பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-14

சிலர் ‘இன்றைக்கு புதன்கிழமை’ என்பதைக்கூட ரசிக்கும்படி சுவையாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் ‘அரை மணிநேரத்தில் ஐம்பது கோடி சம்பாதிப்பது எப்படி?’
Published on
Updated on
6 min read

எதைச் சொல்வதற்கும் ஒரு முறை இருக்கிறது.

சிலர் ‘இன்றைக்கு புதன்கிழமை’ என்பதைக்கூட ரசிக்கும்படி சுவையாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் ‘அரை மணிநேரத்தில் ஐம்பது கோடி சம்பாதிப்பது எப்படி?’ என்பதைக்கூடத் தூக்கம் வரவழைப்பதுபோல் சொல்வார்கள். ‘காசு கெடக்குது, ஒரு தலையணை கொடுங்க’ என்று கேட்கிறவர்கள் கடுப்பாகிவிடுவார்கள்.

எழுத்தும் அப்படிதான். சரியாக எழுதினால் எதையும் படித்துவிடலாம், சொதப்பினால், வாசகர்களின் எரிச்சலைச் சம்பாதித்துக்கொள்ளலாம்.

இதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா? எப்படிப் பேச வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்துகொள்வது எப்படி?

‘ஆசாரக்கோவை’ என்று ஒரு புத்தகம். பெருவாயின்முள்ளியார் எழுதியது. எந்தெந்த விஷயங்களை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்கிற How To Guide என்று சொல்லலாம்.

அதில், ஒரு விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்லக்கூடாது என்று விவரிக்கும் ஒரு பாடல்-

‘விரைந்துஉரையார், மேன்மேல்உரையார், பொய்ஆய

பரந்துஉரையார், பாரித்துஉரையார், ஒருங்குஎனைத்தும்

சில்எழுத்தினாலே பொருள்அடங்கக் காலத்தால்

சொல்லுப செவ்விஅறிந்து.’

முதலில், விரைந்துஉரையார். அதாவது, அவசரமாகச் சொல்லக்கூடாது, வேகமாகப் பேசக்கூடாது, கேட்கிறவர்களுக்கு ஒன்றுமே புரியாது. நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு சொல்லாகத்தான் பேச வேண்டும்.

அடுத்து, மேன்மேல்உரையார். இதற்குப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். உரிய விஷயத்தைச் சொல்லிவிட்டு நிறுத்திவிட வேண்டும். அதற்குமேல் எதையும் சொல்லக்கூடாது என்பது ஒரு பொருள். மிகைப்படுத்தக்கூடாது என்பது ஒரு பொருள்.

சிலர் சொல்லவந்த விஷயத்தை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் பேசுவார்கள் (அல்லது எழுதுவார்கள்). ஒருகட்டத்தில், அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நமக்கு மறந்துவிடும்.

அப்படியில்லாமல், நறுக்குத்தெறித்தாற்போல, கச்சிதமாக விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் விலை உண்டு என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

மூன்றாவது, பொய் பேசக்கூடாது. நடந்ததை நடந்தபடி சொல்ல வேண்டும். கேட்பவர்கள் மகிழ்வார்கள் என்பதற்காகவோ, அவர்களிடம் ஏதாவது லாபம் பெறுவதற்காகவோ உண்மையை மாற்றிப் பேசக்கூடாது.

அடுத்து, சில் எழுத்து. ஐஸ் வைக்கிற பேச்சு அல்ல, சில எழுத்துகள், சில சொற்கள். அதற்குள், சொல்லவந்த விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். நீட்டி முழக்கக்கூடாது. (இந்த உரைகூட நீட்டி முழக்குவதுதான். மேலே இருக்கிற பாடல் நாலே வரியில் இத்தனையையும் சொல்லிவிடுகிறதே! அதனால்தான் கவிதையில் சொற்சிக்கனத்துக்குப் பெருமை!)

அடுத்து, அவர்கள் தாங்கள் பேசும் சூழ்நிலையைப் பார்த்து அதன்படி தங்கள் பேச்சை அமைக்க வேண்டும். கேட்கிறவர்களின் மனோநிலை, புரிந்துகொள்ளும் திறன், உணர்வுகள் போன்றவற்றைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்.

நல்ல சொல்வன்மைக்கு உதாரணமாகப் பலரும் ‘கண்டேன் சீதையை’ என்ற வரியைக் குறிப்பிடுவார்கள். உண்மையில் அப்படி ஒரு வாக்கிய அமைப்பு கம்பராமாயணத்தில் இல்லை. என்றாலும், அது ஒரு சுவாரஸ்யமான சொற்றொடர்.

