகளால் தி.மு.க. எந்த அளவுக்கு மரியாதையுடன் நடத்தப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
1989-ம் ஆண்டு இறுதியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றது. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவில் செயல்பட வேண்டிய நிலை.
அப்போது தி.மு.க.வின் நிலைமை மோசமானதாக இருந்தது. அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. எனினும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மத்தியில் ஒரு கூட்டணி அரசை உருவாக்கியதில் திமுகவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி, தி.மு.க.வை கெüரவப்படுத்தினார் வி.பி. சிங்.
இன்னொரு சம்பவம் 1997-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது. அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தது. ராஜீவ்காந்தி கொலை சம்பவம் குறித்து விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கை 19.11.1997 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விடுதலைப் புலிகளுடன் தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சி, அமைச்சரவையிலிருந்து தி.மு.க. அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று பிரதமர் குஜ்ராலுக்கு கோரிக்கை விடுத்தது.
தி.மு.க.வை மட்டும் அமைச்சரவையிலிருந்து விலக்கியிருந்தால், காங்கிரஸ் ஆதரவுடன் குஜ்ரால் அரசு நீடித்திருக்க முடியும். ஆனால், தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் கொடுத்த குஜ்ரால், அந்தக் கட்சியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. எனவே, ஆட்சிக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றது. அரசு கவிழ்ந்து, நாடு இன்னொரு தேர்தலைச் சந்தித்தது.
இதேபோல் 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் சரி, 2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும் சரி, மிகுந்த மரியாதையுடன் தி.மு.க. நடத்தப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004 மற்றும் 2009-ல் ஆட்சி பொறுப்பேற்ற போது தான் விரும்பிய துறைகளையும், விரும்பிய எண்ணிக்கையில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவத்தையும் பெறக் கூடிய அளவுக்கு தி.மு.க.வின் வலிமையும் பெருகியிருந்தது.
இந்த சூழலில், சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் நடந்திராத வகையில் |1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதில், மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசாவுக்கு தொடர்பு உள்ளது என்ற புகாரும் தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க.வின் அரசியல் செல்வாக்கை கடுமையாகப் பாதித்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஆ. ராசாவின் செயல்பாடுகள் குறித்து தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத் துறை எழுப்பியிருக்கும் அடுக்கடுக்கான புகார்கள் தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பாதக் கூறப்படுகிறது.
இப்போது ஆ. ராசா ராஜிநாமா செய்திருக்கிறார். நாடாளுமன்ற செயல்பாடுகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே அவர் ராஜிநாமா செய்துள்ளார் என்று தி.மு.க. கூறினாலும், கடும் நெருக்கடி காரணமாகவே ராசா ராஜிநாமா செய்துள்ளார் என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1997-ல் குஜ்ரால் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து வந்து, நாடு இன்னொரு தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டபோது கூட, அமைச்சரவையிலிருந்து விலக தி.மு.க. முன்வரவில்லை. ஆனால் இப்போது, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக தமது அமைச்சரை ராஜிநாமா செய்ய வைத்துள்ளது என்பது ஏற்கும்படியாக இல்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆக, தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க.வின் செல்வாக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற பேச்சும், தனது முந்தைய செல்வாக்கை மீட்டெடுக்க தி.மு.க. என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் இப்போது பரவலாக எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...