பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 13

தொடர்ந்து உயர்ந்தநிலையில் இருத்தல், எந்தத் துன்பம் வந்தாலும் தன் நிலையிலிருந்து தாழாமல் இருத்தல் என்று சொல்லலாம்.
Published on
Updated on
6 min read


உயிரைவிட மானம் பெரியது என்பார்கள்.

அதென்ன மானம்?

தொடர்ந்து உயர்ந்தநிலையில் இருத்தல், எந்தத் துன்பம் வந்தாலும் தன் நிலையிலிருந்து தாழாமல் இருத்தல் என்று சொல்லலாம். ஆனால், அது இந்தச் சிறிய வரையறைக்குள் உட்கார்ந்துவிடுகிற விஷயம் அல்ல.

புறநானூற்றில் ஓர் அரசன் கைது செய்யப்படுகிறான். அவனுக்குத் தண்ணீர் தாகம் எடுக்கிறது. தன்னைக் கைது செய்தவர்களிடம் கேட்கிறான். அவர்கள் சற்றே நேரம் தாழ்த்தித் தண்ணீர் கொடுக்கிறார்கள். அவன் அதைக் குடிக்க மறுத்துவிடுகிறான். அவமானத்துடன் வரும் இந்தத் தண்ணீரைக் குடித்து உயிர் வாழ வேண்டுமா என்கிறான்.

உண்மையிலேயே அந்தப் பகைவர்கள், அவனை அவமானப்படுத்துவதற்காகத்தான் தண்ணீரைத் தாமதமாகக் கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது. அந்த அரசன் இப்போது கைதி. மற்ற கைதிகளுக்கெல்லாம் எப்படித் தண்ணீர் தருவார்களோ அதுபோல்தான் அவனுக்கும் தந்திருப்பார்கள். ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது அவமானமான செயல். அதை வாங்கிக் குடித்தால், இதற்குமுன் இருந்த நிலையிலிருந்து அவன் தாழ்ந்துவிடுவான். அதை அவன் விரும்பவில்லை.

சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடிய அந்த வரிகள்:

‘மதுகைஇன்றி, வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே?’

மன்னனின் இந்த ‘மான’ வரையறையை எல்லாரும் பின்பற்ற இயலுமா?

சிரமம்தான். ஆனால், முற்றிலும் இயலாது என்றும் சொல்வதற்கில்லை. இன்றைக்கும் பலர் கடைக்குச் சென்று எதையாவது ஆர்டர் செய்துவிட்டு, அது உடனே வராவிட்டால் கோபப்பட்டுக்கொண்டு பசியோடு வெளியேறுவதைப் பார்க்கிறோம்.

ஆனால் இப்போது, அதை ‘மானம்’ என்றா சொல்கிறோம்? ‘ரெண்டு நிமிஷம் கழிச்சுச் சாப்பிட்டா என்ன? ஏன்ய்யா இப்படிக் கோவப்படறீர்?’ என்றல்லவா பேசுகிறோம்?

புறநானூற்றில் மரியாதைக்குரிய ஒரு குணமாகக் கருதப்பட்ட விஷயம், இன்றைக்கு வெறும் ‘கோபமாக’ நினைக்கப்படுவது ஏன்? தான் இருக்கும் நிலையிலிருந்து இறங்குவது அவ்வளவு இலகுவாகிவிட்டதா? அதனால் பிரச்னையில்லை என்று நினைக்கத் தொடங்கிவிட்டோமா?

இங்கே ‘நிலை’ என்பதன் வரையறையைக் கவனிக்க வேண்டும். தினமும் வேளா வேளைக்குச் சாப்பிட்ட ஒருவர், என்றைக்காவது சற்றே தாமதமாகச் சாப்பிடவேண்டி இருக்கிறது, அல்லது உணவின் சுவை குறைந்துவிடுகிறது. அதுவும் நிலைமாற்றம்தான். இன்னொருவர் தினமும் உண்மையே பேசுபவர். சூழ்நிலை கருதிப் பொய் பேசுகிறார். அதுவும் நிலைமாற்றம்தான். இந்த இரண்டில் எதில் உண்மையான ‘மானக்குறைவு’ ஏற்படுகிறது? எதை எண்ணி ஒருவர் கூச வேண்டும்?

