முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பார்கள்.
ஆனால், முயற்சி இருந்தால்மட்டும் போதாது, அதோடு இன்னொன்றை நீக்கவேண்டும். அந்த இரண்டும் சேர்ந்திருந்தால், அது முயற்சியைச் சாப்பிட்டுவிடும்.
அது என்ன? பழமொழிநானூறில் முன்றுறையரையனார் சொல்கிறார்:
'வேளாண்மை செய்து விருந்துஓம்பி வெஞ்சமத்து
வாள்ஆண்மையாலும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடிகோள்இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று.'
இங்கே வேளாண்மை என்பது, விவசாயம் அல்ல, பிறருக்குச் செய்கிற உபகாரம்.
ஒருவர் மற்றவர்களுக்குத் தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்யவேண்டும், தன் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் வரவேற்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து தரவேண்டும்.
போர் வந்தால், அவர்கள் ஆண்மையுடன் வாளேந்திச் சண்டையிடவேண்டும், அதில் தங்களுடைய வலிமையைக் காட்டவேண்டும்.
முக்கியமாக, முயற்சியைக் கெடுக்கிற சோம்பல் இருக்கக்கூடாது. அது இருந்தால், எப்பேர்ப்பட்ட எண்ணமும் செயலாக மாறாது. ஆகவே, சோம்பலை நீக்கவேண்டும்.
இதையெல்லாம் ஒருவன் செய்யாவிட்டால், அவனுடைய வாழ்க்கை திருந்தாது, எப்போதும் அதே மாதிரிதான் இருக்கும், முன்னேற்றம் வேண்டுமென்றால், பிறருக்கு உதவுங்கள், விருந்தினரைக் கவனியுங்கள், போரில் வலிமையைக் காட்டுங்கள் (அதாவது, உங்கள் வேலை என்னவோ அதைத் திறமையோடு செய்யுங்கள்), முயற்சிகளைத் தொடங்குங்கள், சோம்பலை உதறுங்கள்.
சோம்பல்பற்றித் திருவள்ளுவரும் இதையேதான் சொல்கிறார்:
‘மடியை மடியா ஒழுகல், குடியைக்
குடியாக வேண்டுபவர்.'
உங்கள் குடும்பம் சிறக்கவேண்டுமா? சோம்பல் கொள்ளச் சோம்பல்படுங்கள் என்கிறார்.
என்ன அழகான கருத்து! ‘சோம்பலாயிருக்கு’ என்று சொல்வதற்கு ஒருவன் சோம்பல்படுகிறான் என்றால், அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன, அவற்றைச் செய்துகொண்டிருக்கிறான், அதற்கு நடுவே சோம்பலை அனுபவிக்க அவனுக்கு நேரமில்லை என்று பொருள். அந்த மனப்பாங்கு உள்ளவனுடைய முயற்சிகள் நல்லமுறையில் நிறைவேறும்.
சோம்பலுக்குச் சில சிநேகிதர்கள் உண்டு, அவர்களையும் சேர்த்து வெளியே அனுப்பிவிடுவது வீட்டுக்கு நல்லது.
யார் அந்தச் சிநேகிதர்கள்? அதையும் திருவள்ளுவர் சொல்கிறார்:
‘நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.'
கெட்டபாதையில் செல்கிறவர்கள் விரும்பி ஏறுகிற வாகனங்கள் நான்கு அவை: ஒருவேலையைச் சொன்ன நேரத்தில் செய்யாமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம்.
இதனை நாம் நிஜவாழ்க்கையில் அப்படியே பொருத்திப் பார்க்கலாம். அலுவலகத்தில் தனக்குத் தரப்படும் வேலையைச் சரியாகச் செய்து பெயர் வாங்குகிறவர்களிடம் இந்த நான்கு குணங்களும் இருக்காது: சொன்னதைச் சொன்ன நேரத்தில் செய்வார்கள், ‘இதை மறந்துட்டேனே’ என்று பல்லிளிக்க மாட்டார்கள், வேலையைச் செய்யாமல் சோம்பியிருக்கமாட்டார்கள், தூங்கமாட்டார்கள் (அதாவது, வேலை செய்கிற நேரத்தைவிட அதிகமாக ஓய்வெடுக்கமாட்டார்கள்!)
