
நான் வீட்டு மாதிரி காய்கறித் தோட்டம் போடுவதற்காக மாணவர்களிடம் தோட்டம் அமைக்கும் முறை பற்றி விளக்கி கூறிவிட்டு விதைகள் வாங்குமிடம் பற்றி கூறினேன். மாணவர்கள் பல கடைகளில் அலைந்து திரிந்து கிடைக்கவில்லை அய்யா என்றார்கள். நான் மறுநாள் நகரில் உள்ள பல்வேறு விவசாய கடைகளில் கேட்டு பார்த்துவிட்டு ஏமாற்றமே மிச்சம்.
காரணம் என்னவென்று அங்கு கேட்டதில் மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகளே புழக்கத்தில் உள்ளதாகவும் பழைய முறையான பாரம்பரிய விதைகளை விற்பதில்லை என்றும் கூறினார்கள். முன்பு ஒரு சில விதை விற்பனை கடைகளில் மட்டுமே பாரம்பரிய விதைகள் கிடைக்கும். தற்போது அதுவும் இல்லை.
மரபீனி மாற்றப்பட்ட காய்கறி விதைகளின் விலையை கேட்டு திகைத்துவிட்டேன். 100 கிராம் வெண்டை அல்லது புடலை அல்லது பாகற்காய் விதை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இவ்வாறான விலையில் மாணவர்களே அல்லது வீட்டுத் தோட்டம் போட விரும்பும் பொதுமக்களே வாங்க முன்வருவதில்லை. வீட்டில் இடமில்லாதவர்கள் மாடித் தோட்டம் போடலாம் என்று இருப்பவர்கள் கூட மலைத்து விடுகிறார்கள்.
மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஒரு போக விளைச்சலோடு சரி. அதே விதைகளை எடுத்து வைத்து மறு வருடம் பயிரிட இயலாது.
எனவே விவசாயி ஒவ்வொரு வருடமும் புதிதாய்தான் அந்த விதைகளை வாங்க வேண்டியுள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கோ நல்ல லாபம். விவசாயி பாடு படு திண்டாட்டம்.
நாட்டுத் தக்காளி, நாட்டு கத்தரி, வெண்டை போன்ற பாரம்பரிய காய்கறிகள் உற்பத்தியும் தமிழக அளவில் சந்தைகளில் காண முடிவதில்லை. எங்கோ அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் சில சந்தைகளில் விற்கப்படுகிறது.
பாரம்பரிய காய்கறிகளான அவரை, பந்தல் அவரை, புடலை, பீர்க்கங்காய், தக்காளி, கத்தரி ஆகியவற்றின் சுவையோ அலாதியானது. பந்தலிலே அவரைக்காய், புடலங்காய் என்பது பழைய பாடத் திட்ட ஏட்டு கல்வியோடு சரி.
தற்போது விளைவிக்கப்படும் காய்கறிகளில் எந்தவிதமான சுவையும் இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஏதோ பார்ப்பதற்கு பெரிதாக அழகாக இருக்கிறது.
பாரம்பரிய விதை உற்பத்திக்கு மூடுவிழா காணப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. விவசாயிகளும் அதற்கு செவிசாய்த்து விட்டார்கள்.
எந்தவிதமான சுவையற்ற காய்கறிகளையே நாம் தினமும் உண்டு வர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். விளைச்சல் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக சுவையற்ற காய்கறிகளையே நாம் சுவைத்து பழக்கப்பட்டு அடிமையாகிவிட்டோம்.
நுகர்வோர்களும் சந்தைகளில் நாட்டு காய்கறிகளான பாரம்பரிய காய்கறிகளையே வாங்க முன்வர வேண்டும். தமிழக அரசும் தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை மூலம் பாரம்பரிய காய்கறி விதைகளை உற்பத்தி செய்து ஒன்றிய அளவிலான வேளாண் டெப்போ (கிட்டங்கி) மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் அதிக அளவில் விற்பனை செய்தால் நாம் நமது சுயத்தை இழக்காமல் வருங்கால தலைமுறையினருக்கு சுவைமிக்க காய்கறிகளை கொடுக்கலாம்.
வீடுகளில் காய்கறித் தோட்டம் போட நினைப்பவர்களுக்கும் எளிதில் விதைகளை வாங்கி தோட்டம் போட எளிதாக இருக்கும். காய்கறி விலைகளை மட்டுப்படுத்த இதுபோன்ற வீட்டுத் தோட்ட காய்கறிகளுக்கு பாரம்பரிய விதைகளே ஏற்றதாகும். பழைய சுவையை மீட்டெடுக்க முடியும்.
மாணவர்கள் மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்க விழிப்புணர்வு வழங்கினால் அனைத்து பெற்றோர்களும் தங்களின் வீட்டில் உள்ள குறைந்த இடத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான காய்கறிகளை பயிரிட்டு பாரம்பரிய சுவையுடன் தானே உற்பத்தி செய்தது என்ற உணர்வுடன் தன்னிறைவு அடையலாம். பாரம்பரிய விதைகளையும் வரும் சந்ததியினருக்கு மீட்டெடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.