பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-11

சில விஷயங்கள் சர்வசாதாரணமாகக் கிடைப்பதாலேயே, அவற்றின் மகத்துவத்தை நாம் உணர்வதில்லை.
Published on
Updated on
5 min read

சில விஷயங்கள் சர்வசாதாரணமாகக் கிடைப்பதாலேயே, அவற்றின் மகத்துவத்தை நாம் உணர்வதில்லை.

உதாரணமாக, சொல்.

ஒருவிதத்தில் இது கட்டளை. ‘எதையாவது சொல்’ என்று எதிராளியிடம் கோருவது.

இன்னொருவிதத்தில், இது பெயர்ச்சொல். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் குறிப்பிடுவது.

யார் வேண்டுமானாலும் பேசிவிடலாம், ஆனால், எதைப் பேசுவது என்கிற கட்டுப்பாடும் அறிவும் சிலருக்குதான் இருக்கும். அவர்கள்தான் பேச்சில் சிறந்து விளங்குவார்கள், அதை ஊர் கேட்கும்.

வேறு சிலர் பேச்சாலேயே மதிப்பிழப்பார்கள். அவர்களுக்கு எத்தனைதான் திறமைகள் இருந்தாலும், சரியான சொற்களைப் பயன்படுத்தாவிட்டால் அவமானம்தான் மிஞ்சும்.

ஆகவே, சொற்களுக்கு மிகுந்த வலிமை உண்டு. அவற்றைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும்.

நான்மணிக்கடிகையில் விளம்பிநாகனார் சொல்வது:

‘வடுச்சொல் நயமில்லார்வாய்த் தோன்றும், கற்றார்வாய்ச்

சாயினும் தோன்றா கரப்புச்சொல், தீய

பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா, கரப்புச்சொல்

கீழ்கள்வாய்த் தோன்றிவிடும்.'

இங்கே ‘வடுச்சொல்’ என்பது, பழி சொல்கிற, வடு உண்டாக்குகிற சொல். நயமில்லாதவர்கள்தான் அதைப் பேசுவார்கள்.

‘தீயினால் சுட்டபுண் உள்ஆறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு.'

இது திருக்குறள். தீக்காயம் விரைவில் ஆறிவிடும், நாவினால் சுட்ட காயம் ஆறாது, வடுவாக நிலைத்து நிற்கும். ஆகவே, வடு உண்டாக்கும் சொற்களைப் பேசக்கூடாது.

அடுத்து, கரப்புச்சொல், அதாவது மறைத்துப்பேசுவது. உள்ளே ஒரு கருத்தை வைத்துக்கொண்டு, வெளியே இன்னொன்றைப் பேசி ஏமாற்றுவது. வள்ளலார் சொல்வார்:

‘உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்.'

இப்படிப்பட்ட கரப்புச்சொற்களை எந்நிலையிலும் பேசக்கூடாது, கற்றவர்கள் தங்களுக்கு என்ன இழிவுநிலை வந்தாலும், ‘சும்மா ஒரு பொய் சொல்லித் தப்பிச்சுக்கலாம்’ என்று நினைக்கமாட்டார்கள்.

மூன்றாவது, தீய பரப்புச்சொல். அதாவது, தீய விஷயங்களைப் பரப்புகின்ற சொல். இதுவும் சான்றோர்களிடத்தில் தோன்றாது. கீழ்மக்கள்தான் இதுபோல மறைத்துப்பேசுவது, புறம்பேசுவது, ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் இழிவாகப் பேசுவது ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்.

அப்படியானால், ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டக்கூடாதா?

கண்டிப்பாகச் சுட்டிக்காட்டலாம், ஆனால் அதை அவர்களுடைய முகத்துக்கு எதிரே செய்யவேண்டும், ஒளிந்துநின்று பேசக்கூடாது என்கிறார் திருவள்ளுவர்:

‘கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க

முன்நின்று பின்நோக்காச் சொல்.'

ஒருவரிடம் குறையைக் கண்டால், அவருக்கு நேராக நின்று அதைச் சொல்லிவிடுங்கள், அதில் எந்தத் தவறும் இல்லை. அதைக் கடுமையாக நினைத்து அவர்கள் மனம் வருந்தலாம், உங்கள்மேல் கோபப்படலாம், உங்கள் நட்பையே முறித்துக்கொள்ளலாம், அதற்காகப் பயந்துகொண்டு, அவர்கள் இல்லாதபோது அந்தக் குறைகளை வேறு ஒருவரிடம் சொல்லாதீர்கள், பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் அப்படிப் புறம்பேசுவது உங்களுக்கும் நல்லதில்லை, அவருக்கும் நல்லதில்லை, நீங்கள் சொல்வதைக் கேட்கிறவர்களுக்கும் நல்லதில்லை.