வள்ளலார் சொல்கிறார்:
‘கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல்முதலிய தீமைகள் ஆகா.'
அந்தப் பட்டியலைக் கவனியுங்கள், கொலையில் ஆரம்பிக்கிறார், அது குற்றம் என்று எல்லாருக்கும் தெரியும், சட்டென்று கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் என்று மென்மையான குற்றங்களைப் பட்டியலிட்டு, அனைத்தையும் தீமைகள் என்று சொல்லிவிடுகிறார்.
கொலையுடன் ஒப்பிடும்போது, சோம்பலோ கோபமோ பொய் பேசுவதோ சட்டப்படி குற்றங்கள் அல்ல, ஆனால், அவை நம்மைக் கெடுக்கக்கூடிய தீமைகள், அவற்றை எண்ணி அஞ்சவேண்டும், நெருங்கக்கூடாது, நல்ல மனத்துக்குக் கொலையும் சோம்பலும் ஒரேமாதிரி குற்றங்கள்தான்.
‘இளமையில் சோம்பல், முதுமையில் வருத்தம்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது சோம்பியிருந்தால், வேலை நடக்காது, சம்பளம் வராது, வங்கிக்கணக்கில் பணம் சேராது, பின்னர் வருத்தத்துடன் வாழவேண்டும். அதற்குப்பதிலாக, இப்போது சோம்பலை விரட்டினால், எல்லா வளங்களும் கிடைக்கும், வயதானபின் மகிழ்ச்சியாக வாழலாம்.
கலித்தொகைப் பாடலொன்றில் இந்தக் கருத்தை அழகுறச் சொல்கிறார் பாலைபாடியபெருங்கடுங்கோ:
‘மடிஇலான் செல்வம்போல் மரன் நந்த, அச்செல்வம்
படிஉண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிஞிறு ஆர்ப்ப...'
ஒரு மரம், அதில் பூக்கள் நிறைந்திருக்கின்றன, அவற்றின்மீது வண்டுகள் மொய்க்கின்றன.
அந்த மரத்தை, சோம்பலில்லாதவனுடைய செல்வத்துக்கு ஒப்பிடுகிறார் கவிஞர். ‘சோம்பியிருக்காமல் உழைப்பவனிடம் செல்வம் சேர்வதுபோல, அந்த மரத்தில் ஏராளமான மலர்கள் பூத்திருந்தன.'
இப்படி ஒருவன் செல்வம் சேர்த்தால், அவனிடம் ஏதாவது நன்மை கேட்டுப் பெறுவதற்காகப் பலர் வருவார்கள். அதைப்போல, அந்த மலர்கள்மீது வண்டுகள் மொய்த்தன.
ஆக, சோம்பலில்லாமல் இருந்தால் செல்வம் சேரும், கொடுப்பவனாக இருக்கலாம், சோம்பலோடு இருந்தால், அப்படிச் செல்வம் சேர்ந்தவர்களைச் சென்று மொய்த்துக் கேட்டுப்பெறுகிறவர்களாக இருக்கலாம்.
இதையே ஔவையாரும் சொல்கிறார்:
‘சோம்பர் என்பவர் தேம்பித்திரிவர்.'
சோம்பல் குணத்துடன் எந்தச் செயலிலும் ஈடுபடாமலிருக்கிறவர்கள், முன்னேறமாட்டார்கள், அவர்களுடைய வறுமை அவர்களை வாட்ட, அப்படியே திரிந்துகொண்டிருப்பார்கள்.
இந்த நிலையை மாற்ற அவர்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான், சோம்பலைவிட்டு வேலையைக் கவனிப்பது. ஆனால், அதற்குச் சோம்பல் அனுமதிக்காது!
