சரோஜா தேவி: 12. மூவர் உலா!

சரோ நடித்த மொத்தத் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை ‘ஆதவன்’ வரையில் தொண்ணூறுக்குள் அடங்கி விடும்.
சரோஜா தேவி
சரோஜா தேவிEPS
Published on
Updated on
6 min read

சரோ நடித்த மொத்தத் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை ‘ஆதவன்’ வரையில் தொண்ணூறுக்குள் அடங்கி விடும்.

அவற்றில் மக்கள் திலகத்துடன் 26, நடிகர் திலகத்துடன் 20, காதல் மன்னனுடன் 20 ஆக 66 படங்களில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் நடித்துள்ளார்.

வேறு எந்த நாயகியாலும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அரிய சாதனை!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ - உதயசூரியன் போல் எப்போது பார்த்தாலும் ரசிக்கக் கூடியப் புத்துணர்வை ஊட்டும் உற்சாகமான வண்ணச் சித்திரம்!

டூயல் எம்.ஜி.ஆர். இரண்டு நாயகிகள். பொதுவாகப் ‘புரட்சி நடிகர்’ ஹீரோவாகத் தோன்றும் சினிமாக்களில் நாயகிகளுக்கு கனவில் டூயட் பாட மாத்திரமே சந்தர்ப்பம் கிடைக்கும்.

கிடைத்த சைக்கிள் கேப்பில் சரோ சாமர்த்தியமாக நடித்து, குமுதம் விமர்சனத்தின் மிக அரிய பாராட்டைப் பெற்றார்! அத்தனை லேசில் சென்ற நூற்றாண்டின் வார இதழ்கள் எவரையும் போற்றியது கிடையாது.

‘சிறு பிள்ளைத்தனத்துக்கு நோபல் பரிசு பெறும் தகுதியுள்ள சரோஜாதேவி, இதில் இனிய தன்னம்பிக்கையும் இறுமாப்பற்ற கம்பீரமும் கொண்ட சீமான் மகளாக வருகிறார்.

ஒரு கட்டம்- குளியலறையில் தந்தை. வெளியே மகள்.

சரோ - ‘அவர் வந்திருக்கிறார் அப்பா...! ’

எஸ். வி. ரங்காராவ்- ‘யாரம்மா...? ’

சரோ - ‘அவர் தான் அப்பா! ’

ராவ் - ‘அவர் என்றால் யார் அம்மா...? ’

சரோ - ‘உங்கள் மாப்பிள்ளை. ’

ராவ் - ‘எந்த மாப்பிள்ளை? ’

சரோ - ‘உங்களுக்கு எத்தனை மாப்பிள்ளை இருக்கிறார்கள்...? ’

இந்த மாதிரி இடங்களில் கொஞ்சம் நாணம், கொஞ்சம் குதூகலம், கொஞ்சம் அடக்கம், கொஞ்சம் தைரியம் இவற்றை இணைத்து, பெண்மைக்கும் பணத்துக்கும் பகை காண முடியாத வகையில், ஒரு சுவையுள்ள கலவையாகக் காட்சி தருகிறார் சரோஜாதேவி!’ என்று ‘குமுதம்’ அபிநய சரஸ்வதியை ஆராதித்தது.

சரோவுக்கு மட்டும் எப்படி அது கை வந்த கலை ஆனது?

எம்.ஜி.ஆரும் - சிவாஜியும் மாறி மாறி விளையாடிய கோலிவுட் கால் பந்தாட்டத்தில், சரோ மாத்திரம் சிந்தாமல் சிதறாமல் கடைசி வரையில் நிலையாக நின்றார். மற்றவர்கள் ஆண் ஆதிக்க நட்சத்திரப் புயலில் சிக்கி கிடைத்த ஹீரோக்களுடன் ஆடிப் பாடினார்கள்.

எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி மூவருடன் திரையிலும், அதற்கு அப்பாற்பட்டும் ஏற்பட்ட தோழமையை நெஞ்சம் நெகிழ அடுத்தடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறார் உங்கள் சரோ!

1.புரட்சித்தலைவர்!

‘ஆரம்ப நாள்களில் கன்னித் தமிழுக்குப் பதிலாக, கன்னடத் தமிழ் பேசி வந்த புதுமுகமான எனக்குத் துணிந்து, முக்கிய கதாபாத்திரம் அளித்துப் படம் தயாரித்தவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அதை என்றும் எண்ணிப் பார்க்கக் காரணம் உண்டு.