இத்தனையையும் திருவள்ளுவர் விளக்கவில்லை, ‘சொல்லற்க’ என்று ஒரே கட்டளையில் அதைப் புரியவைத்துவிடுகிறார். இதுவும் அவரே வகுத்த இலக்கணம்தான்:

‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.'

நாம் எதையாவது பேசுகிறோம் என்றால், அது கேட்பவர்கள் மனத்தில் தங்கவேண்டும். ஆங்கிலத்தில் இதனை Sticky என்பார்கள்.

ஆனால், அதுமட்டும் போதாது, நம் பேச்சைக் கேட்காதவர்களும் அதைக் கேட்க விரும்பவேண்டும், அதுதான் சொல்வன்மை.

நம் பேச்சைக் கேட்காதவர்கள் எப்போது அதை விரும்புவார்கள்? கேட்டவர்கள் அவர்களிடம் சென்று சொல்லவேண்டும், ‘நேத்திக்கு இவர் பேசினதைக் கேட்டேன், என்னாமா இருந்தது தெரியுமா?’ என்று அவர்கள் சொல்ல, அதைக் கேட்கிறவர்கள், அதாவது, நாம் பேசியதைக் கேட்காதவர்கள், ‘இவர் அடுத்து நம்ம ஊர்ல என்னிக்குப் பேசறார்?’ என்று தேடவேண்டும். அதுவே சொல்லின் வெற்றி.

அதேசமயம், அந்தச் சொல் தரமானதாக இல்லையென்றால், முறையான பயிற்சியின்மூலம், சிந்தனையின்மூலம் பெறப்படவில்லை என்றால், அதுவே ஒருவனைக் காட்டிக்கொடுத்துவிடும்.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆழமாக ஆராய்ச்சி செய்து, நன்கு கற்று ஒருவர் பேசுகிறார். இன்னொருவர் எங்கேயோ கற்றுக்கொண்டதை வந்து பேசுகிறார். இந்த இருவருடைய பேச்சும் ஒரேமாதிரி இருக்காது, இரண்டாம்வகையைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய உண்மையான ‘கல்வி’யை வெளிப்படுத்தி அசிங்கப்படுவார்கள் என்கிறது நாலடியார்:

‘கற்றதூஉம்இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம், மற்றுஅதனை

நல்லார்இடைப் புக்கு நாணாது சொல்லித் தன்

புல்அறிவு காட்டிவிடும்.'

சிலர், எதையும் முறையாகப் படிப்பதில்லை. யாரோ சொல்லிக்கொடுத்த பாடத்தைக் கேட்டுத் தங்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். இவர்கள் உண்மையாகக் கற்றவர்கள் மத்தியில் சென்று பேசத்தொடங்கினால், அதுவே அவர்களுடைய அற்பமான அறிவைக் காட்டிக்கொடுத்துவிடும்.

இங்கே ‘நாணாது’ என்ற சொல் மிகவும் முக்கியமானது. ஒரு விஷயத்தில் ஞானமுள்ளவர்கள் மத்தியில் பேசும்போது, நாம் குறையறிவுள்ளவர்கள் என்ற நாணம் நமக்குள் இருக்கவேண்டும், அதுவே நம்முடைய ஆணவத்தைப் பெருக்காமல் பணிவாக வைக்கும், இன்னும் நிறைய கற்றுக்கொள்ளச்சொல்லும். இதைத் திருவள்ளுவர் சொல்கிறார்:

‘ஊண்,உடை, எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல,

நாண்உடைமை மாந்தர் சிறப்பு.'

இந்த உலகத்தில் எல்லாரும்தான் சாப்பிடுகிறார்கள், உடுத்துகிறார்கள், அந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுதான். அவர்களிடமிருந்து நல்லவர்களை வேறுபடுத்திக்காட்டுவது, நாணத்துடன் இருத்தல், தவறு செய்ய நாணுதல், குறையறிவோடு பேச நாணுதல்… இதுவே அவர்களுடைய சிறப்பு.

அப்படியில்லாமல், ‘குறைகுடம் கூத்தாடும்’ என்பதுபோல், சிறிதும் வெட்கமில்லாமல் வாயைத்திறந்தால், அந்தப் பேச்சே உண்மையைச் சொல்லிவிடும்.