ஆகவே, சோம்பல் நம்மைச் சேருமுன்பே தடுத்துவிடவேண்டும், சேர்ந்தபின் தடுப்பது சிரமம். இதனை இளவயதிலேயே தொடங்கிவிடுவது நல்லது, பாரதியார் சொல்வதுபோல்:
‘சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!'
இதைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தந்து வளர்க்கவேண்டும். செல்லம்கொடுத்து அவர்களுக்கு இந்தக் குணத்தைக் கொண்டுவந்துவிடக்கூடாது.
அதற்காகக் குழந்தைகளும் பெரியவர்களும் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருக்கவேண்டும் ஓய்வெடுக்கவே கூடாது என்பது அர்த்தமல்ல. வேலை செய்ய வேண்டிய நேரத்தில் அதைச் செய்யாமல் சோம்பியிருப்பதுதான் பிழை. மற்றபடி சரியான Work, Life Balance அவசியம்.
சோம்பல் என்பது வெறும் பழக்கம் அல்ல, அது உடலைக் கெடுக்கும் ஒரு நோய் என்றார் பாரதிதாசன்:
‘சோம்பல் ஒரு நோய்!'
பறவைகள், விலங்குகள்கூட சோம்பலில்லாமல் வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லித்தருகின்றன. ஒரு திரைப்பாடலில் வாலி எழுதுவார்:
‘கோழியைப்பாரு, காலையில் விழிக்கும்,
குருவியைப்பாரு, சோம்பலைப் பழிக்கும்,
காக்கையைப்பாரு, கூடிப்பிழைக்கும்,
நம்மையும்பாரு, நாடே சிரிக்கும்!
தனக்கொரு கொள்கை, அதற்கொரு தலைவன்
உனக்கென வேண்டும், உணர்ந்திடு தம்பி,
உழைத்திடவேண்டும், கைகளை நம்பி!'
சோம்பலென்பது மனிதனின் இயல்பே இல்லை என்கிறார் வேதநாயகம்பிள்ளை, அவரது ‘நீதிநூல்உரை’யில் ஒரு பாடல்:
‘தெளிவுஉற நூல்பல தினமும் வாசித்து
மிளிர்உடல் வருத்தியும் வெறுக்கைஈட்டி, நல்
கிளிமொழி மனைவியை, கிளைஞரை, பல
எளியரைத் தாங்குவோர்க்கு இல்லை மந்தமே.'
கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், சிலருக்குச் சோம்பலே இருக்காது, அவர்கள் நல்ல நூல்களைப் படித்துத் தெளிவு பெற்றிருப்பார்கள், உடலை வருத்தி உழைத்துச் செல்வம் சேர்த்திருப்பார்கள், கிளிபோல் பேசும் நல்ல மனைவியையும், குடும்பத்தினரையும், மற்ற பல வறியவர்களையும் கவனித்துக்கொள்வார்கள், அவர்களுக்கு உதவுவார்கள்.
இவர்களிடம் சோம்பல் இல்லாத காரணம், சோம்பலுக்கு அவர்களுக்கு நேரமே இல்லை, அவர்கள் வாசித்த நூல்கள் அதைதான் சொல்லியிருக்கின்றன, ஆகவே, உழைப்புக்கு அஞ்சவில்லை, அதனால் கிடைக்கும் செல்வத்தைப் பெருமையாக நினைக்கிறார்கள், அதைக்கொண்டு பிறருக்கு உதவுகிறார்கள், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சோம்பலில்லாதவர்களுக்கு எல்லாம் நன்மையே!
ஒருவேளை சோம்பல் இருந்தால்?
என்னென்ன தீமைகள் அதனால் வரும் என்று வேதநாயகம்பிள்ளையே சொல்கிறார், இன்னொரு பாட்டிலே:
‘மடிசேரும் அவர்க்கு ஒருநாளும் மறல்
விடியாது, அவர்நெஞ்சுஇடை வெம்துயரே
குடியாகும், மறம்தொடர் குற்றமெலாம்
நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே.’