ராமன் தனது மனைவியைத் தேடிக்கொண்டிருக்கிறார். அந்தப் பணிக்காக அனுமனையும் பலரையும் அனுப்புகிறார். சிலர் திரும்பி வருகிறார்கள். அனுமன் வரவில்லை. ராமன் சொன்ன தேதி கடந்து சில நாள் கழித்து அவர் வருகிறார். இப்போது அவர் தன்னுடைய செயல் காயா பழமா என்று ராமனிடம் சொல்ல வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், அவர் ‘கண்டேன் சீதையை’ என்று சொன்னதாக எடுத்துக்கொள்வோம். ஆசாரக்கோவை சொல்லும் விஷயங்கள் இங்கே பொருந்திப்போகின்றன, நிதானமாக, எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல், உண்மையை உள்ளபடி சொல்லி விஷயத்தைப் புரியவைத்துவிடுகிறார். முக்கியமாக, மனைவியைக் காணவில்லை என்ற பதற்றத்தில் இருக்கும் ராமனின் மனோநிலையைப் புரிந்துகொண்டு, தன்னுடைய வீர சாகசங்களையெல்லாம் விட்டுவிட்டு, Result-ஐ (கண்டேன்) முதலில் சொல்வதாக அமைத்திருப்பது அருமையான உத்தி.

கம்பராமாயணத்தில் இந்த இடத்தில் அமைந்திருக்கும் பாடலைப் பார்த்தால், இன்னும் சில ரசங்களைப் புரிந்துகொள்ளலாம் –

‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்,
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்,
அண்டர்நாயக! இனி துறத்தி ஐயமும்
பண்டுஉள துயரும்’.

இங்கேயும், அனுமன் ‘கண்டனென்’ என்றுதான் தொடங்குகிறான். தேடலின் பலனை முதலில் சொல்லிவிடுகிறான். கூகுளில் நாம் ஒரு சொல்லைத் தேடும்போது, ‘5000 Results Found' என்று சொல்லிவிட்டு, பிறகு அந்த Results என்னென்ன என்று பட்டியலிடுவதைப்போல, முதலில், ‘கண்டனென்’. அதன்பிறகுதான் எதைக் கண்டனென் என்கிற விவரம்.

இதன் நோக்கம், ‘நான் கண்டேன்’ என்று பெருமையடித்துக்கொள்வது அல்ல. கூகுளில் சொல் தேடுபவருக்கு இந்தச் சொல்லின் விளக்கம் இணையத்தில் இருக்குமா என்கிற பதற்றம். ராமனுக்குச் சீதை எங்கே என்கிற பதற்றம். ஆகவே, ‘கண்டுபிடிச்சாச்சு’ என்று முதல் அறிவிப்பு. அதன்பிறகு மற்றதெல்லாம்.

யாரைக் கண்டுபிடிச்சாச்சு?

அது ராமனுக்கே தெரியும். அனுமனுக்கும் தெரியும். கூகுளில் தேடுபவருக்கும் தெரியும். இருந்தாலும், வாக்கிய அமைப்பு நிறைவுபெற வேண்டுமல்லவா? அதற்காக, ‘கண்டேன் சீதையை’, அல்லது கவித்துவமாகச் சொன்னால், ‘கண்டனென் கற்பினுக்கு அணியை’.

அடுத்து, ‘கண்களால்’ என்கிறான். அதாவது, சீதை இங்கே இருக்கிறாள் என்று இன்னொருவர் சொல்லி நான் கேட்கவில்லை, நானே என் கண்களால் கண்டேன் என்கிறான்.

இன்றைய இணையத்தின் ஃபோட்டோஷாப் புரட்சியில், கண்ணால் கண்ட எதையும் நம்ப இயலுவதில்லை. நல்லவேளையாக, அனுமனுக்கு அந்தப் பிரச்னை இல்லை, அவன் சீதையை நேரிலேயே கண்டுவிட்டான்.

அடுத்த கேள்வி, எங்கே கண்டாய்?

கூகுள் தான் கண்ட விடைகளை URL மூலம் காட்டுகிறது. அனுமன் GPS துல்லியத்துடன் வழி சொல்கிறான். ‘தென்திசையில் உள்ள இலங்கையில் கண்டேன்’.

சரி, அவளை எப்படிக் கண்டாய்? நலமாக இருக்கிறாளா?

‘சீதைக்கு என்ன ஆயிற்றோ என்கிற கவலையை விடு, துயரத்தை விடு’ என்று இதற்குப் பதில் சொல்கிறான் அனுமன். அதாவது, சீதை நலம்.