அந்த மன்னனுக்கு அரை நிமிடம் கழித்துத் தண்ணீர் தரப்படுவது அவமானமாகத் தோன்றியிருக்கிறது. ‘நேர்ல பத்திரிகை வைக்கலை’ என்று சில உறவினர்கள் முறைத்துக்கொள்வதுபோல.

அதே திருமணத்தில் வேறு சில உறவினர்கள் பத்திரிகையைக்கூட எதிர்பார்க்காமல் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதில்லையா? ஒருவேளை அவர்கள் ஏதோ காரணத்துக்காக இழிவுபடுத்தப்பட்டாலும், அதை விழுங்கிக்கொண்டு திருமணம் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக முனைவதில்லையா? அதற்காக அவர்கள் ‘மானமில்லாதவர்கள்’ என்று சொல்லிவிட இயலுமா?

ஆக, மானக்குறைவு என்பது ஒருவருக்குள் உறுத்த வேண்டும். அதற்குத் தாங்கள் காரணமாக அமைந்தால், அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஒருவேளை பிறர் காரணமாக அமைந்தால், அவர்களிடம் சீறுவது தகுமா, அல்லது வேறுவிதத்தில் தான் இழந்த கௌரவத்தைத் திரும்பப் பெற இயலுமா என்று யோசிக்க வேண்டும்.

நாலடியாரில் ஒரு பாடல், ‘தன்மானமுள்ளவர்கள் தங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும், உடம்பெல்லாம் வற்றிப்போய் வெறும் எலும்பு மட்டும் மீதமிருந்தால்கூட, அதைத் தகுதியில்லாதவர்களிடம் சென்று சொல்லமாட்டார்கள்’ என்கிறது.

இதன் உள்ளர்த்தம், ஒருவேளை அவர்களுடைய பிரச்னைக்கு அந்தத் தகுதியில்லாதவர்களே காரணமாக இருக்கலாம். அப்போதும் அவர்களிடம் சென்று அதைச் சொல்லாமலிருப்பதைத் தன்மானத்துக்கான வரையறையாகக் கருதலாம்.

இந்தக் கோணத்தில் புறநானூற்று அரசனின் பிரச்னையைக் கவனித்தால், ‘நீ எனக்கு உடனே தண்ணீர் தரவில்லை. அதனால் நான் இதைக் குடிக்கமாட்டேன். எனக்குத் தாகம் எடுத்தாலும் பரவாயில்லை. உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை’ என்றெல்லாம் அவன் அந்தப் பகைவர்களிடம் வீரவசனம் பேசியிருப்பானா? பாடலின் தொனியைக் கவனித்தால், அவன் தனக்குள் பேசிக்கொள்வதுதான் இது என்று புரிகிறது.

ஆக, அவமானப்படுத்தியவனிடம் சீறுவது தன்மானம் அல்ல. அதனால் தனக்கு நேர்ந்த குறைவைத் தானே சரிசெய்துகொள்வதுதான்!

ஒருவேளை, அந்தக் காவலர்கள் அரசனைக் கவனித்து, ‘உங்க முகம் வாடியிருக்கே, தண்ணி குடிக்கலையா? தாகமா இருக்கா?’ என்று கேட்டால்?

அல்லது, அரசனோடு கைதாகியிருக்கும் ஓர் அமைச்சர் இப்படிக் கேட்டால்?

அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது நாலடியார். மானமுள்ளவர்கள் பிறரிடம் தங்கள் குறைகளைச் சொல்லாமலிருப்பது மட்டுமல்ல, காட்டக்கூட மாட்டார்கள்.

