/

17. தொடர்ந்து செய்...

என்ன எழுதலாம்? என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் லோட் செய்யலாம்.'

News image
Updated On :2 செப்டம்பர் 2015, 5:46 am

செ.சு.மலரடியான்

Story image

'ஒரு வெள்ளைத்தாளில் என்ன இருக்கும்?'

'என்னது, வெள்ளைத்தாளில் என்ன இருக்குமா? '

'அதைவிடுங்கள். ஒரு  புதிய சி.டி. யில் என்ன இருக்கும்?’

'புதிய சி.டி என்றால்.. காலியானதா அல்லது ஏதும் இருப்பதா?'

'புதிய, எம்ட்டி சி.டி. (Empty CD) தான்.'

'என்ன விளையாடுகிறீர்களா? நீங்களே வெள்ளைப் பேப்பர் என்கிறீர்கள், காலி சிடி என்கிறீர்கள். பிறகு அதில் என்ன இருக்கும் என்று கேட்கிறீர்கள். அவற்றில் என்ன இருக்க முடியும்! '

'உங்கள் வியப்பு சரியானதுதான்.  வேண்டும் என்றுதான் அப்படிக்கேட்டேன்.  இப்போது வேறு ஒரு கேள்வி. அந்த வெள்ளைப் பேப்பரில் என்ன எழுதலாம்? அந்த சிடியில் என்ன ஏற்றலாம் (லோட் செய்யலாம்)?'

'இது… கேள்வி.  என்ன எழுதலாம்? என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் லோட் செய்யலாம்.'

'இந்தப் பேப்பரும், புதிய சிடி யும் எதற்கு ஒப்பு?'

'இது தெரியாதா? சுற்றி வளைத்து எங்கே வருவீர்கள் என்றும் தெரியுமே!  இவை இரண்டும் நமது   மூளைக்குத்தான் ஒப்பு.'

'அதேதான்.  இந்த வெள்ளைப் பேப்பர், எம்டி சிடி போன்ற கொள்திறன் கொண்ட , வாங்கு சக்தி பெற்ற மூளையுடன்தான்  எல்லோருமே இந்த உலகிற்குள் வருகிறோம். அதில் எதைவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். எவரும் எழுதிக்கொள்ளலாம். சிலர் எழுதிக்கொள்கிறார்கள். சிலர் எழுதிக்கொள்வதில்லை.'

*

பல்கலைகழகம் ஒன்றில் துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முனைவர் பட்டம் பெறுவதற்காக படித்துக்கொண்டும் ஆராய்ச்சிகள் செய்துகொண்டும் இருந்த  அவரது கல்லூரிக் காலம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அவர் முனைவர் பட்டம் பெற பதிவு செய்துகொண்டு மாதங்கள்.. அல்ல ஆண்டுகளே சில உருண்டோடி விட்டனவாம். செய்ய வேண்டிய ஆராய்ச்சியை செய்து விவரங்கள் சேகரித்துவிட்டார். ஆனால், அவற்றை அலசி ஆராய வேண்டும். தவிர, மொத்த ஆய்வறிக்கை  (தீசிஸ்) யையும்  எழுதவேண்டும். அதற்கு நேரமே கிடைக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததாம்.

காரணம், அவரது துணை  பேராசிரியர் பணி. அவரது கல்லூரியில் அவருக்கு ஏராளமான பொறுப்புகள். தவிர, திருமணம் ஆகி குடும்ப பொறுப்பும் சேர்ந்துகொண்டிருந்த நேரம். 

சேகரித்ததை ஆராய்ந்து (அனலைஸ் செய்து), எழுதுவதுதான் அவர்  இறுதியாக செய்து முடிக்கவேண்டிய வேலை. அது முடியாமல் இழுத்துகொண்டே கிடந்தது. ஒரு முறை என்ன ஆனாலும் சரி என்று ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து எழுதி முடிக்க முடிவெடுத்தார். 

