வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அன்புடை நெஞ்சம்: அத்தியாயம் - ஐந்து

திரைப்படங்களில் மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டே கதாநாயகன் பாடும் பாடல்கள் நிறைய உண்டு.

News image
Updated On :8 மே 2015, 12:11 pm

என். சொக்கன்

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }தி
ரைப்படங்களில் மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டே கதாநாயகன் பாடும் பாடல்கள் நிறைய உண்டு.

கதாநாயகிகள் அப்படிப் பாடும் வழக்கம் இருக்கிறதா?

கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதற்குள் சுவையான கதை ஒன்றையும் வைத்திருக்கிறார்.

காளை மாடுகளைப் பூட்டிய வண்டியை அவள் ஓட்டுகிறாள். அவற்றை விரைவாகச் செல்லும்படி சொல்கிறாள், ‘இரவுக்குள் வீடு செல்ல வேண்டும்’ என்கிறாள்.

’ஜல்ஜல்ஜல்லெனும் சலங்கையொலி,
சலசலசலவெனச் சாலையிலே
செல்செல்செல்லுங்கள் காளைகளே,
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே...’


என்ன அவசரம்? ஏன் இரவுக்குள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிறாள் அவள்?

தன் காதலனைச் சந்திக்கதான்.
யார் அந்தக் காதலன்?
அவன் பெரிய திருடன்.
திருடனையா காதலிக்கிறாள்?
ஆமாம். காரணம், இவளும் திருடிதானே?
திருட்டுப்பயலுக்கும் திருட்டுப்பெண்ணுக்கும் இடையே ஒரு காதலா?
அவள் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் அவன் வந்தான். ‘கையில் உள்ளதையெல்லாம் கொடு’ என்று அதட்டினான்.

‘என் கையில் எதுவுமே இல்லையே’ என்கிறாள் அவள், ‘அதற்குப் பதிலாகக் கண்ணில் உள்ளதைத் தரட்டுமா?’

அப்படி என்ன இருக்கிறது அவள் கண்ணில் என்று அலட்சியமாகப் பார்க்கிறான் அவன். அங்கே தெரியும் அன்பைக் கண்டு சிக்கிக்கொள்கிறான்.

“காட்டினில் ஒருவன் எனைக் கண்டான்,
கையில் உள்ளதைக் கொடு என்றான்,
கையில் எதுவும் இல்லையென்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்!”


அவனே பெரிய திருடன். ஆனால், அவனிடம் இவள் திருடிவிட்டாள், அவனுடைய மனத்தை.

ஆனால், இவளுக்குத் திருட்டுத் தொழில் புதிது அல்லவா? அவன் மனத்தை முழுமையாகத் திருடவில்லை.

“அவன்தான் திருடன் என்றிருந்தேன்,
அவனை நானும் திருடிவிட்டேன்,
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்!”

திருடியவள், அடுத்த விநாடி காவலாளி ஆகிறாள், ‘அவனைக் கைது செய்யப்போகிறேன். சிறையில் அடைக்கப்போகிறேன்’ என்கிறாள்.

ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?

அதையெல்லாம் சொல்ல இயலாது. கைது செய்யப்போகிறேன். அவ்வளவுதான்.

விடுதலை எப்போது? அதையாவது சொல்வீர்களா?

’என்னுடைய மனச்சிறையில் அவன் வந்தபிறகு, விடுதலையே கிடையாது, நிரந்தரமாக அவன் இங்கேயே இருக்கவேண்டியதுதான்’ என்கிறாள் அவள்:

“இன்றே அவனைக் கைது செய்வேன்,
என்றும் சிறையில் வைத்திருப்பேன்,
விளக்கம் சொல்லவும் முடியாது,
விடுதலை என்பது கிடையாது!”


இன்னொரு பாடலில், வாலியின் வரிகளில் வரும் ஒரு காதலி. அவளும் இப்படிதான் ஒருவனைச் சந்திக்கிறாள், காட்டில் அல்ல, மாந்தோப்பில்.

அங்கே வந்தவன், ’மாம்பழம் வேண்டும்’ என்கிறான். அவள் பறித்துத் தருகிறாள்.

‘இது வேண்டாம்’ என்கிறான் அவன்.

‘நீதானே மாம்பழம் கேட்டாய்?’

‘ஆமாம், ஆனால் நான் கேட்ட மாம்பழம் இதுவல்ல’ என்று குறும்பாகச் சிரிக்கிறான் அவன், ‘இதோ, இந்த அழகுக் கன்னங்களைதான் கேட்டேன்!’