ஒருவருக்குச் சோம்பல் வந்துவிட்டால், அவர்களுடைய வறுமை எப்போதும் குறையாது, அவர்களுடைய நெஞ்சில் துன்பம்தான் நிரந்தரமாகத் தங்கியிருக்கும், அந்த அழுத்தத்தில் அவர்கள் பல தவறுகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள், இவையெல்லாம் நிச்சயமாக நடக்கும்.
ஆகவே, யாரெல்லாம் சோம்பலை விரட்டுவார்கள், யாரெல்லாம் அதைப் பற்றிக்கொள்வார்கள் என்றுசொல்கிற அடுத்த பாடல்:
‘பார்எல்லாம்ஆள் வேந்தரும் நூல்தேர் பண்போரும்
சீர்எல்லாம்சூழ் செல்வரும் மந்தம் சேராரே,
நேர்இல்லா மாபாதகர், தீனர், நெடும்சோரம்
ஊர்எல்லாம்செய்து உய்பவர் மாசோம்பு உடையாரால்.’
உலகாளும் அரசர்கள், நன்கு படித்த புலவர்கள், எல்லாச் சிறப்பும் நிறைந்த பணக்காரர்கள்... இவர்களெல்லாம் சோம்பலை விரட்டியவர்களாக இருப்பார்கள்.
யோசித்துப்பார்த்தால், இவர்கள்தான் சோம்பலாக இருக்க அதிகக் காரணம் உள்ளதல்லவா? நாட்டுக்கே அரசன், நன்கு படித்த புத்திசாலி, நிறையப் பணம் சேர்த்துவிட்டவன்... இவர்கள் ஏன் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்?
அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பதில் உள்ளது. இணையில்லாத பெரிய குற்றங்களைச் செய்தவர்கள், கொடியவர்கள், ஊரெல்லாம் திருடி வாழ்பவர்கள்தான் சோம்பலோடு இருப்பார்கள் என்கிறார் வேதநாயகம்பிள்ளை.
ஆக, அவர் சொல்லும் சோம்பல் வெறுமனே உடல்சோம்பல் அல்ல, அது மனத்தையே மாற்றிவிடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம். தீய எண்ணங்கள் மனத்தில் இருக்கும்போது, உடல் சோம்பலாகும், அல்லது, உடலில் சோம்பல் இருக்கும்போது தீய எண்ணங்கள் பரவும்.
மாறாக, சோம்பலில்லாத ஒருவருக்குள் நல்ல எண்ணங்கள் நிறைந்திருக்கும், எவ்வளவு பணம், படிப்பு இருந்தாலும், இன்னும் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அதற்குக் காரணம், இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்பதல்ல, சோம்பல் அவர்களுடைய இயல்பில்லை, சோம்பியிருந்தால் என்ன கெடுதல் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும், ஆகவே, They choose not to be lazy: சோம்பல் வேண்டாம் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள், அதுவே அவர்களுடைய வாழ்க்கைமுறையாகிவிடுகிறது.
சோம்பலில்லாத வாழ்க்கை என்ன தரும் என்று அழகாகச் சொல்கிறது திருக்குறள்:
‘மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயதுஎல்லாம் ஒருங்கு.’
ஒரு மன்னனுக்குச் சோம்பல் இல்லாவிட்டால், அவனுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?
மூன்று அடிகளில் ஒட்டுமொத்த உலகங்களையும் அளந்தானே வாமனன், அவை எல்லாம் ஒரே நேரத்தில் கிடைக்கும்.
இங்கே மன்னன் என்ற சொல் மிக முக்கியமானது. பொதுவாக, மன்னன் ஒரு சிறிய, அல்லது பெரிய நாட்டுக்குதான் தலைவனாக இருப்பான், அவனுக்குச் சோம்பல் இல்லாவிட்டால், அனைத்து உலகங்களையும் ஆளுகிற பெருமை கிடைக்கும்.