‘அறிவுள்ளவர்கள் மத்தியில் செல்லலாம், ஆனால், பயனில்லாத விஷயங்களைப் பேசக்கூடாது’ என்கிறது பழமொழிநானூறு, ‘யாராவது பாணர்கள் தெருவில் சென்று பாட்டுப் பாடுவார்களா? அதுபோல, அறிவுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடியது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் சும்மாயிருங்கள்!'

முன்றுறையரையனார் எழுதிய அந்தப் பாடல்:

‘அகலம்உடைய அறிவுஉடையார் நாப்பண்,

புகல் அறியார் புக்கு, அவர்தாமே இகலினால்

வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுஅன்றோ

பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு.'

இங்கே ‘அகலம்’ என்ற சொல்லைக் கவனியுங்கள், ஆழமாகப் படிப்பது என்று நாம் கேட்டிருக்கிறோம், அகலமாகப் படிப்பதும் உண்டு. அதாவது, பல விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது. அதில் ஓரிரு விஷயங்களைத் தேர்ந்தெடுத்து ஆழமாகச் செல்வது. அப்படிப்பட்டவர்களிடம் வீணாகப் பேசுவதால் அவர்களுக்கும் பயன் இல்லை, நமக்கும் பயன் இல்லை.

சான்றோர்களின் பேட்டிகளைக் கவனித்தால் இந்த விஷயம் தெளிவாகப் புரியும். பேட்டி எடுப்பவர் அறிவுடையவர், அனுபவமுடையவர் என்றால், கேள்விகளும் அவ்வாறே அமையும், அவர்களைப் பேசவிட்டு நிறைய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள உதவும். மாறாக, அவர்களிடம் சென்று வீணான விஷயங்களைக் கேட்டுப் பிரசுரிப்பவர்கள் எல்லாருக்கும் தீங்கு செய்கிறவர்களாகிறார்கள், பாணர்கள் தெருவில் சென்று பாட்டுப் பாடினால், அதனால் நம் குரலின் பலவீனம்தான் வெளியே தெரியும், வேறு எந்தப் பலனும் இருக்காது!

ஒரு வில்லாளி எதிரியைச் சந்திக்கும்போது, தன்னுடைய அம்பை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பான். எந்த அம்பு என்ன செய்யும் என்பதைச் சிந்தித்துச் செயல்படுவான்.

அதுபோல, சொற்களுக்கும் வலிமை உண்டு, அவற்றைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்:

‘திறன்அறிந்து சொல்லுக சொல்லை, அறனும்

பொருளும் அதனின்ஊங்கு இல்.'

சொல்லின் திறமையை அறிந்து சொல்லவேண்டும், அதுவே அறமும் பொருளும்!

ஒருவேளை இரண்டு திறன்மிகுந்த சொற்கள் இருந்தால்?

அவை இரண்டையும் எடைபோட்டு மிகச் சிறந்த சொல்லைதான் சொல்லவேண்டும். நாம் பயன்படுத்தும் சொல்லை வெல்லும் இன்னொரு சொல் இருக்கக்கூடாது. இதுவும் திருவள்ளுவர் சொல்வதுதான்:

‘சொல்லுக சொல்லை, பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து.'

நாம் தேர்ந்தெடுக்கும் சொற்கள் தெய்வத்துக்குச் சமம் என்கிறார் நாமக்கல்கவிஞர், அதாவது, அந்தச் சொல்லின் பொருளை நாம் உணர்ந்து பயன்படுத்தும்போது:

‘சொற்பொருள் அறிந்தோர்க்குஎல்லாம்

சொன்னசொல் தெய்வம்.'

அதாவது, ஒரு பொருளைப் பொருளறிந்து பயன்படுத்தும்போது, அதற்கு நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம். அப்படிச் சிந்திக்காமல் பேசும்போது, இன்றைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு என்கிற தடுமாற்றம் வரும். அப்படிப் பேசுகிறவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள்.

‘குடிகாரன் பேச்சு விடிஞ்சாக்கா போச்சு’ என்று ஒரு பழமொழி உண்டு. இதற்குக் காரணம், குடித்தவன் பொருளுணர்ந்து பேசுவதில்லை, மயக்கத்தில் ஏதோ உளறுகிறான். ஆகவே, அவனுடைய சொற்களுக்கு அவன் பொறுப்பில்லை. இது சுற்றியிருக்கிற எல்லாருக்கும் தெரியும்.