’ச்சே, மோசமான ஆள்’ என்கிறீர்களா? அவன் தரப்பு வாதத்தையும் கேளுங்கள்.

அவன் தண்ணீர்ப்பந்தலில் நின்றிருந்தானாம், அவள் தாகம் என்று சொல்லிக்கொண்டு வந்தாளாம். இவன் ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தானாம். அவள் வாங்கவில்லையாம்.

ஏன்? தாகம் இல்லையா?

தாகம் இப்போது அவன்மீது மோகமாகிவிட்டதாம்!

“நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன்
மாம்பழம் வேண்டுமென்றான், அதைக்
கொடுத்தாலும் வாங்கவில்லை, அந்தக்
கன்னம் வேண்டுமென்றான்!”

“நான் தண்ணீர்ப்பந்தலில் நின்றிருந்தேன், அவள்
தாகம் என்று சொன்னாள், நான்
தன்னந்தனியே நின்றிருந்தேன், அவள்
மோகம் என்றுசொன்னாள்!”

இப்படி ஒரு பெண் தன் காதலை வெளிப்படையாகச் சொல்லலாமா?

இந்த விஷயத்தில் ஆண், பெண் வித்தியாசம் என்ன? உணர்வுகள் இருபாலருக்கும் பொதுதானே? மனத்தில் உள்ளதை உரிமையுள்ளவர்களிடம் வார்த்தையில் சொன்னால் என்ன பிழை?

நக்கண்ணையார் என்ற பெண், அகநானூற்றுப் பாடலொன்றில் இன்னொரு பெண்ணின் உணர்வுகளைச் சொல்கிறார்.

அவளைப் பார்க்கக் காதலன் வந்திருக்கிறான். வெளியே நிற்கிறான். அவன் காதில் விழுவதுபோல் காதலி தன் தோழியிடம் கேட்கிறார். ‘இன்னிக்கு அவன் வருவானா?’

’வருவான்’ என்கிறாள் தோழி.

’அவன் வர்ற வழி எப்படிப்பட்டது தெரியுமா? அங்கே கொடுமையான புலி இருக்கு, அது ஒரு யானையைக் கொல்லணும்ன்னு திட்டம் போட்டுக் காத்திருக்கு.’

‘அந்த நேரத்துல, ஓர் ஆளி அங்கே வந்து, புலி கொல்ல நினைச்ச யானையின்மீது பாய்ந்து அதை அடிச்சு வீழ்த்துது.’

‘இப்படிப்பட்ட கொடுமையான மிருகங்கள் நிறைஞ்ச வழியில, ராத்திரி நேரத்துல வரலாமா? அவனுக்கு ஏதாவது ஆகிடாதா?’

காதலி இப்படிக் கேட்க, தோழி சமாதானம் சொல்கிறாள், ‘அவன் தைரியமான ஆள், உன்மேல இருக்கிற காதலுக்காக எவ்வளவு தூரமும் தாண்டி வருவான், எத்தனை கஷ்டமான பாதையிலயும் வருவான்.’

’அவனுக்குப் பயம் இல்லை, அவனை நினைச்சு எனக்குத் தூக்கம் இல்லை’ என்கிறாள் காதலி, ‘என்னோட காதல் ஒரு நோய்மாதிரி என்னை வாட்டுது, நான் எப்படிப் பொறுத்துக்கிட்டிருப்பேன்?’

‘அப்படியே அவன் வந்தாலும், அவனை ஓடிப் போய்ப் பார்க்கறது சாத்தியமா? இங்கே காவலுக்கு அம்மா இருக்காங்களே!’

காதலிக்குதான் காதலால் தூக்கம் இல்லை. அவள் தாயுமா தூங்கவில்லை?

ஆமாம். வயசுப்பெண்ணின் பெற்றோருக்கு உறக்கம் வருமா? மழை பெய்கிற ராத்திரி நேரத்தில், பெருகிவரும் தண்ணீர் குளத்தின் கரையை உடைத்துவிடுமோ என்று ஒரு காவல்காரர் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல, அவளுடைய தாய் உறங்காமல் மகளுக்குக் காவலாக இருக்கிறாராம்.

‘உள்ளுக்குள்ளே என்னோட காதல் என்னை வருத்துது, அவன் ஆபத்தான பாதையில வர்றானேன்னு இன்னொருபக்கம் பயம், அவனைப் பார்க்கக்கூடாதுன்னு அம்மாவோட கட்டுப்பாடு, இதையெல்லாம் எப்படித் தாங்கிக்கறது? நீயே சொல்லு!’ என்று தோழியிடம் நியாயம் கேட்கிறாள் அவள். அதாவது, வெளியே இருக்கும் காதலனிடம் தன் நிலையைச் சொல்லி, முறைப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யக் கேட்கிறாள்.