அதாவது, வாயைத் திறக்காமலே அவர்கள் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைப் படித்துவிடுகிறவர்களால்கூட, தன்மானமுள்ளவர்கள் தங்களுக்குள் வைத்திருக்கும் உறுதியைப் படிக்க இயலாதாம். சொற்களால் மட்டுமல்ல, உடல்மொழியால், முகக்குறிப்புகளால்கூட அதைச் சொல்லிவிட மாட்டார்களாம்.

‘என்பாய்உகினும் இயல்புஇலார் பின்சென்று
தம்பாடுஉரைப்பரோ தம்உடையார்; தம்பாடு
உரையாமைமுன் உணரும் ஒண்மைஉடையார்க்கு
உரையாரோ தாம்உற்ற நோய்.’


திருக்குறளும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு வரையறையை வைக்கிறது. ‘உயரமாகச் செல்லும்போது, பணிவு வர வேண்டும், தாழும்போது, உயர்வு வர வேண்டும்’ என்கிறது:

‘பெருக்கத்து வேண்டும் பணிதல், சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.’

மறுபடியும் புறநானூற்று அரசனின் நிலையை இங்கே சிந்திக்க வேண்டும். அவன் ‘தாமதமாகக் கொடுத்த தண்ணீரைக் குடிக்கமாட்டேன்’ என்று சொன்னதை மட்டும் நாம் கவனித்தால், ‘என்ன பெரிய அலட்டல்’ என்றுகூடத் தோன்றலாம். ஆனால், பெருக்கத்தில் அவன் எத்தகைய பணிவுடன் இருந்திருப்பான் என்று யோசித்துப் பார்த்தால், இப்போது சுருக்கத்தின்போது அவன் செய்வது அலட்டல் அல்ல, உயர்வு என்று புரியும்.

அதெப்படி ஓர் அரசன் பணிவாக இருக்க இயலும்?

பணிவு என்பது தாழ்வு அல்ல. அதுவும் ஓர் அவசியமான குணமே. முடியரசன் சொல்கிறார்:

‘பணிந்து நடக்க வேண்டுமென்று எண்ணித் தாழ்வு மனப்பான்மை உடையவனாக, அடிமையுள்ளம் உடையவனாகப் பழகிவிடாதே. பணிவு வேறு, தாழ்வு வேறு’.

‘பெருமித உணர்வு உடையவனாக இரு. பெருமிதமாக இருக்க வேண்டுமென்று செருக்குடையவனாக மாறிவிடாதே. பெருமிதம் வேறு, செருக்கு வேறு. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து நட’.

சுருக்கத்தின்போது, அதாவது, நிலை தாழ்ந்திருக்கும்போது, அதையே ஒரு சமாதானமாகச் சொல்லித் தவறு செய்துவிடுகிற வாய்ப்புகள் அதிகம்.

உதாரணமாக, ஒருவரிடம் நிறைய பணம் இருக்கிறது, அப்போது அவர் நேர்மையாக வாழ்கிறார். ஏதோ பிரச்னையில் அவருடைய குடும்பம் கஷ்டப்படுகிறது, அதைச்சொல்லி அவர் திருடுகிறார்; பொய் பேசுகிறார்; பிறரை ஏமாற்றுகிறார் என்றால், அது ஏற்கப்படுமா?

இருபத்தைந்து வருடம் நேர்மையாக வாழ்ந்தவர், இப்போது ஒரு சிறிய தவறு செய்துவிடுகிறார், மன்னிக்கக்கூடாதா?

‘குன்றின்அனையாரும் குன்றுவர், குன்றுவ
குன்றிஅனைய செயின்.’

என்கிறது திருக்குறள். குன்றுபோல் குணத்தில் உயர்ந்திருக்கிற ஒருவர், தன் நிலை தாழ்ந்து குன்றிமணி அளவு பிழை செய்தாலும், அவர்களுடைய ஒட்டுமொத்த நற்பெயரும் கெட்டுப்போய்விடும்.