அதுபோல, குடிக்காவிட்டாலும், தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் எதையாவது சொல்லிக்கொண்டிருப்பவர்களும் மதிப்பிழப்பார்கள். அவர்களுடைய வாக்குக்கு அவர்களே மரியாதை தராதபோது, பிறர் எப்படி மதிப்பார்கள்?

அடுத்து, சொல் எந்த மொழியில் இருக்கலாம்?

நமக்குப் பிடித்த, நமக்குத் தேர்ச்சியுள்ள எல்லா மொழிகளிலும் நல்ல சொற்கள் இருக்கின்றன, அவற்றைக் கவனித்துப் பயன்படுத்தலாம்.

ஆனாலும், தாய்மொழிமேல் நமக்கொரு கூடுதல் பாசம் இருக்கும். பாரதியார் சொல்வதுபோல்:

‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே, அதைத்

தொழுது படித்திடடி பாப்பா.'

அதேபாடலில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறார் பாரதியார்:

‘பொய்சொல்லக்கூடாது பாப்பா, என்றும்
புறஞ்சொல்லல்ஆகாது பாப்பா.'

தமிழே ஆனாலும், பொய்சொல்லக்கூடாது, அதற்கு இன்னொரு மொழியில் உண்மை சொல்லிவிடலாம். பிறரைப்பற்றிப் புறம்பேசுவதற்கு எந்த மொழியையும் பயன்படுத்தக்கூடாது.

பேசமட்டுமல்ல, பாடுவதற்கும் தாய்மொழியே சிறந்தது என்கிறார் நாமக்கல்கவிஞர். இசை என்பது, எண்ணமும் ஓசையும் கலந்த ஒன்று, அது கேட்பவர்களுக்குச் சென்று சேரவேண்டுமென்றால், அதற்கு நல்ல சொல் தேவை, தாய்மொழியைப் பயன்படுத்தினால் அது சுவையுள்ள இசையாக அமையும், அவரவர் மொழியில் அவரவர் கேட்கட்டும், அதுவே இன்பம் என்கிறார்:

‘பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட,
இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்ப,
‘பாடுவோன்’ கருத்தைக் ‘கேட்போன்’ பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே இசையாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று,
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்,
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
இசை எனப்படுவதன் இன்பம் தருவது.'

ஒரு திரைப்பாடலில் வைரமுத்துவும் இதையே எழுதுகிறார், பாமரமொழியில்:

‘அர்த்தத்த விட்டுப்புட்டா,
அதுக்கொரு பாவமில்ல,
பழகியபாஷையிலே,
படிப்பது பாவமில்ல!'

சொல்லில் உண்மைத்தன்மை எந்த அளவு முக்கியம்?

உண்மைதான் ஒரு சொல்லை வரையறுக்கிறது. பொய்ச்சொற்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது. திருவள்ளுவர் சொல்கிறார்:

‘எல்லா விளக்கும் விளக்குஅல்ல, சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.'

இங்கே விளக்கு என்ற இடத்தில் சொல் என்றும் பொருத்திப்பார்க்கலாம். உண்மையைச் சொல்கிற சொற்களைதான் சான்றோர் ஏற்பார்கள், பொய்யை ஏற்கமாட்டார்கள்.

பட்டுக்கோட்டையார் ஒரு பாடலில் சொல்வதுபோல:

‘எல்லோரும் நம்பும்படி

சொல்லும் திறன்

இருந்தால்,சொல்லிலே உண்மை இல்லை

உள்ளதை உள்ளபடி

சொல்லும் மனிதனிடம்

உணர்த்திடும் திறமை இல்லை,

உண்மையும் நம்பவைக்கும்

திறனும் அமைந்திருந்தால்

உலகம் அதை ஏற்பதில்லை.'

சிலர், அழகாகப் பேசுகிறார்கள், கேட்பவர்கள் அதை நம்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய பேச்சில் உண்மை இருப்பதில்லை.

இன்னும் சிலர் உண்மையை அப்படியே சொல்கிறார்கள், ஆனால், அதைக் கேட்பவர்களுக்குப் புரியவைக்கும் திறமை அவர்களுக்கு இல்லை.

மூன்றாவதாகச் சிலர், உண்மையைப் பேசுகிறார்கள், அதை நம்பவைக்கும்படி சொல்கிறார்கள், ஆனால், உலகம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அது பொய்களைதான் நம்ப விரும்புகிறது.

அப்படியானால், நாம் என்ன செய்யவேண்டும்?