இதை இரண்டு சொல்லில் குறிப்பிட்டிருக்கலாமே, ஏன் நீட்டி முழக்க வேண்டும்?

‘சாப்பிடறதுக்கு என்ன இருக்கு?’ என்ற கேள்விக்கு ஹோட்டலில் ஒரு சர்வர் சொல்லும் பதிலுக்கும், வீட்டில் அம்மாவோ மனைவியோ சொல்லும் பதிலுக்கும் வித்தியாசம் உண்டு. முதல் ஆள், உணவு வகைகளை இயந்திரத்தனமாகப் பட்டியலிடுவார், இரண்டாவது நபர் அதேபோன்றதொரு பட்டியலைச் சொல்லும்போது, அதில் நீங்கள் பசியாற வேண்டும் என்கிற உணர்வும் கலந்திருக்கும்.

அனுமனின் நிலையும் அதுதான். அவர் ஒன்றும் சீதையைத் தேடச்சென்ற ரோபோ இல்லை. ராமன் மீதும், சீதை மீதும் அளவற்ற அன்பு வைத்திருப்பவர். சீதை நலம் என்பதை அவர் நேருக்கு நேர் பார்த்துவிட்டார். இப்போது அந்த விஷயத்தை ராமனுருக்குத் தெரிவிக்கும் அதே நேரத்தில், அதைக் கேட்டு ராமனும் நலமாக வேண்டும் என்ற உணர்வு அவருக்குள் இருக்கிறது. அதனால்தான், இயந்திரத்தனமாக விஷயத்தைச் சொல்லாமல், அதன்மூலம் ராமன் துயரம் தீர வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

இதைத்தான், ‘செவ்வி அறிந்து’ என்கிறது ஆசாரக்கோவை. அதாவது, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பேசுவது.

அனுமன் சொன்னதாகக் கம்பன் சொன்னதை நாம் இப்படி ரசித்து அனுபவிக்கலாம். அல்லது, ‘கண்டேன் சீதையை’ என்று சுருக்கமாகச் சொன்ன பாமர அழகை வியக்கலாம். அதைவிட முக்கியமாக, நாம் சொல்லவரும் விஷயத்தை நீட்டி முழக்காமல், சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல இயலுகிறதா என்று பார்க்கலாம்.

ஒருவேளை, நம்மிடம் பேசவருகிறவர் அதுபோல் சுருக்கமாகப் பேசாமல் நீட்டி முழக்கினால் என்ன செய்வது?

‘கோபப்படாதீர்கள்’ என்கிறார் திருவள்ளுவர். ‘எல்லாரும் உங்களைப்போல் சுருக்கமாகப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் பேசும்போது, பிறர் விரும்பும்படி கச்சிதமாகப் பேசுங்கள். மற்றவர்கள் பேசும்போது, அதில் இருக்கும் குற்றத்தைப் பார்க்காமல், விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’.

‘வேட்பத் தாம்சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசுஅற்றார் கோள்’

இங்கே ‘பயன்கோடல்’ என்ற சொல்தான் மிக முக்கியமானது. பயன் கருதி எடுத்துக்கொள்ளுதல். அதாவது, அவர்களுடைய பேச்சில் எது முக்கியம் என்று கவனித்து, அதைமட்டும் பயன்படுத்தலாம். குறைகளைக் கவனிக்க வேண்டாம்.

ஆனால், இந்த விஷயம் நமக்குப் பொருந்தாது. ‘வேட்பத் தாம்சொல்லி’ என்று திருவள்ளுவர் குறிப்பிடுவதன் பொருள், ‘பிறர் கேட்க விரும்பும்படி நாம் பேச வேண்டும்’. அந்தப் பொறுப்பு நம்முடையது.

ஏன் அப்படி? நாம் அவர்களுடைய பேச்சின் குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல, அவர்கள் நம்முடைய பேச்சின் குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கட்டுமே!

அப்படி நினைத்தால், ஒட்டுமொத்த உலகமும் வீண்பேச்சால் நிறைந்துவிடும். எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். அதைத் தெரிந்துகொண்ட நாம் சரியாகத்தான் பேச வேண்டும். பாரதியார் குறிப்பிடுவது -

‘சொல்வது தெளிந்துசொல்,

மெல்லத் தெரிந்துசொல்’

நாம் என்ன சொல்கிறோம் என்பதில் நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும். அதை நாம் நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் அதனைப் பேச வேண்டும்.