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித்
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனிவார் கண்ணேன் ஆகி, நோய்அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்,
யாங்குச் செய்வாம்கொல் தோழி? ஈங்கைத்
துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
தொழில்மழை பொழிந்த பானாள் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன்போல
அருங்கடி அன்னையும் துயில்மறந்தனளே!


ஆக, அந்த இரவில் அவன் தூங்கவில்லை, அவன் பார்க்க வந்த அவள் தூங்கவில்லை, ஆனால் அவர்கள் சந்தித்து மகிழ இயலாதபடி அவளுடைய தாயும் தூங்கவில்லை.

‘பகலும் உறங்கிடும் ராத்திரி’ என்று ஒரு பாடலில் எழுதுவார் புலமைப்பித்தன். பகலே உறங்கிவிடும் ராத்திரியில்கூட, காதல்வயப்பட்டவர்களுக்கும், அவர்களைக் காவல் காக்கிறவர்களுக்கும் தூக்கமில்லை!

ராத்திரியில் உறங்காத ஒன்று, நிலவு. அதைப் பார்த்துப் பழனிபாரதி கேட்கிறார்:

’இரவில் விழித்திருந்து, நீதான் கற்றதென்ன பாடங்களோ?’

’நிலாவே, ராத்திரியில் தூங்காமல் விழித்திருந்து என்ன கற்றுக்கொண்டாய்?’ என்று கேட்கிற கவிஞருக்கு, இன்னொரு சுவாரஸ்யமான சந்தேகமும் வருகிறது. ‘காதலால் நான் தூங்கவில்லை, நீயும் தூங்கவில்லை. ஒருவேளை, நீயும் காதல்வயப்பட்டிருக்கிறாயோ?’

’எதனாலே வெண்ணிலவே, அவள்போல் நீயும் இளைத்தாயோ!

உன்மனதை, உன்மனதை எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ!’

ரசமான கற்பனை! நிலாவை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் காதல் பாட்டுகள்தான் எத்தனை! துணையோடு கூடி மகிழும்போதும் நிலாதான் துணை, பிரிந்து துயரத்தில் இருக்கும்போதும் நிலாதான் துணை, ‘அவன்(ள்) மறுபடி வருவான்(ள்), நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்’ என்று உறுதி சொல்வதும் நிலாதான்.

அதேசமயம், ‘நிலாவே, நீ காதலர்களுக்கு உதவி செய்வதில்லை’ என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.

காதலன் காதலியைக் காண வருகிறான். காட்டில் கடினமான பாதையைக் கடந்து வருகிறான்.

வரும் வழியில் ஒரு பாறை. அதன்மீது வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன.

தூரத்திலிருந்து பார்க்கும்போது, மங்கலான நிலா வெளிச்சத்தில் அந்தப் பாறை ஒரு புலியைப்போலத் தோன்றுகிறது. காதலன் குழம்புகிறான்.

இதை உணர்ந்த காதலியின் தோழி சொல்கிறாள், ‘நிலவே, நீ காதலர்களுக்கு நல்லது செய்வதில்லை. அவன் வரும் வழியில் பளிச்சென்று வெளிச்சத்தைக் காட்டாமல் இப்படிக் குழப்பம் ஏற்படுத்தினால் என்ன அர்த்தம்?’

நிலவு கேட்கிறது, ‘சரி, இனிமேல் நான் ஆயிரம் வாட்ஸ் விளக்குபோல் பிரகாசமாக எரியட்டுமா?’

Story image

‘வேண்டாம்’ என்கிறாள் தோழி, ‘நீ அப்படிப் பிரகாசமாக எரிந்தால், அவன் வருவதை ஊர் மக்கள் பார்த்துவிடுவார்கள். அவன் ரகசியமாக வந்து என் தோழியைச் சந்திக்க இயலாது, உன் வெளிச்சம் அவனைக் காட்டிக்கொடுத்துவிடும்!’

இதைச் சொல்லிவிட்டு, தோழி மீண்டும் அலுத்துக்கொள்கிறாள், ‘நிலவே, நீ காதலர்களுக்குத் தோழன் இல்லை!’

இந்தக் குறுந்தொகைப் பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆகவே, ‘நெடுவெண்ணிலவினார்’ என்றே அவருக்குப் பெயர் சூட்டிவிட்டார்கள்:

கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்ல, நெடுவெண்ணிலவே!