ஆக, பிழையின் அளவு முக்கியமில்லை. பிழை செய்தார்கள் என்பதுதான் முக்கியம். அதற்குக் காரணம், சுருக்கத்தில் உயர்வின்மை. சிறு சபலமும் இழிவுக்குக் காரணமாகிவிடும்.

சுருக்கத்தின்போது நாம் எவ்வாறு இருப்போமோ, யாருக்குத் தெரியும்? சுருக்கமே வராமல் தடுப்பதுதான் நல்ல விஷயம். அதற்கு என்ன வழி?

ஔவையார் ‘நல்வழி’யில் இதற்கு ஒரு நல்லவழியைச் சொல்கிறார்:

‘ஆன முதலில் அதிகம் செலவுஆனான்
மானம் அழிந்து, மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய், ஏழ்பிறப்புத் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம், நாடு.’

தனக்குக் கிடைக்கும் பொருளைவிட அதிகம் செலவு செய்கிறவனுடைய மானம் அழியும்; மதி கெடும். அவன் எந்தத் திசையில் போனாலும் எல்லாரிடமும் திருடுவான். ஏழு பிறப்புகளுக்கான தவறுகளை இந்த ஒரு பிறப்பில் செய்துவிடுவான். நல்லவர்களுக்குக் கெட்டவனாக இருப்பான். ஆகவே, வரவுக்குள் செலவு செய்க.

இதையே கண்ணதாசன் வேடிக்கையாகச் சொல்கிறார்:

‘வரவு எட்டணா,
செலவு பத்தணா,
அதிகம் ரெண்டணா,
கடைசியில் துந்தனா!
நிலைமைக்குமேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது.
அளவுக்குமேலே ஆசை
உள்ளதும் கிடைக்காது’.


கண்ணதாசன் சொல்லும் ‘உள்ளதும் கிடைக்காது’ என்ற நிலைதான், மானக்குறைவு, இழிவு.

அதிகம் செலவுசெய்வதுதான் மானம்குறைவதற்கு ஒரே காரணமா?

இது ஓர் உதாரணம்தான். இதுபோல் நீதி நூல்களில் எண்ணற்ற ‘இழிவுக்குக் காரணங்கள்’ குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் இந்நிலையைத் தூண்டக்கூடும்.

மானக்குறைவு வந்தால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

பாரதியார் சொல்வது:
 


‘மானம் சிறிதுஎன்றுஎண்ணி,
வாழ்வு பெரிதுஎன்றுஎண்ணும்
ஈனர்க்கு உலகம்தனில், கிளியே
இருக்க நிலைமைஉண்டோ?’


மானம்தானே போச்சு என்று இருந்துவிடக்கூடாது. அது ஈனத்தனம். அடடா, மானம் போயிற்றே என்று பதற வேண்டும். வாழ்வையே தந்தும் அதனை மீட்கத் தயாராக வேண்டும்.

இதைச் சொல்வதற்காகத்தான், ‘உயிரைவிட மானம் பெரியது’ என்கிறார்கள். திருக்குறளில்:

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்,
உயிர்நீப்பர் மானம் வரின்.’

கவரிமா என்ற விலங்கு (கவரிமான் அல்ல), அதன் மயிர் நீக்கப்பட்டால் குளிர் தாங்காமல் இறந்துவிடும். அதுபோல, பெருமை நீங்கினால்/ மானக்குறைவு வந்தால், உயர்ந்தவர்கள் உயிரையே இழக்கத் துணிந்துவிடுவார்கள்.

கம்பர், அமைச்சர்களின் பெருமையைச் சொல்லும்போது, இதே உவமையைப் பயன்படுத்துகிறார்:

‘மானம் நோக்கின்,
கவரிமாஅனைய நீரார்.’

மானம் இழந்தால் உயிர்வாழக்கூடாது என்று சொல்வது, ஏதோ மிரட்டல்போல் இல்லையா?

