தரமே வெற்றி!
நம் நாட்டின் தர வரலாறு தொன்மையானது. 5000 ஆண்டுக்கு முன்பிருந்த சிந்து சமவெளி நாகரிகம் அக்கால மக்கள் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களையும் தர விதிகளையும் (Standardisation Principles) தெரிந்து வைத்திருந்ததை உணர்த்துகிறது.


நம் நாட்டின் தர வரலாறு தொன்மையானது. 5000 ஆண்டுக்கு முன்பிருந்த சிந்து சமவெளி நாகரிகம் அக்கால மக்கள் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களையும் தர விதிகளையும் (Standardisation Principles) தெரிந்து வைத்திருந்ததை உணர்த்துகிறது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களின் கட்டட அமைப்பு, பொது சுகாதார வடிகால் அமைப்பு ஆகியவை தொழில் திறன்மிக்க வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டிருந்ததை அகழ்வாய்வு நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேபோன்று அவர்கள் பயன்படுத்திய செங்கற்கள், மண்பாண்டங்கள், நகைகள், தானியக் களஞ்சியங்கள் போன்றவை அக்கால மக்கள் தரப்படுத்தப்பட்ட அளவுகோலைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன.
நம் நாட்டில் தர நிர்ணயம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்குகிறது. 1909-ஆம் ஆண்டு ஆங்கிலேய ரயில்வே போர்டு தனக்குத் தேவையான பொருள்களை கல்கத்தாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாங்கும்போது அதனை மேற்பார்வை செய்ய ஒரு ஆய்வாளரை நியமித்து, அவ்வாறு வாங்கிய பொருள்களைப் பரிசோதனை செய்ய தேசிய ஆய்வகம் (National Test House) கோல்கத்தாவில் 1913-இல் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1925-இல் லக்னௌவில் தேசிய அளவில் ஆராய்ச்சி மற்றும் தர நிர்ணய அமைப்பு தொடங்கப்பட்டது. இதற்கிடையில், மத்திய அரசின் பரிந்துரைப்படி இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியர்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனம் இங்கிலாந்தின் தர நிர்ணய நிறுவனத்தினரின் இந்திய குழுவாக 1919 ஆகஸ்ட் முதல் செயல்படத் தொடங்கியது. பொதுவாக இங்கிலாந்தின் தர நியமங்களும் அமெரிக்க தர நியமங்களும் நம் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், நம் நாட்டில் கிடைக்கும் கச்சாப் பொருள்கள், உற்பத்தி முறைகள் மேற்கத்தி நாடுகளுக்கு மாறுபட்டதாக இருந்ததால் தர நிர்ணயங்கள் புதிது புதிதாக உருவாக்க வேண்டிய நிலை வந்தது. 1940 டிசம்பரில் இருபதாவது தொழில் மாநாடு லக்னோவில் நடந்தது. அதில்தான் முதன்முதலில் இந்தியாவிற்கு தனியாக ஒரு தர நிர்ணய நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் நுகர்வோர் நலனை காப்பது மக்கள் நலன் விளையும் அரசின் கடமை என்பதும் நுகர்வோர் வாங்கும் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்ற எண்ணமும் வலுப்பெற்றது. இந்நிலையில், 1947 ஜனவரி 6-இல் அறிவியல் தொழில் நுட்ப அமைப்புகளின் ஆதரவுடன் பதிவு பெற்ற பணிக் கழகமாக இந்திய தர நிர்ணயக் கழகம் (Indian Standards Institution) தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் நம் நாட்டிற்குத் தேவையான பல தர நியமங்களை உருவாக்கி தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் கணிசமான பங்களிப்பைத் தந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் முயற்சியால் 1952-இல் தரக்குறியீடு சட்டமும் அதனைத் தொடர்ந்து 1955-இல் பொருள் சான்று திட்டமும் அமலுக்கு வந்தன. 1986 டிசம்பர் 23-ஆம் தேதி இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் (Burearu of Indian Standards Act) அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய தர நிர்ணய அமைவனம் (Burearu of Indian Standards) 1987-இல் தொடங்கப்பட்டது. அது நுகர்வோரின் தேவையையும் பாதுகாப்பையும் நிறைவு செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இன்று BIS நிறுவனத்திற்கு நம் நாட்டில் 32 கிளை அலுவலங்களும் 2 துணை அலுவலகங்களும் உள்ளன. 2014 முடிய இந்த நிறுவனம் 19,199 தர நியமங்களை உருவாக்கித் தந்திருக்கிறது. அதில் 92 வகை தரங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தரப்படுத்தப்படாமல் சிமெண்ட், இரும்பு, மின் இஸ்திரிப் பெட்டி, காஸ் சிலிண்டர், குழல் விளக்கு, மின்சார கேபிள் போன்ற பொருள்களை சந்தையில் விற்க முடியாது. தர முத்திரை இல்லாமல் அந்தப் பொருள்களை விற்றால் குற்ற வழக்கு தொடர்ந்து, ஒரு வருட சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய்க்கு மிகாமல் அபராதமும் விதிக்க முடியும்.
இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் 22 உலக நாடுகள் ஒப்பந்தம் செய்து, அவை நம் தர நியமங்களைப் பின்பற்றி பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றன. 381 வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் இந்திய தர நிர்ணய உரிமங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவிலும் தர நியமங்களை உருவாக்குவதில் BIS சிறந்த பங்களிப்பைத் தந்து கொண்டிருக்கிறது. பொருள்களுக்கு தரச்சான்று தருவதைப் போன்றே நிறுவனங்களுக்கும் (BIS) தரச்சான்று ISO-9000 அல்லது நஐ 14000 என வழங்கி வருகிறது. அதைப்போன்றே சுற்றுச்சுழலை மாசுபடுத்தாத பொருள்களுக்கு ECO Mark வழங்கப்படுகிறது. தரமான பொருள்கள் மற்றும் சேவைகளைக் குறித்து சாமானிய மனிதனை உணர வைத்த பெருமை நுகர்வோர் அமைப்புகளுக்கு உண்டு.
ஐ.எஸ்.ஐ. அக்மார்க், எக்கோ மார்க், சில்க் மார்க் போன்ற தரச் சான்றிட்ட பொருள்களை வாங்குவதும், போலியாக முத்திரையிட்டு சந்தைக்கு வரும் பொருள்களை கண்டறிந்து இது குறித்து தர நிர்ணய அமைப்பிற்கு புகார் செய்வதும் நுகர்வோரின் கடமை. இதுபோன்ற புகார்களில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டால் புகார் செய்த நபருக்கு ரூ.5,000 வரை பரிசுத் தொகையை BIS நிறுவனம் வழங்குகிறது. இந்தியத் தயாரிப்புகளுக்கு உலக அங்கீகராம் கிடைக்க வேண்டுமென்றால் தரமே வெற்றி என்பதை உற்பத்தியாளரும் நுகர்வோரும் உணர வேண்டும். இந்தியனாக இருப்போம், தரமுள்ள இந்தியப் பொருள்களையே வாங்குவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...