ஆக, நமது துறை எதுவாக இருந்தாலும், அதில் சோம்பலின்றி வேலை செய்தால், பலமடங்கு உயரலாம், பெரிய அளவில் வெற்றிபெறலாம்.
பட்டுக்கோட்டைகலியாணசுந்தரம் ஒரு சிறுவனுக்குச் சொல்வதுபோல் அழகாக இதனைத் திரைப்பாடலில் சேர்த்தார்:
‘தூங்காதே, தம்பி, தூங்காதே, நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!’
ஏன்? தூங்கினால் என்ன தப்பு? அதற்கும் பதில் சொல்கிறார் கவிஞர்:
‘நல்லபொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார், சிலர்
அல்லும்பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக்கொண்டார்,
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார், உன்போல்
குறட்டைவிட்டோரெல்லாம், கோட்டைவிட்டார்!’
பிழைத்துக்கொள்வதற்கும் கோட்டை விடுவதற்கும் நடுவே குறட்டையும் சோம்பலும்தான் இருக்கிறது. இந்தச் சோம்பலால் பல பொன்னான வேலைகளும் தூங்கிப்போய்விடுகின்றன என்று கவிஞர் விளக்குகிறார்:
‘போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான், உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்,
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான், கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழிழந்தான், இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!’
இதே தலைப்பில் வாலியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதில் அவர் இன்னொரு வேடிக்கையான விஷயத்தைச் சொல்கிறார், ‘முழிச்சுகிட்டிருந்தாலே நம்மை ஏமாத்த ஆளுங்க இருக்காங்க, நீ தூங்கினா விடுவாங்களா? எழுந்து வேலையைப் பாருய்யா!’
‘நாம முழிச்சுக்கிட்டே இருக்கையிலும்கூட,
தலையில மொளகாஅரைக்க ஆள்இருப்பான் கூட,
தூங்காதே, தம்பி, தூங்காதே, இப்போ
தூங்கிப்புட்டுப் பின்னாலே ஏங்காதே!’
குறிப்பாக, மாணவர்களுக்குச் சோம்பல் எதிரி. ‘அறுவகை இலக்கணம்’ நூலில் தண்டபாணிசுவாமிகள் சொல்வது:
‘சோம்பலும் துயிலும் சுரிகுழல் மடவார்
மோகமும் கலியும் முன்வந்து அடுப்பினும்
அஞ்சார் செந்தமிழ் ஆணிப்பொன்னே.’
மாணவர்களுக்குமுன்னால் பல விஷயங்கள் வந்து பயமுறுத்தும். அவற்றில் முதலாவது, சோம்பல், ‘நாளைக்குப் படிக்கலாமே’ என்கிற குணம், அதற்கு மயங்கக்கூடாது.
அடுத்து, தூக்கம். இப்போது தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து படிக்கலாம் என்ற எண்ணம்.
மூன்றாவது, பக்கத்து பெஞ்ச் பெண்ணை சைட்டடிக்கும் மோகம், பருவ வயதில் வரும் தொல்லை நினைவுகள்.
நான்காவது, வறுமை, படிக்க விரும்பினாலும் புத்தகம் வாங்க, கல்விக்கட்டணத்தைச் செலுத்தக் காசு இல்லாத நிலை.
இந்த நான்குக்கும் அஞ்சாதவர்கள், செந்தமிழ்க்கல்விக்கு ஆணிப்பொன்போல் உயர்வானவர்கள் என்கிறார் தண்டபாணிசுவாமிகள்.
இதில் வறுமைக்கு வங்கிக்கடன் வாங்கித் தீர்வு காணலாம், பருவ உணர்வுகளைக்கூடக் கட்டுப்படுத்திக்கொண்டுவிடலாம், தூங்கிவிட்டு அலாரம் வைத்துக் காலையில் எழுந்து படிக்கலாம், முதலாவதாக வரும் சோம்பலிடம் சிக்கிவிட்டால், எந்தவிதத்திலும் வெல்ல இயலாது.