இதன் உண்மையான பொருள், மானக்குறைவை உயிரிழப்பைவிடப் பெரிய குறையாக எண்ண வேண்டும். அதனை சரிசெய்வதற்கான முனைப்பில் முழு வேகத்துடன் இறங்க வேண்டும் என்பதுதான்.

ஒரு திரைப்பாடலில் வாலி அழகாக எழுதுகிறார்:

‘தன்மானம் உள்ள நெஞ்சம், எந்நாளும் தாழாது,
செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது,
காவேரித் தாய்மடியில் வாழ்ந்த பிள்ளையடி,
காற்றாடிபோலிருந்து வீழ்வதில்லையடி.
அன்பான உறவுகண்டு கூடுகட்டி ஆடுவேன்,
அந்நாளில் நான்இருந்த வாழ்க்கையைத்தான் தேடுவேன்,
அன்று சொன்னான் பாரதி,
சொன்ன வார்த்தைகள் தோற்றதில்லையடி,
என் எண்ணம் என்றைக்கும்
தோல்விஎன்பதை ஏற்றதில்லையடி’.

என்னவொரு தன்னம்பிக்கை தொனிக்கும் வரிகள்! அதே மானக்குறைவுதான், அதே உயர்வான நெஞ்சம்தான். ஆனால், இப்போது அது உயிர்விடுவேன் என்று சொல்வதில்லை. ‘காற்றாடிபோல் வீழமாட்டேன்’ என்கிறது. ‘அந்நாளில் நான் இருந்த வாழ்க்கையைத் தேடுவேன்’ என்கிறது.

காற்றாடி மேலும் கீழுமாகத் தடுமாறும். ஆனால், மனிதமனம் தனது உயர்வுநிலையை மட்டுமே தேடும். எண்ணத்தில்கூட தோல்வி என்பதை ஏற்காது, இதுதான் உயர்வுச் சிந்தனை!

தன்மானம் தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கும் பொருந்தும்.

உதாரணமாக, சுதந்தரப் போராட்டம் என்பது என்ன? நாங்கள் முன்பு எங்களையே ஆண்டுகொண்டிருந்தோம். இப்போது அதிலிருந்து தாழ்ந்துவிட்டோம். இன்னொருவர் எங்களை ஆளுகிறார். அதை நாங்கள் ஏற்கமாட்டோம். நாங்கள் பழைய உயர்ந்தநிலையை எட்ட வேண்டும் என்று நினைத்துப் போராடுவதுதானே? சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இப்படி நினைத்தால்தானே தெருவுக்கு வந்து போராடுவார்கள். பொது எதிரியை முனைப்போடு விரட்டுவார்கள்?

ஒரு திரைப்பாடலில் முத்துலிங்கம் இதை எழுதுகிறார்:

‘தாயகத்தின் சுதந்தரமே எங்கள் கொள்கை,
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்!’

சுதந்தரத்தைக் கொள்கை என்கிறார். அதனைப் பெறுவதற்கான செல்வம், ஆயுதம், கருவி... எல்லாமே தன்மானம்தான். அது இருந்தால், சுதந்தரத்தைப் பெற்றுவிடலாம்:

‘ஒற்றுமையால் பகைவர்களை ஓடவைப்போம்,
உழைப்பாலே நம்நாட்டை உயர்த்திவைப்போம்,
கொள்கைவீரர் தியாகங்களை ஏற்றிடவேண்டும்,
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிடவேண்டும்’.

இவையெல்லாம் தன்மானம் என்கிற உணர்வோடு சேரும்போது, சுதந்தரத்தைப் பெற்றுத் தருகின்றன. அந்த நேரத்தில் மற்ற செல்வங்களைத் தேடக்கூடாது என்கிறார் பாரதியார்:

‘நாட்டில் அவமதிப்பும்
நாண்இன்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்பும்கொண்டே, கிளியே,
சிறுமையடைவாரடி!’

