பழையன கழியவில்லை, புதியன புகவில்லை

பாலியல் குற்றத் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில், "மக்கள் தொகை உயரும்போது, பாலியல் பலாத்காரமும் உயரத்தான் செய்யும்' எனக்கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பழையன கழியவில்லை, புதியன புகவில்லை
Published on
Updated on
3 min read

பாலியல் குற்றத் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில், "மக்கள் தொகை உயரும்போது, பாலியல் பலாத்காரமும் உயரத்தான் செய்யும்' எனக்கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இது இரண்டு உண்மைகைளை எடுத்துக்காட்டுகிறது. ஒன்று, பாலியல் பலாத்காரமும் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவதும் தவிர்க்கமுடியாத சமூக நிலை என்ற பிற்போக்கு மனோபாவம் ஆண்களிடமும், பல பெண்களிடமும் உள்ளது.

இரண்டாவதாக, சட்டங்கள் கடுமையாக்கப்படுவது அவசியம் என்றாலும், இந்த பிற்போக்குக் கருத்துகளை அகற்ற கருத்தியல் தளத்திலும் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களிலும் இடையறாதச் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன.

பாலியல் கொடுமைகளைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது அனைத்து மட்ட விவாதங்களிலும் எதிரொலித்தது. அரசும் இக்கருத்துக்கு இணங்க வர்மா கமிஷனை அமைத்து சில ஆலோசனைகளை உருவாக்கியது. ஆனால், கமிஷன் அளித்த  பல முக்கிய கருத்துகளை அலட்சியம் செய்துவிட்டு சிலவற்றை மட்டும் அமலாக்க முயற்சிக்கின்றனர்.

அந்த அறிக்கையில், சட்டத்தின் ஆட்சி அளிக்கப்பட்ட நிலையில் (பெண்களுக்கான) பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கான அடிப்படைக் காரணம், சிறந்த ஆட்சி நிர்வாகம் நடத்துவதில் ஏற்பட்ட தோல்விதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி வர்மா குறிப்பிடுகிற இந்தத் தோல்வி ஆட்சியில் இருப்போர் கடைபிடிக்கும் பொருளியல் கொள்கைத் தளம் உள்ளிட்ட சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரத்தில் இருப்போர் என்ன செய்யப் போகிறார்கள்? எனவே,நடைபெற்று வரும் விவாதம் சட்டம் என்ற கூட்டுக்குள் அடங்கிப்போய், இன்றைய பெண்ணடிமைத்தனப் போக்குகளின் வேர்களை கண்டறிந்து களையும் மிகப் பெரும் கடமையிலிருந்து திசை மாறிடக் கூடாது. 

அதிகரிக்கும் பாலியல் வன்முறைக்கும் நாடு சென்று கொண்டிருக்கும் பொருளியல் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு உரியவாறு ஆராயப்படவில்லை. உண்மையில், ஆணாதிக்க கருத்தாக்கங்களை தழைத்தோங்க வைக்கும் சூழலை இன்றைய நவீன தாராளமய சித்தாந்தம் வளர்க்கிறது. தேசியப் புள்ளிவிவர பதிவேடு கூறும் விவரங்கள் இதை நிரூபிக்கின்றன.

நவீன தாராளமயம் கட்டவிழ்த்த பழமை சார்ந்த மனநிலைகளும், அதன் வணிகமயம் ஏற்படுத்திய ""பெண் ஒரு போகப்பொருள்'' என்கிற மனப்பதிவும் கடந்த இருபது ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறையை அதிகப்படுத்தியுள்ளது.

இன்றைய இந்த சமூக எதார்த்தத்திற்கு ஒரு பின்னணி உண்டு. அன்னிய அடிமைத்தனத்திலிருந்து, விடுதலை பெற்ற பிறகும் கூட,இந்தியச் சமூக உறவுகளில்  பெண்கள் அடிமைகளாக நடத்தும் நிலை மாறவில்லை. இந்தியாவின் இதயம் கிராமப்புறங்கள் என்று சொல்வதுண்டு. மக்கள் தொகையில் பெரும்பான்மை கிராமங்களில் வாழ்ந்து வந்த போதும், கிராமப்புற உயர்குடி மக்களே அதிகாரம் படைத்தோராக இருந்து வந்தனர். இந்த அதிகார சிறுபான்மைக் கூட்டம், கிராமப்புற எளிய மக்கள் பொருளாதாரச் சமூக அதிகாரம் கொண்டவர்களாக உருவாவதை விரும்பவில்லை. இதனால்தான் சட்டப் புத்தகங்களில் இடம்பெற்ற நில விநியோகச் சட்டங்கள் கூட நிறைவேறவில்லை. இந்நிலையில் கிராமப்புற எளிய மக்களில் சரிபாதியாக வாழும் பெண்கள் குடும்பத்திற்காகவும், குடும்ப வருமானத்திற்கும் தனது கடும் உழைப்பை வீட்டிலும், வயல்களிலும் செலுத்தி, வாழும் நிலை நீடித்து வந்துள்ளது. இதன் காரணமாக, காலம்காலமாக இருந்துவந்த பெண்ணடிமைத்தன இருள் அகன்றிடாமல் நீடித்தது.

விடுதலைக்குப் பிறகு உருவான இந்திய அரசு அமைப்பு, பெண் சமத்துவம் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான அரசியல், சட்ட, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அரசியல் தளத்தில் பெண்களின் சட்டமன்ற நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் ஓரளவிற்குக்கூட ஆண் பிரதிநிதித்துவத்தை எட்டவில்லை. பெண்களுக்கான சட்ட நியாயம்  வழங்கல் நடைமுறைகளும் மிகுந்த ஓட்டைகள் நிரம்பியதாக உள்ளன. இருக்கிற சட்டங்களை முறையாக அமலாக்குகிற இடத்தில் இருந்த நிர்வாக இயந்திரமும் மெத்தனப்போக்கு நிரம்பியதாக இருந்து வந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளிலும் செயல்பட்டு வந்த சக்திகள் ஆணாதிக்க உணர்வு கொண்டோராகவே பெரும்பாலும் இருந்துள்ளனர். 