‘சோம்பலைக்கண்டு அஞ்சுகிறேன்’ என்கிறார் வள்ளலார்:
‘தொழும்தகை உடைய சோதியே, அடியேன்
சோம்பலால் வருந்தியதோறும்
அழுந்த என்உள்ளம் பயந்ததை என்னால்
அளவிடற்கு எய்துமோ! பகலில்
விழுந்துறு தூக்கம் வர, அது தடுத்தும்
விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோதுஎல்லாம் பயத்தொடும் எழுந்தேன்,
என்செய்வேன், என்செய்வேன் என்றே.’
எல்லாரும் வணங்குகிற சோதியே, சோம்பல் என்னை வருத்தியது, அப்போதெல்லாம் என் உள்ளம் அதை நினைத்துப் பயந்தது,
பகல்நேரத்தில் தூக்கம் வந்தது, சிரமப்பட்டு அதைத் தடுத்துப்பார்த்தேன், முடியவில்லை, தூங்கிவிட்டேன், பிறகு எழுந்தபோது பயத்தோடுதான் எழுந்தேன், ‘சோம்பலுக்கு அடிமையாகிவிட்டேனே, என்னசெய்வேன்’ என்று வருந்தினேன்.
வெறுமனே வருந்தினால் போதுமா, தூக்கத்தை விரட்டவேண்டாமா? சோம்பலைத் தாக்கவேண்டாமா?
இன்னொரு பாடலில் தூக்கத்தை மிரட்டிச் சண்டையே போடுகிறார் வள்ளலார்:
‘தூக்கம்எனும் கடைப்பயலே, சோம்பேறி, இது கேள்,
துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரைக்கணத்தே
தாக்கு பெரும்காட்டுஅகத்தே ஏகுக, நீ இருந்தால்
தப்பாதுஉன் தலைபோகும், சத்தியம், ஈதுஅறிவாய்,
ஏக்கம்எலாம் தவிர்த்துவிட்டேன், ஆக்கம்எலாம் பெற்றேன்,
இன்பம்உறுகின்றேன், நீ என்னை அடையாதே,
போக்கில் விரைந்துஓடுக நீ, பொற்சபை சிற்சபைவாழ்
பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே.’
தூக்கம் என்கிற அற்பமான பயலே, சோம்பேறி, நான் சொல்வதைக் கேள்,
இன்னும் அரைக்கணத்தில் நீயும் உன் சுற்றங்களும் காட்டுக்கு ஓடிவிடவேண்டும், இனிமேல் இங்கே இருந்தால், உன் தலை வெட்டுப்படும், இது சத்தியம்! தெரிந்துகொள்!
இனி எனக்கு ஏக்கம் இல்லை, என் வாழ்வில் எல்லாமே ஆக்கம்தான், மகிழ்ச்சிதான், இனிமேலும் நீ எனக்குத் தேவையில்லை, சோம்பல் இல்லாமல் நான் இனிமையாக வாழ்வேன்,
ஆகவே, நீ ஓடிச் சென்றுவிடு, பொற்சபையில், சிற்சபையில் வாழும் பூரணனான சிவபெருமான் என்மீது அன்புவைத்திருக்கிறான், இனிமேல் உன்னால் என்னை வெல்ல இயலாது!
சோம்பலை வெல்ல நாமக்கல்கவிஞர் இராமலிங்கம்பிள்ளை ஓர் அட்டகாசமான வழி சொல்கிறார்:
‘சுப்ரமணிய பாரதியின் பாட்டு, பாடிச்
சோம்பல், மனச்சோர்வுகளை ஓட்டு,
ஒப்புஅரிய தன்மதிப்பை ஊட்டும், அதுவே
உன்பலத்தை நீஉணரக் காட்டும்!’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.