மனிதனுக்கு அழகே அவனுடைய சொல்தான் என்கிறது சிறுபஞ்சமூலம். காரியாசானின் அந்தப் பாடல் –

‘மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின்வனப்பும்
உகிர்வனப்பும் காதின்வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின்வனப்பும் வனப்புஅல்ல, நூற்குஇயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு’

ஒருவருடைய சிகையலங்காரம், கம்பீரமான மார்பு, கைவிரல் நகத்தின் அழகு, காதின் அமைப்பு, பல்லின் ஒழுங்கு போன்றவற்றையெல்லாம் அழகு என்று நம்பாதீர்கள். உண்மையான அழகு, ஒருவர் பல நூல்களைக் கற்று, அதன்மூலம் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும்போதுதான் வருகிறது.

கிட்டத்தட்ட, இதேபோன்ற கருத்தைச் சொல்லும் இன்னொரு பாடல், நான்மணிக்கடிகையில் விளம்பிநாகனார் எழுதியது –

‘கந்தில் பிணிப்பர் களிற்றை, கதம்தவிர
மந்திரத்தால் பிணிப்பர் மாநாகம், கொந்தி
இரும்பில் பிணிப்பர் கயத்தை, சான்றோரை
நயத்தில் பிணித்துவிடல்’

யானையைக் கட்டிப்போடுவதற்குக் கட்டுத்தறி இருக்கிறது. பாம்பைக் கட்டிப்போடுவதற்கு மந்திரம் இருக்கிறது. யாராவது கெட்டவன் அகப்பட்டால் அவனை அடித்துக் கட்டிப்போடுவதற்கு இரும்புத்தூண் இருக்கிறது. அதுபோல, நல்லவர்களைக் கட்டிப்போடுவதற்கு, நயமான சொல்தான் இருக்கிறது.

ஆக, நல்ல சொல்லால் நல்லவர்களை ஈர்க்கலாம், நமது நண்பர் வட்டத்தைப் பெரிதாக்கலாம்.

இதற்குமாறாக, சில நேரங்களில் வன்சொல்லும் இனிதாகத் தோன்றும். அது எப்போது?

மனத்தில் குற்றமில்லாதவர்கள் வன்சொல் சொன்னால், அவர்கள் நம்முடைய நலன் கருதியே அப்படிச் சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். அப்போது, அந்த வன்சொல்லையும் நாம் இன்சொல்லாகவே நினைக்க வேண்டும்.

மற்றவர்கள், அதாவது மனத்தில் குற்றமுள்ளவர்கள். ஏதோ உள்நோக்கத்துடன் பேசுகிறவர்கள். இன்சொல்லே பேசினாலும், அதை விரும்பக்கூடாது.

சிவப்பிரகாசர் எழுதிய ‘நன்னெறி’ப் பாடலொன்று இதனைக் குறிப்பிடுகிறது –

‘மாசுஅற்ற நெஞ்சுஉடையார் வன்சொல்இனிது, ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிதுஎன்க, ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதல், ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு’

அழகிய நெற்றியைக்கொண்ட பெண்ணே, குற்றமில்லாத நெஞ்சுள்ளவர்கள் வன்சொல் சொன்னாலும் அவை இனியவையே. மற்றவர்கள் இன்சொல் சொன்னாலும் அவை மோசமானவையே.

பரமசிவன் மீது சாக்கியநாயனார் கற்களை எறிந்தார். மன்மதனோ மலர் அம்புகளை எறிந்தான். சிவன், சாக்கியநாயனாரை விரும்பினார். மன்மதனை எரித்தார். ஏன்?

சாக்கியநாயனார் கல்லை எறிந்தாலும், அவர் மனத்தில் மாசு இல்லை. மன்மதன் மலரை எறிந்தாலும், அவனுக்குச் சிவனின் தவத்தைக் கெடுக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் இருந்தது.

அதுபோல, நாமும் சொல் வன்மையானதா இனிமையானதா என்று பார்க்கக்கூடாது. சொல்கிறவருடைய உள்ளக்கருத்து என்ன என்பதைப் பார்த்து அதன்படி நடக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு கோணமும் உண்டு. ஒருவரிடம் பேசும்போது, வேண்டுமென்றே நமது உள்நோக்கத்தை மறைத்து இனிமையாகப் பேசக்கூடாது. அதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டால், அந்த உறவு மிகவும் பாதிக்கப்படும்.