இதே காலகட்டத்தில் சீன சமுதாயத்தைக் கட்டியமைக்கும் பணியும் சீனாவில் நடைபெற்று வந்தது. ஆனால் அவர்கள் கிராமப்புற நச்சுப் பண்பாட்டை மாற்றிடத் தீவிர முயற்சி மேற்கொண்டனர். நிலவிநியோகம், அனைவருக்குமான ஆரம்பக் கல்வி, உயிர்த்துடிப்புள்ள உள்ளாட்சி நிர்வாகம் என மக்களை அதிகாரம் கொண்டோராக மாற்றும் பணியை மேற்கொண்டனர். சீனாவின் ஆரம்ப கால இந்தச் சாதனைகளைப் பட்டியலிடும் பேராசிரியர் அமார்த்ய சென், உழைக்கும் சமூகத்தில் பெண்கள் அதிகம் பங்கேற்பதற்கான அடித்தளம் பெரும் அளவில் விரிவாக்கம் பெற்றது என்கிறார். பின்னாட்களில் சீனாவின் பொருளாதாரச் சீர்திருத்தம் வெற்றிபெற்றதற்கு முந்தைய இந்தச் சாதனைகள் வலுவான அஸ்திவாரமாக உதவின என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் நவீன தாராளமயம், விவசாயம், தொழில் நசிவை ஏற்படுத்தியும், சமூகப் பாதுகாப்பற்ற முறைசாரா வேலைகளை அதிகரித்தும் வளர்ச்சியை சாதிக்க முயற்சிக்கிறது. சமூகப் பாதுகாப்பற்ற வேலை என்பது ஒருவருக்கு பொருளாதாரச் சிக்கல்களை மட்டும் ஏற்படுத்தவில்லை. அது மனச்சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. ஆணாதிக்க மனோபாவம் விஸ்வரூபம் எடுக்கிறது.

பெண்ணுக்கு சமூகத்தில் கீழான அந்தஸ்து இருப்பதையே நீடிக்க விரும்பும் மனோநிலையும், அத்தகு நிலையில் சிறு விலகல் ஏற்பட்டு சில பெண்கள் சுதந்திரமாகவும் சிறிது பொருளாதார முன்னேற்றம் கொண்டவர்களாகவும் உருவாகிறபோது அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தும் மனப்போக்கும் உருவாகிறது.

நவீன தாராளமயம், வசதி படைத்த தனி மேட்டிமைச்சக்திகளை உருவாக்கி வருகின்றது. இதில் பெருந்தனக்காரர்கள் மட்டுமல்லாது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் உருவாகிறது. இவர்கள் ""தாதாக்களாக'', இரக்கமற்ற எல்லாக் கொடுமைகளையும் செய்யக் கூடியவர்களாக வளர்கின்றனர்; தன்னுடைய எஜமானர்களுக்கு மூலதனம் பெருக்கெடுக்கச் செய்யும் குறிக்கோள் மட்டுமே கொண்டவர்களாக அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். பெண்களைத் தெய்வங்களுக்கு ஈடாகப் பார்க்கும் பழைய அறநெறிகளும் அவர்களிடம் இருப்பதில்லை; பெண்களுக்கு சம அந்தஸ்து எனும் நவீன முற்போக்கு கருத்துகளும் அவர்களிடம் வளர்வதில்லை. குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்யவும் அவர்கள் துணிகின்றனர்.

நவீன தாராளமயம் பெரும் எண்ணிக்கையிலான மக்களை வாழ்வாதாரத்தை நாடி, இடம் பெயரச் செய்துள்ளது. இதில் கணிசமானோர், பெண்கள். அவர்கள் நகரங்களை நாடிச் செல்கின்றனர். பலர், வசதி படைத்தோரின் வீடுகளைச் சுத்தம் செய்வது போன்ற சொற்ப வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.அதே போன்று, பெருநிறுவனங்களில் பணியாற்றுகிற பலர், கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

பெரும் கார்ப்பரேட் நிறுவன மூலதனக் குவியலுக்காக புகுத்தப்பட்ட உலகமயக் கொள்கைகள் ஒருபுறம் பெண்களை அதிக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கின. மறுபுறம், பெண்ணடிமைத்தன கருத்தியலை மேலும் தீவிரப்படுத்தி பாலியல் வன்முறையை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு மாறாக பழையன உயிர்பெற்றிருப்பதும், புதிய சமத்துவ நிலை தோன்றாது இருப்பதும் நிகழ்ந்துள்ளது. பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழும்போது மட்டும் எதிர்வினை, மற்ற சமயங்களில் பாலியல் அசமத்துவ நிலை குறித்து அக்கறையற்று இருப்பது சரியல்ல. அரசியல், சட்ட, நிர்வாக நடவடிக்கைகொளோடு பொருளியல் தளத்தில் அடிப்படையான அணுகுமுறை மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் உண்மையான சமத்துவ இந்தியா உருவாகும்.

பாலியல் வன்முறையை ஒழிக்க ஆயிரம் வழிகள் சொல்லப்பட்டாலும், தற்போது இந்தியா சென்று கொண்டிருக்கும் நவீன தாராளயமப் பாதையை அரசு கைவிடுமா என்பது முக்கியமான கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com