வீட்டில் ஒரு அறையை இதற்காக ஒழுங்குபடுத்திக்கொண்டார். தனி அறை. மனைவியிடமும் பேசிவிட்டார். அதனால் மனைவியின் முழு ஒத்துழைப்பு. காலையில் அந்த அறைக்குள் போய் உட்கார்ந்துவிடுவார். இரவு வெகு நேரம் வரை அதே வேலைதான்.

Story image

போன் பேசுவது, வேறு எவரையும் பார்ப்பது, வெளியில் போவது போன்ற எதுவும் கிடையாது. முழு மூச்சாக அதே வேலையைச் செய்திருக்கிறார்..

அவரது ஆராய்ச்சிக்கான வழிகாட்டியான கைடே (Guide)  ஆச்சரியப்படும் விதம் கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேலை முடிந்துவிட்டதாம்.  மறுநாள் ஒருமாத விடுப்பு முடிந்து அவர்  கல்லூரிக்குப் போகவேண்டும். அவரது ஆசிரியப் பணியைச் செய்யவேண்டும்.

இரவு மணி ஒன்று. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருக்கிறார். கவனித்த மனைவி அவரைக் கேட்டிருக்கிறார்.

'என்ன யோசனை பண்ணிகிட்டிருக்கீங்க?’

'எல்லாம் நாளைக்கு வேலைக்குப் போகவேண்டுமே என்பது பற்றித்தான்’

'அதைப்பற்றி என்ன கவலை. ஒருமாதம் மருத்துவ விடுப்பு அனுமதியுடன்தானே எடுத்திருக்கிறீர்கள்!  அதில் என்ன பிரச்சனை வரும் என்று நினைக்கிறீர்கள்?’

'வேலையில் ஏதும் பிச்சனை இல்லை. நாளை முதல் இந்த முனைவர் ஆராய்ச்சியைத் தொடர முடியாதே அதுபற்றித்தான் கவலையாக இருக்கிறது’

'அதற்கென்ன செய்ய? வேலையையும் பார்க்க வேண்டும் அல்லவா!  நீங்கள்தான் எழுதவேண்டியதில் பெரும்பகுதியை முடித்துவிட்டேன் என்கிறீர்களே. பிறகென்ன, ஞாயிற்றுக் கிழமைகள், பிற விடுமுறை தினங்கள் மற்றும் தினசரியே ஒன்றிரெண்டு மணிநேரங்கள் என்று இந்த வேலையை செய்தால், ஒரு மாதத்தில் முடிந்துவிடாதா என்ன?’

'முடியாது’

'அப்படியா?  அவ்வளவா பாக்கி இருக்கிறது!’

'அவ்வளவு பாக்கி இல்லைதான். ஆனால் வேலைக்குப் போய்விட்டால்  இதை முடிக்க இன்னும் ஆறுமாதம் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்க்கில்லை’

வேலைக்குப் போய்விட்டால்.. என்பதை அவர் அழுத்திச் சொல்லியிருக்கிறார்.

அதை கவனித்துவிட்ட மனைவி கேட்டிருக்கிறார், 'வேலைக்குப் போகாமல் இதே வேலையைச் செய்தால்?’

'ஒரு வாரத்தில் முடித்துவிடுவேன்’

'அப்படியா? அதெப்படி சாத்தியம்?’

'சூட்டோடு சூடாக.. இதே நினைப்பில் இருக்கையில் என்பது மட்டுமல்ல. இப்போது இந்த விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட புரிதலில் இருக்கிறேன். தெளிவான ஒரு சிந்தனையில் இருக்கிறேன். இதைவிட்டு  விலகினால், வேறு சிந்தனைகள் உட்புகுந்தால், இந்த தெளிவு போய்விடும். விட்ட நூலைப் மீண்டும் பிடிக்க அதிக பிரயாசைப் படவேண்டியிருக்கும். அதனால்  கூடுதல் நேரமாகும்.’