அதேபோல், நமக்குப் பிடித்தவர் என்பதற்காக, அந்த நட்பைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, அவர்கள் ஏதேனும் பிழை செய்யும்போது சுட்டிக்காட்டத் தயங்கக்கூடாது. அப்போது நாம் சொல்லும் வன்சொல் அவர்களுக்கு இனியது என்று புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, கிடைத்தது சான்ஸ் என்று அவர்களைக் கண்டபடி திட்டித் தள்ளிவிடக்கூடாது. அதையும் நாசூக்காகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சண்டைதான் வரும். கொன்றைவேந்தனில் ஔவையார் சொல்கிறார் –

‘கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை’

பிறர் மீது பழிச்சொற்களைச் சொன்னால், அவர்களோடு பகை உண்டாகும். அப்படியானால், வேறு எப்படிச் சொல்வது?

அதையும் ஔவையாரே சொல்கிறார், ‘ஆத்திசூடி’யில் –

‘சுளிக்கச் சொல்லேல்,
பிழைபடச் சொல்லேல்,
மிகைபடச் சொல்லேல்,
மொழிவது அற மொழி’

கேட்பவர்கள் முகம் சுளிக்கும்படி சொல்லக்கூடாது. பிழையாக எதையும் சொல்லக்கூடாது. மிகையாகச் சொல்லக்கூடாது. சந்தேகம் வரும்படி பூசி மெழுகக்கூடாது. இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டு, நண்பர்கள் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டவும் வேண்டும்!

எந்தச் சந்தர்ப்பத்திலும் பிறருக்குத் தீமைதரும் சொற்களைச் சொல்லிவிடக்கூடாது. ‘ஏலாதி’யில் கணிமேதாவியார் சொல்கிறார் –

‘கொல்லான், கொலைபுரியான், பொய்யான், பிறர்பொருள்மேல்
செல்லான், சிறியார்இனம் சேரான், சொல்லும்
மறையில் செவிஇலன், தீச்சொல்கண் மூங்கை
இறையில் பெரியாற்கு இவை’

பெரியவர்களுடைய குணங்கள் என்னென்ன தெரியுமா? கொலை செய்யமாட்டார்கள்., பிறர் கொலை செய்தால் அதற்கு இணங்கமாட்டார்கள். மற்றவர்களுடைய பொருள் மீது ஆசைப்படமாட்டார்கள். சிறியவர்களோடு சேரமாட்டார்கள். யாராவது ரகசியம் பேசினால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள். தீயசொற்களைப் பேச வேண்டிய சூழ்நிலை வந்தால், ஊமையாகிவிடுவார்கள்.

கிட்டத்தட்ட காந்தியின் மூன்று குரங்குகள் மாதிரிதான். ஆனால், கொலை செய்வதையும் தீயசொல் பேசுவதையும் ஒரே தளத்தில் வைக்கிறது இந்தப் பாடல்ழ. இரண்டுமே பெரியவர்கள் செய்யாத குற்றங்கள்!

பேச்சைப்போலவே, எழுத்திலும் செய்யக்கூடாதவை என்று ஒரு பட்டியலைத் தருகிறது தொல்காப்பியம். இதில் உள்ள விஷயங்கள் பல பேச்சுக்கும் பொருந்தும் –

‘கூறியதுகூறல், மாறுகொளக்கூறல்,

குன்றக்கூறல், மிகைபடக்கூறல்,

பொருள்இலகூறல், மயங்கக்கூறல்,

கேட்போர்க்கு இன்னா யாப்புஇற்று ஆதல்,

பழித்த மொழியான் இழுக்கம்கூறல்,

தன்னான் ஒருபொருள் கருதிக்கூறல்,

என்னவகையினும் மனம்கோள்இன்மை’

சொன்னதையே சொல்லக்கூடாது. சொன்னதை மாற்றிச் சொல்லக்கூடாது. குறைவாகச் சொல்லக்கூடாது (உண்மையை மறைக்கக்கூடாது). மிகைப்படுத்தவும்கூடாது. பொருளில்லாமல் பேசக்கூடாது. பொருள் குழப்பம் வரும்படி பூசி மெழுகக்கூடாது. கேட்பவர்களுக்குக் கெட்டது விளையும்படி ஒழுங்கின்றிப் பேசக்கூடாது. ஒருவரைப் பழித்துப் பேசக்கூடாது. தானே கற்பனை செய்து எதையாவது பொய்யாகச் சொல்லக்கூடாது. கேட்பவர்கள் மனத்தில் பதியாதபடி பேசக்கூடாது.

ஒரு சாதாரணப் பேச்சுக்கு இத்தனை நெறிமுறைகளா?

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? மனிதன் ஆவதும் பேச்சால், கெடுவதும் பேச்சால்தான் என்கிறார் திருவள்ளுவர் –

‘ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு’

சொல்லில் சோர்வு வராவிட்டால் போதும், எல்லா வளங்களும் தேடிவரும்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com