’நிலவுமட்டுமல்ல, எல்லாப் பொழுதுகளும் எனக்கு நீதான்’ என்று ஒரு காதலன் சொல்கிறான். உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதையில்.

காலை எழுந்தவுடன் அவன் இப்படிப் பாடுகிறான்:

’நீலக் கிழக்கு சுடராச்சு, வயலில்
நிற்கும் கதிர்கள் முற்றிப்போச்சு!’
அவன் காதலி சொல்கிறாள்:
’ஆகையினால் நீங்க,
அறுவடைக்குப் போங்க,
அதற்கு அரிவாள் இந்தாங்க!’

அவன் கிளம்பி வயலுக்கு வருகிறான். வேலை செய்கிறான். பகல் நேரமாகிவிட்டது. மர நிழலில் ஒதுங்க வழியில்லை. அவளை நினைத்துப் பாடுகிறான்:

‘நெருப்பு வெய்யில் வந்தாச்சு, பனைமர
நிழலை நம்பி வீணாச்சு!’


அங்கேயும் அவன் காதலி வருகிறாள். முந்தானையால் குடை விரிக்கிறாள்:

’அந்தத் துயர் நீங்க,
வந்த வெய்யில் தாங்க,
முந்தானைக் குடை இந்தாங்க!’
வெயிலுக்குமட்டுமா? மழைக்கும் குடை வேண்டுமே!


அங்கேயும் காதலியின் முந்தானைதான் குடையாகும். புலமைப்பித்தன் எழுதிய திரைப்பாடல் வரிகள் இவை:

‘மழை வருது, மழை வருது,
குடை கொண்டு வா,
மானே உன் மாராப்பிலே!’


இப்படிக் காதலன் கேட்க, அவள் சொல்லும் பதில் இந்தக் கவிதையை இன்னொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது:

‘வெயில் வருது, வெயில் வருது,
நிழல் கொண்டு வா,
மன்னா உன் பேரன்பிலே!’


அவன் அவளுடைய முந்தானையைக் கேட்கிறான், அவளோ அவனுடைய அன்பைக் கேட்கிறாள். ’எந்தப் பெருவெயிலிலும் உன் அன்புதான் எனக்கு நிழல்’ என்கிறாள்.

சுரதா காட்டும் காதலியும் முந்தானையால் காதலனுக்குக் குடை விரித்துவிட்டு, அவனுடைய அன்பு நிழலில் நின்றிருப்பாள்.

அவன் தொடர்ந்து வேலை செய்கிறான். மாலை நேரம் வந்துவிட்டது. இப்படிப் பாடுகிறான்:
‘மேற்குவானம் ரத்தமாச்சு, உன்னால்
மலர்ந்த உதடு வெள்ளையாச்சு!’
உதடு வெள்ளையாகிறதா? அதென்ன விஷயம்?


கலிங்கத்துப்பரணியில் வரும் வரிகள் இவை:

’வாயில் சிவப்பை விழி வாங்க,
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்!’


பொதுவாகப் பெண்களின் உதடு சிவந்திருக்கும், லிப்ஸ்டிக் போடாமலே.

அதேநேரம், அவர்களுடைய கண்கள் வெளுத்திருக்கும். உதட்டுக்குச் சிவப்பும் கண்ணுக்கு வெளுப்பும்தான் இயல்பான நிறங்கள்.

ஆனால், கலவி விளையாட்டில் ஈடுபடும்போதுமட்டும் இது தலைகீழாகிவிடும். கண்கள் சிவந்துபோகும், உதடு வெளுத்துப்போகும். அது ஏன் என்பதை நீங்களே ஊகித்து ரசிக்கலாம்!

இப்படிதான் ஒரு காதலி, தன்னுடைய காதலனுடன் இன்ப விளையாட்டில் ஈடுபட்டு வீடு திரும்பினாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன.

அதைப் பார்த்த தாய் அதிர்ச்சியடைந்தார். விசாரித்தார். ‘என்ன ஆச்சு? ஏன் உன் கண்கள் சிவந்திருக்கு?’

காதலி எதையாவது சொல்லுமுன் தோழி முன்னே வருகிறாள், ‘அம்மா, கோபப்படாதீங்க, உங்க மகள்மேல சந்தேகப்படாதீங்க’ என்கிறாள்.

‘அப்படீன்னா, அவ கண் ஏன் சிவந்திருக்கு?’

’நாங்க ரெண்டு பேரும் காட்டாற்றுல, அருவியில ரொம்ப நேரம் குளிச்சோம். அதனாலதான் அவ கண் சிவந்திருக்கு’ என்று சமாளிக்கிறாள் தோழி.