பொய் சொல்கிற ஒருவன் தன்னுடைய சொல்வன்மையால் அந்தப் பேச்சை மெய்போல நம்பவைக்கலாம், மெய் சொல்கிற ஒருவனுக்குச் சொல்லத்தெரியாமல் அந்தப் பேச்சு நமக்குப் பொய்போலத் தோன்றலாம். ஆகவே, இந்த இருவருடைய பேச்சையும் ஏழுமுறை கேட்கவேண்டும், அதன் அடிப்படையில் தீர்மானிக்கவேண்டும் என்கிறது வெற்றிவேற்கை. இதனை எழுதிய அதிவீரராமபாண்டியன் நீதிபதிகளுக்குதான் இந்த அறிவுரையைச் சொல்கிறார். ஆனால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றலாம், ஏழுமுறை இல்லாவிட்டாலும், ஓரிருமுறை கேட்டுத் தீர்மானித்தால் உண்மை, பொய்யை அறியலாம்:

‘பொய்உடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே,
மெய்உடை ஒருவன் சொலமாட்டாமையால்
பொய்போலும்மே,
இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரை.

சிலர் பேசவேண்டிய நேரத்தில் பேசமாட்டார்கள். அதனால் ஒருவருக்கு நன்மை விளையும் என்பது தெரிந்தால்கூட, நமக்கு எதற்கு வம்பு என்று சும்மா இருந்துவிடுவார்கள்.

‘இப்படி மௌனமாக இருப்பதும் தீமை செய்வதும் ஒன்றுதான்’ என்கிறார் குமரகுருபரர். அதாவது, நாமாகத் தவறு செய்யாவிட்டாலும், ஒரு தவறு நடக்கும்போது பேசாமல் இருப்பது அதை ஆதரிப்பதாகும், ஆகவே, அந்தச் செயல் நாமே தவறு செய்ததைப்போலாகும் என்பதைச் சொல்லும் அந்த ‘நீதிநெறி விளக்க’ப் பாடல்:

‘சொல்வன்மை உண்டுஎனின் கொன்னே விடுத்துஒழிதல்
நல்வினை கோறலின் வேறுஅல்ல, வல்லைத்தம்
ஆக்கம் கெடுவதுஉளது எனினும் அஞ்சுபவோ
வாக்கின் பயன்கொள்பவர்.'

உங்களிடம் சொல்வன்மை இருந்தால், அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்துங்கள். அப்படியில்லாமல் சும்மா இருப்பது, அதாவது மௌனமாக இருப்பது, நல்லவற்றைக் கெடுப்பதற்குச் சமம். அதனால் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைத்தாலும், அஞ்சாதீர்கள், சொல்லின் நன்மைகளை உணர்ந்தவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள், பேசவேண்டியவற்றுக்குப் பேசுவார்கள்.

சொல்லில் சோர்வு இருக்கக்கூடாது என்று ‘முதுமொழிக்காஞ்சி’யில் சொல்கிறார் மதுரைக்கூடலூர்கிழார்:

‘சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப.'

அதாவது, ஒருவனுடைய சொற்களில் சோர்வு வந்துவிட்டால், அதாவது பிழை தெரிந்துவிட்டால், அவனுடைய மற்ற தவறுகளும் வெளியே தெரிந்துவிடும். என்னதான் சிறப்பாகச் செயல்படுவதுபோல் நடந்துகொண்டாலும், அதைச் சரியாகச் சொல்லாவிட்டால், அவனது திறமையே கேள்வி கேட்கப்படும், அவன் சோர்வானவனாகவே அறியப்படுவான்.

ஆகவே, சோர்வின்றிப் பேசவேண்டும், திருவள்ளுவர் சொல்வதுபோல்:

‘சொலல்வல்லன், சோர்விலன், அஞ்சான், அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.'

நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும், எவ்விதத்திலும் சோர்வு இருக்கக்கூடாது, அஞ்சாமல் பேசவேண்டும், துணிவோடு செயல்படவேண்டும், அப்படிப்பட்டவனை யாரால் வெல்ல இயலும்?

அதனால்தான், அனுமனை முதன்முறையாகச் சந்தித்தபோது ராமன் ‘சொல்லின் செல்வன்’ என்று அவனைப் பாராட்டுவதாக எழுதுகிறார் கம்பர். இன்னொரு பக்கம் பாமர மக்கள், ‘பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே, பல் உடைவதும் சொல்லாலே’ என்கிறார்கள்.

நல்லதைப் பேசினால், பல்லக்கில் ஊர் நம்மை உயர்த்தும், அதற்கான அறிவும் கட்டுப்பாடும் நம்மிடம் இருக்கவேண்டும், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com