'அப்படியென்றால் தைரியமாக இன்னும் ஒருவாரம் என்ன, பத்துநாள் விடுப்பு எடுங்கள். சம்பளம் பிடித்துக்கொண்டாலும் பரவாயில்லை. வேலைக்கே தொந்திரவு வந்தாலும் பரவாயில்லை. ஆனால் முடித்துவிடுங்கள். வருவதைப் எதிர்கொள்வோம்’

தெளிவடைந்தார். விடுப்பு எடுத்தார். முடித்து விட்டார்.

இதுதான் உள்நோக்கிய பயணம் என்பது. ஒன்றைப் பற்றியே யோசிக்கையில் நமது மூளைக்கு உள்ளாக நாம் பிரயாணம் செய்வது போலதான். அங்கே காணாததை எல்லாம் காண்போம்.  இடையில் நிறுத்திவிட்டு வேறு ஒன்றில் கவனம் செலுத்தும்போது, போன பாதையில் இருந்து வெளியேறி வேறு இடம் போவது போல. மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்க நேரமாகும் சமயத்தில்  பிடிக்க முடியாமலும் போகலாம்.

இதனால்தான் நிறுவனங்களில் சிலவிதமான பயிற்சிகளுக்கு 'ரெசிடென்ஷியல் புரோகிராம்’ என்கிறார்கள்.  மூன்று நாள், ஒரு வாரம் இரண்டு வாரப் பயிற்சிகளின் போது, 'வீட்டுக்குப் போகவேண்டாம். பயிற்சி நடக்கும் இடத்திலேயே சக பயிற்சியாளர்களுடனேயே இருங்கள். அதைப்பற்றியே சிந்தியுங்கள், பேசுங்கள், குழு வேலைகள்  செய்யுங்கள்’  என்பது போல சொல்கிறார்கள்.

Story image

  சில மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் அப்போதும் இப்போதுமாக புரட்டும் புத்தகத்தில் இருப்பவை புரியாமலும் தலையில் ‘ஏறாமலும்’ இருக்கும். ஆனால் அதே புத்தகத்தில் இருக்கும் பாடங்கள் தேர்வு நெருங்கிவிட்ட நேரம் தொடர்ந்து படிக்க, புரியும், மனதில் பதியும். தேர்வில் உதவும்.

Story image

'இதைப்போல ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே படித்திருந்தால் எவ்வளவு வேறுபாடு வந்திருக்கும்!’ என்று அந்த மாணவரே நினைப்பார். அதே மாணவன்தான். அதே புத்தகம்தான். அதே பாடங்கள்தான்.  வேறுபாடு எங்கிருந்து வந்தது?

கவனக் குவிப்பு மட்டுமே வேறுபாடு.

கவனக் குவிப்பின்போது என்ன நடைபெறுகிறது?  ஒரு ஸ்குரு ஆணியை மரப்பலகையில் திருகுவது போல ஒரே விஷயத்தைப் பற்றி யோசிக்கிறோம். அந்த யோசிப்பு நமது மூளையில் நடைபெறுவதால், நாம் நமது மூளைக்குள் அந்த திசையில் பயணிக்கிறோம்.

இது நினைவாக செய்யும் பயணம். ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி சொல்லுவதென்றால் 'கான்சியஸ் டிராவல்’ என்று சொல்லுவேன். மாணவன் தேர்வுக்காக படிப்பது இது போன்றதுதான். முயன்று ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுவதும் இதே வழிமுறைதான்.

பாடத்தை, மொழியை மட்டுமல்ல. குறிப்பிட்ட காலத்திற்குள் என்று, முறையாக படிக்கும், கற்றுக்கொள்ளும், செய்து பழகும் எதுவும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். எல்லாம் தனது மூளைக்குள் ஒருவர் செய்யும் கான்சியஸ் டிராவல்.

இதில் சேராத ஒரு வகையும் உண்டு.

Story image

உதாரணத்திற்கு குயவன் எந்த தொழில்நுட்பக் கல்லூரிக்கும் போகாமல், மிக அழகாக, வேகமாக, நேர்த்தியாக மண் பாண்டங்கள் செய்கிறாரே!

அது எப்படி?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.