‘கன்னடப் பெண்ணையாப் போடுகிறீர்...? அவளை வைத்து கலரில் படம் எடுக்கிறீரா...?’ என்றெல்லாம் பல படேபடே புள்ளிகள் அவரை அதைரியப் படுத்தப் பார்த்தார்கள். சில நட்சத்திரங்கள் தாங்கள் நடிப்பதாக வலுவில் முன் வந்தார்கள். ஆனால் அண்ணனோ ஒரே உறுதியாக நின்று, என்னையே வைத்து நாடோடி மன்னன் தயாரித்தார்.

அன்று மட்டும் எம்.ஜி.ஆர். தன்னம்பிக்கையைத் தவற விட்டிருந்தால் இன்று, நான் எங்கே எப்படியிருப்பேனோ... தெரியாது.

ஒரு நாள் அண்ணனிடம் மனம் விட்டுப் பேசிய போது, நான் இந்த அளவு வளர்ந்திருக்கிறதே, ‘உங்களால தான் அண்ணே’ என்றேன்.

‘என்ன சரோஜா சொல்றேன்னு’ கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘உங்க நாடோடி மன்னன், திருடாதே படங்கள்ள எனக்கு நல்லதொரு அறிமுகம் கொடுத்தீங்க. அதனாலதான் நான் மள மளன்னு முன்னேற முடிஞ்சது. ’ என்றேன்.

‘அப்படியில்ல சரோஜா, இந்த ராமச்சந்திரன் உதவலன்னா இன்னொரு ராமச்சந்திரன் உனக்கு உதவப் போறான்... ’ன்னு சர்வ சாதாரணமா சொன்னார் அண்ணன்.

‘அப்படிச் சொல்ல யாருக்கு மனசு வரும்! ’

சண்டைக் காட்சிகள் படமாக்குவதற்கு முன்பாக, நான் நிற்க வேண்டிய இடத்தில் வேறு ஒருவரை நிற்க வைத்து, அடிதடியின் போது எனக்குக் காயம் ஏதும் படாது என்று நிச்சயமாகத் தெரிந்த கொண்டு, அதன் பிறகே என்னை நடிக்க அழைப்பார்.

எங்கிட்ட ஒரு பழக்கம். ஆச்சரியமான விஷயமோ அல்லது, ஜீரணிக்க முடியாத விஷயமோ யாராவது சொன்னால், என்னையும் அறியாமல் ‘அட ராமச்சந்திரா! ’என்பேன்.

இப்படித்தான் ஒரு நாள் எம்.ஜி.ஆர். அண்ணன் செட்ல இருக்கிறப்ப, ‘அட ராமச்சந்திரா’ ன்னுட்டேன். உடனே எம்.ஜி.ஆர். அண்ணன் என் கிட்டே வந்தார்.

‘என்னம்மா என்னைப் போய் அடா புடான்னுக்கிட்டு’ என்றார். ‘ஸாரிண்ணே! ’ என்றேன். ‘ம்... ம்’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார் அவர்.

எம்.ஜி.ஆர். அண்ணன் என்னை விடக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் மூத்தவர்! அன்றிலிருந்து அந்த டயலாகை அக்கம் பக்கம் பார்த்து சர்வ ஜாக்ரதையுடன் உச்சரிப்பேன்.

‘எனக்கு எந்த நல்ல பழக்கமும் கிடையாது. ’ என்று நான் சொல்லவில்லை. ஒரு சினிமாவில் எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து,

‘காபி, டீ , ஓவல் என்ன வேண்டும்? ’ என்று கேட்பார். நான் எல்லாவற்றுக்கும் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்கவே,

‘உனக்கு எந்த நல்லப் பழக்கமும் கிடையாது போலிருக்கு’ என்பார்.

நடிப்புக்காக மட்டும் அல்ல. நிஜத்திலும் நான் காபி அருந்துவது கிடையாது. அதையும் படத்தின் ஒரு காட்சியாக உருவாக்கி, தியேட்டரில் ரசிகர்களிடையே கலகலப்பையும் ஊட்டினார் எம்.ஜி.ஆர்.