இந்த விஷயத்தைப் பின்னர் அவள் காதலன் கேட்கும்படி சொல்கிறாள் தோழி. ‘தாய்க்குச் சந்தேகம் வந்துவிட்டது. சீக்கிரம் திருமண ஏற்பாடுகளைக் கவனி!’ என்று வலியுறுத்துகிறாள்.

’ஐந்திணை எழுபது’ என்ற நூலில் மூவாதியர் எழுதிய பாடல் இது:

காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்!
ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்
தேங்கலந்து வந்த அருவி குடைந்தாடத்
தாம்சிவப்புற்றன கண்

அங்கே காட்டுக்குள் நடந்த காதல் நாடகம், இங்கே வயலில் நடந்திருக்கிறது. கண்கள் சிவந்து, உதடுகள் வெளுத்திருக்கின்றன. அதைதான் ‘மலர்ந்த உதடு வெள்ளையாச்சு’ என்கிறான் காதலன். அதற்கு அவனுடைய காதலி சொல்லும் பதில்:

‘வாசனையும் ஓங்க
சிவப்பு நிறம் தேங்க
வெற்றிலைப் பாக்கு இந்தாங்க!’


அவள் தந்த வெற்றிலைப் பாக்கை மென்றபடி வீடு வருகிறான். வானத்தில் நிலவு. அதைப் பார்த்து, அவளிடம் பாடுகிறான்:

‘நிலவு பிரசவமாச்சு, உன்னால்

நித்திரை சிதறிப்போச்சு!’

அவள் முத்தாய்ப்பாக இந்த வரிகளைச் சொல்கிறாள்:

’மன்னவரே நீங்க,

மயக்கத்தோடு தூங்க,

எச்சில் முத்தம் இந்தாங்க!’

முத்தத்தை எச்சிலுடன் ஒப்பிடுவது சரியா?

பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்


என்று திருவள்ளுவர் எழுதினார். ’வால்’ என்றால் தூய்மையான, ‘எயிறு’ என்றால் பல். தூய்மையான பற்களினிடையே ஊறிய நீர், தூய்மையானதாகதானே இருக்கும்? அது பாலும் தேனும் கலந்ததற்குச் சமம்!

காதலன் காதலியை நெருங்கி முத்தமிட வருகிறான். அவள் மறுக்கிறாள், ‘சத்தம் கேட்கும், மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும்’ என்கிறாள்.

இதனால், காதலன் சலித்துக்கொள்கிறான், ‘இந்த முத்தத்தின்போது சத்தம் ஏன் வருகிறதோ, பூக்கள் பூக்கும்போது சத்தமா கேட்கிறது? அதுபோல இந்த முத்தமும் இருக்கக்கூடாதா!’

வைரமுத்துவின் வரிகள் இவை:

‘முத்தம் போடும் வேளையில்

சத்தம் ரொம்பத் தொல்லை,

பூக்கள் பூக்கும் ஓசைகள்

காதில் கேட்பதில்லை!’

வாலி இதை இன்னும் சற்று நுணுக்கமாக வர்ணிக்கிறார் இன்னொரு திரைப்பாடலில்:

‘முத்தம்மா, முத்தம் சிந்து, பனி
முத்துப்போல் நித்தம் வந்து.’


பனித்துளி ஒன்று ஒரு புல்மீது வந்து அமர்வதுபோல் முத்தத்தைச் சிந்தவேண்டுமாம். மென்மையாக, சத்தமில்லாமல்.

இதற்கு எதிராக, வன்முறை முத்தங்களும் உண்டு. நா. முத்துக்குமார் எழுதிய வரிகள் இவை:

‘ராத்திரியின் சொந்தக்காரா,
ரகசியப்போர் வித்தைக்காரா,
முத்தத்தால் வன்முறை செய்வாயா?’

முத்துலிங்கம் இவற்றுக்கு நடுவே நின்று, முத்தத்தை ஒரு கதையாக வர்ணிக்கிறார்:

‘இதழில் கதை எழுதும் நேரமிது,
இன்பங்கள் அழைக்குது, வா!’

மென்முத்தம், வன்முத்தம், சத்த முத்தம், ம்யூட் முத்தம், கதையெழுதும் முத்தம், ஓவியம் வரையும் முத்தம், எச்சில் முத்தம், தூய்மை முத்தம்... நான்கு உதடுகளுக்குள் நடக்கும் நாடகத்தில் எத்தனை வகைகள்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.