அவமானம் எல்லாருக்கும் நேரக்கூடியதுதான். அதையே தூண்டுதலாகப் பயன்படுத்தி உழைத்தால், தன்மானத்தின் துணையோடு பெரிய வெற்றியடையலாம் என்கிறது வைரமுத்துவின் திரைப்பாடலொன்று:

‘இன்றுகண்ட அவமானம்,
வென்றுதரும் வெகுமானம்,
வானமே தாழலாம்,
தாழ்வதில்லை தன்மானம்!’

அதனால்தான், புதிய ஆத்திச்சூடியில் பாரதி சொல்கிறார்:

‘மானம் போற்று!’

மானஉணர்வு, அதாவது, என்னுடைய நிலை உயர்வானது என்ற எண்ணம், அதிலிருந்து தாழமறுக்கும் குணம்தான் மனிதனைத் தொடர்ந்து முன்னேற வைக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால்தான் அதை உயிரினும் மேலாகக் குறிப்பிடுகிறார்கள்:

‘நம்உயிர்க்குமேலே, மானம், மரியாதை,

மானம்இழந்தாலே, வாழத்தெரியாதே!’

என்று ஒரு கிராமத்துப் பாடலில் எழுதுவார் வாலி. மானம் இழந்த நிலை யாருக்குமே இயல்பல்ல. அதை யாரும் விரும்புவதில்லை. பழைய நிலைக்கு (அதாவது, உயர்வுக்கு) திரும்ப வேண்டும் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். மானம் இழந்து கிடைக்கும் எந்த நன்மையையும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.

நாலடியாரில் ஒரு பாடல்:

‘இடம்உடைய

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் மழுங்கவரின்.’

அந்த வானமே கிடைத்தாலும், மானக்குறைவோடு வரும் செல்வத்தை மறுக்க வேண்டும். மறுபடியும் புறநானூற்று மன்னன் உதாரணத்தை நினைத்துக்கொள்ளலாம். அவன் தண்ணீரை மறுத்தான், சிலர் உணவை மறுக்கிறார்கள், பதவியை மறுக்கிறார்கள், செல்வத்தை மறுக்கிறார்கள், உயிரைக்கூட மறுக்கிறார்கள், அது மானக்குறைவோடு வருவதால்.

இதற்குமாறாகச் செயல்படும் ஈனர்களை, வாலி ஒரு திரைப்பாடலில் சாடுகிறார்:

சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்,
ஒரு மானம் இல்லை, அதில் ஈனம் இல்லை, அவர்
எப்போதும் வால்பிடிப்பார்.’

ஒருவர் தன்னுடைய நிலையிலிருந்து தாழ்வது எப்போதும் சிரமமான ஒன்றுதான். அப்போது அவர்களுடைய நிழல்கூட அவர்களை மதிக்காது. அந்த நேரத்திலும், தன்னை மதிக்காதவர்களிடம் உதவி கேட்காமல் இருப்பதே சிறந்தது என்று ஔவையாரைச் சுட்டிக்காட்டிக் கண்ணதாசன் சொல்கிறார்:



உயர்ந்த இடத்தில் இருக்கும்போது,
உலகம் உன்னை மதிக்கும், உன்
நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால்,
நிழலும்கூட மிதிக்கும்.
மதியாதார் தலைவாசல்
மிதியாதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது,
அதில் அர்த்தம் உள்ளது.’

கண்ணதாசன் குறிப்பிடும் ஔவையின் வரிகள், இதனை இன்னும் தெளிவாக விவரிக்கின்றன:

‘மதியாதார் முற்றம் மதித்து ஒருகால்சென்று
மிதியாமை கோடி பெறும்,

உண்ணீர், உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்,

கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்,

கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடை நா
கோடாமை கோடி பெறும்.’

எத்தனை கோடி கொடுத்தாலும், நா வளையக்கூடாது. அதாவது, தான் சொன்னதை மீறி நடக்கக்கூடாது என்கிறார் ஔவையார். பிறர் ஏற்படுத்தும் மானக்குறைவைவிட, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் மானக்குறைவு அல்லவா அது!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com