அண்ணன் என்னை சரோஜா என்று கூப்பிடுவார். அவர் கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் ‘தன்னம்பிக்கை. ’

‘சரோஜா என்னோட பிறந்த நாள் 17. உன்னோடது 7. இரண்டுமே லக்கி நம்பர்ங்க. நாம் நல்லா வருவோம். ’என்பார். அந்தத் தன்னம்பிக்கை அண்ணனோட பெரிய ‘பவர்.’

அதனாலதான் ஒரு தடவை நாடகம் நடத்தும் போது கால் உடைஞ்ச நிலையிலும், துப்பாக்கி சூட்டுக்குப் பிறகும், அவரால் மீண்டு வர முடிஞ்சது.

இன்று எம்.ஜி.ஆரைப் பற்றி என்னிடம் பேசும் போது எவ்வளவோ விஷயங்களைச் சொல்கிறார்கள்.

‘அவருக்கு இது பிடிக்கும்... அது பிடிக்கும்... ’ என்று என்னிடமே சொல்பவர்களும் உண்டு. எனக்குச் சிரிப்பு வரும். கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன்.

எம்.ஜி.ஆர். பற்றி எனக்குத் தெரியாததா...!

அண்ணனின் ஒவ்வொரு குணாதிசயமும் எனக்குத் தெரியுமே! திருப்பதிக்கே லட்டு. திருநெல்வேலிக்கே அல்வா - கதைதான் இது.

தனக்கு, தன்னோட தேவைக்குன்னு அவர் எதையும் யார் கிட்டயும் கேட்க மாட்டார். பொதுவான விஷயம் அதாவது நாலு பேருக்குப் பயனுள்ளதாகக் கேட்பார்.

அண்ணன் மூணாவது முறையா சீஃப் மினிஸ்டரா இருந்தப்ப ஒரு நாள் எங்கிட்ட, ‘சரோஜா உங்க ஊர்லருந்து எங்க ஊருக்குக் கொஞ்சம் ‘தண்ணி’ கொடுப்பீங்களா’ன்னு கேட்டார்.

எனக்குப் புரியலை. தண்ணிப் பத்தி கேட்கறார்னு புரிஞ்சது. மது வகைகளை தண்ணின்னு சொல்றது வழக்கம். அந்த ‘தண்ணி’ பத்தி பேசற ஆள் இல்லையே அண்ணன், அந்தப் பழக்கத்துக்கு அப்பாற்பட்டவர் ஆச்சே... என்ற யோசனையுடன்,

‘என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தோணுதுண்ணே... ? என்று கேட்டேன். அண்ணன் விளக்கமா சொன்னார்.

‘காவிரி தண்ணீர்’ பத்தி கேட்கறார்னு எனக்குப் புரிஞ்சது. ’

பாருங்க எது பத்தி பேசினாலும் அதுல ஒரு பொது நலம் வெச்சிப் பேசறதுலே அண்ணனுக்கு நிகர் அண்ணனேதான்!

எனக்கு இருட்டுன்னா அப்ப ரொம்பப் பயம். கரண்ட் இல்லாத நேரத்துல, எங்க வீட்டு மாடிக்குக் கூடப் போக மாட்டேன்னா, என் பயம் எப்படிப்பட்டதுன்னு பார்த்துக்குங்களேன்.

ஆனா இப்ப வீட்டு ஹால்ல தனியா உட்கார்ந்திருக்கும் போது, கரெண்ட் போனால் கூட அப்படியே ஆடாம அசையாம இருக்கிறேன்.

அப்படி இருட்டுக்கு, தனிமைக்கு பயப்படக் கூடாதுன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்தது யார் தெரியுமா? அதுவும் அண்ணன் எம்.ஜி.ஆர். தான்.

எனக்கு ஒரு சமயம் மாடிக்குப் போக வேண்டிய தேவை இருந்துச்சு. நான் படிக்கட்டுல கால வெச்சுக்கிட்டுத் தயங்கி நின்னேன்.

அதைப் பார்த்தது ‘என்ன சரோஜா, ஏன் மேலே போகலையா...? ’ன்னு கேட்டார்.

இருட்டுன்னா எனக்குப் பயம்னு அண்ணணுக்கு ஏற்கனவே தெரியும்.

‘என்ன... இன்னும் நீ அந்தப் பயத்தை விடலையா...?

நீ சாமி கும்புடுவே இல்ல. கோயிலுக்குப் போற நீ, போயும் போயும் இருளுக்கு அச்சப்படலாமா...?

தெய்வம் உண்டுன்னு நினைக்கிறவங்க, பகவான் எப்பவும் நம்ம கூடவே எப்பவும் இருப்பான்ற நம்பிக்கையோடு இருப்பாங்க இல்லையா... உனக்கு அந்த எண்ணம் கிடையாதா...?

‘நிறையவே இருக்குண்ணே... ’

‘அப்ப ஏன் நீ பின் வாங்குற. தைரியமா மாடிக்குப் போ. ’

‘சத்திய நாராயணனுக்கு விரதம் இருந்து பூஜை செய்யற, ஊட்டி அவுட்டோருக்குப் போனா மறக்காம, முனிஸ்வரன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ற... நீ இருட்டுக்குள்ள நடமாடறப்ப, நாராயணசாமி உன் கூடப் பக்கத் துணைக்கு நிக்கிற மாதிரி மனசுல நினைச்சிக்க. அப்புறம் எப்படி நெஞ்சுக்குள்ள நடுக்கம் வரும்...?னு அதட்டிக் கேட்டாரு. ’

அண்ணன் எப்ப அப்படிச் சொன்னாரோ அந்த நிமிஷத்துலருந்து என் பயம் போச்சு.

அண்ணன் என்னை நேரடியாகப் பாராட்டியது கிடையாது. ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டு இருப்பார். அதனால் தொடக்கத்தில் எனக்கு அவர் மீது வருத்தம் கூட இருந்தது.

ஆனால் நான் இல்லாத சமயம், மற்றவர்களிடம் என்னைப் பாராட்டிப் பேசும் அவரது பொன் மனம் எனக்குப் போகப் போகப் புரிந்தது. அண்ணனின் பெருந்தன்மையை நான் உணர முடிந்தது.

யாருடனாவது எனக்குச் சிறு தகராறு எழுந்தால் நான் மனம் வருந்தி அவரிடம் போய்ச் சொல்வேன்.

‘நீதான் ஏதாவது வம்பு செய்திருப்பாய்’ என்று என்னையே குற்றம் சொல்வார்.

அதோடு விஷயம் முடியாது. சண்டை போட்ட ஆசாமியிடம்,

‘சரோஜா ஒரு குழந்தை. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவள்’ என்று எனக்காக வக்காலத்து வாங்கி பேசுவார்.

என் கணவர் அகால மரணம் அடைந்த சமயம். அண்ணன் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல பெங்களூர் வந்தாங்க.

அப்ப அண்ணன் எங்கிட்ட ,

‘சரோஜா உனக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிகப் பெரியது. என்றாலும் எப்பவும் நீ துக்கத்திலேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும். பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம் நீ போகப் போக உன் துன்பத்தை மறக்கலாம்.

இந்திரா காந்தி அம்மான்னா உனக்கு ரொம்ப இஷ்டமாச்சே. ராஜீவ்காந்தி கிட்டே சொல்லி உன்னை ‘காங்கிரஸ் எம்.பி.’ ஆக்கிடவா... ன்னு கேட்டார்.

சிலர் என்னை அவரோட கட்சியில் சேர்றியான்னு எம்.ஜி.ஆர். கேட்டதா சொல்றாங்க. அது தப்பு.

அண்ணனோட குணமே, தனக்கு வேண்டியவங்களோட விருப்பத்தை மதிக்கறது தான். என் எண்ணத்தைத் தெரிஞ்சிக்கிறதுல அவர் தெளிவா இருந்தார். அதுக்கப்புறமா டெல்லிக்கு பேசலாம்ங்கிற யோசனை அவருக்கு.

என் கணவரை இழந்த துக்கத்துல இருந்து மொத்தமா மீள முடியாத சூழல்... எதைப் பத்தியும் யோசிக்கிற நிலைமையில் நான் நிச்சயம் இல்ல.

எல்லாத்தையும் எம்.ஜி.ஆர். பாத்துக்குவார்னு அன்னிக்கு நான் மட்டும் ஒரு உம் சொல்லியிருந்தா, அரசியல்லயும் கொடி கட்டிப் பறந்திருப்பேன். ஏன்னா அண்ணனோட சக்தி அப்படிப்பட்டது!

1987 டிசம்பர் 24. என்னால் மறக்க முடியாத நாள். நான் அப்ப மயிலாப்பூர் ‘சோழா’ ஹோட்டல்ல தங்கி இருந்தேன். காலைல ஆறு மணி இருக்கும். ரிசப்ஷன் ஊழியர் என்னிடம்,

‘மேடம் உங்க ஹீரோ போயிட்டாராமே... ’ன்னார்.

எனக்கு ஒண்ணும் புரியவே இல்ல. என்ன சொல்றீங்க நீங்கன்ணேன். அவர் விளக்கமா விடியற்காலைல அண்ணன் காலமாயிட்டதாச் சொன்னதும் எனக்குக் கடுமையான அதிர்ச்சி!

முதல்வர் எம்.ஜி.ஆர். மறைஞ்சுட்டார்னு கேள்விப்பட்டதும் சென்னை பூரா பரபரப்பு. நான் தனியா ராமாபுரம் தோட்டத்துக்குப் போக முடியுமான்னு சந்தேகம் ஏற்பட்டுச்சு.

போலீஸ் துணைக்கு வர அவங்க ஜீப்லயே எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் போனேன்.

ஜானகி அம்மாளைப் பார்த்து, நாலு வார்த்தை ஆறுதலா சொல்ல முடியாம ஓன்னு கதறி அழுதேன். ரொம்ப நாழி அவங்களோட தோட்டத்துலயே இருக்க முடியல. மறுபடியும் ‘காவல்’ வாகனத்துலயே பாதுகாப்பா ‘சோழா’வுக்குத் திரும்பினேன்.

அன்னிக்கு மதியம் மூணு மணி சுமாருக்கு எம்.ஜி.ஆரோட இறுதி ஊர்வலம் நான் தங்கியிருந்த ஹோட்டல் வழியா வந்தது. நான் மாடியிலருந்து பார்த்தேன்.

அண்ணனோட பூத உடல் என் கண்ணுல சின்னதா படுது. நான் அப்ப சிந்தியக் கண்ணீர்த் துளிகள் அவரோடப் பாதங்களில் போய்ச் சேர்ந்திருக்குமா...?

இது தான் வாழ்க்கை என்று புரிந்து போகிறது. என் கணவரின் மறைவு என்னைப் பாதித்த போது பெரிய இழப்பாத் தெரிஞ்சது.

இத்தனைச் சீக்கிரத்துல என் சினிமா வாழ்க்கையை நிர்ணயிச்ச அண்ணன் எம்.ஜி.ஆரும் போனது எந்தக் காலத்துலயும் என்னாலத் தாங்கிக்க முடியாத துக்கம்!

காலச் சக்கரத்தின் சுழற்சி எனக்கொண்ணும் ஆச்சரியமாத் தெரியல. வாழ்க்கையை அதன் யதார்த்த போக்கில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘எந்த இடமும் யாருக்கும் நிரந்தரமில்லைன்ற உண்மையைப் புரிஞ்சிக்கிட்டாலே வாழ்க்கையின் அர்த்தம் புரிஞ்சிடும். ’

எம்.ஜி.ஆர். எனக்குக் கூறிய ஆசி மிக முக்கியமானது. கல்யாணம் வரைக்கும் நான் ஓய்வு ஒழிச்சல் இல்லாம நடிச்சுட்டு வந்தேன். அப்ப ஒரு நாள் என்னைப் பார்த்து,

‘சரோஜா... உனக்கு பேரன் பேத்தி பிறந்த பிறகும் கூட நீ இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்’ என்றார். அவரது வாழ்த்து நிரந்தரமாகவே பலித்து விட்டது! ’ - சரோஜாதேவி.

Summary

MGR's blessing to me was very important. I continued to act without any break until my marriage. Then one day, he looked at me and said

எம்.ஜி.ஆர். எனக்குக் கூறிய ஆசி மிக முக்கியமானது. கல்யாணம் வரைக்கும் நான் ஓய்வு ஒழிச்சல் இல்லாம நடிச்சுட்டு வந்தேன். அப்ப ஒரு நாள் என்னைப் பார்த்து,

‘சரோஜா... உனக்கு பேரன் பேத்தி பிறந்த பிறகும் கூட நீ இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்’ என்றார். அவரது வாழ்த்து நிரந்தரமாகவே பலித்து விட்டது! ’ - சரோஜாதேவி.

Summary

MGR's blessing to me was very important. I continued to act without any break until my marriage. Then one day, he looked at me and said

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com