ஹோமோ சேப்பியன் எனப்படும் நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவிலும், தமிழகத்திலும் படிப்படியாகக் குடியேறி இருந்திருக்கலாம் என அண்மைக்கால மரபணு ஆய்வுகள் சுட்டுகின்றன. இக்காலத்திலிருந்து மனிதர்கள் குழுக்களாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழத்தொடங்கினர். இதைத் தொல்பழங்காலத்தின் இறுதி நிலை எனலாம்.
தமிழக வரலாற்றில் நுண்கற்காலம் முதல் தொடர்ச்சியான பண்பாட்டு வளர்ச்சி இருந்து வருகின்றது என்பதைத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இக்காலத்தில் வேட்டையாடி உணவு சேகரித்த குடிகள் வாழ்ந்துவந்தனர். மிகச் சிறிய முக்கோண, பிறை வடிவக்கருவிகள், கூர்முனைகள், சுரண்டிகள் ஆகியவற்றைக் கற்களில் செய்து இக்கால மக்கள் பயன்படுத்தினர். குவார்ட்ஸ் எனப்படும் சிக்கிமுக்கி கற்கள், பளிங்குக் கற்கள், செர்ட் எனப்படும் பல நிறத்தாலான கற்களை இவர்கள் பயன்படுத்தினர். இவர்கள் நாடோடிகளாக இடத்திற்கு இடம் புலம்பெயர்ந்தும், குகைகளிலும், தற்காலிக சிறு குடிசைகள் அமைந்த்தும் வாழ்ந்திருக்கலாம். இக்காலம் சுமார் 10,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் தொடங்கியதாகும். இவர்களைத் தமிழகத்தின் தொன்மையான அல்லது பழங்குடிகளில் ஒரு குழுவினர் எனக் கருதலாம். இவர்கள் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், திரிந்த பாலைத் திணைகளில் வாழ்ந்தனர். இவர்களுடைய சான்றுகள் சென்னைப் பகுதி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர்-மருதமலை, தஞ்சாவூர்- நாகப்பட்டிணம்-திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை-குண்டாற்றுப் பகுதி, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி-தேரி மணற்குன்றுகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மிகப்பரவலாகக் கிடைத்துள்ளன. எனவே, தமிழகம் முழுதும் வாழ்ந்த இப்பழங்குடிகள் வேட்டையாதல், மூலிகை அறிவு, சுற்றுச்சூழல் அறிவைப் பெற்று தமிழகப் பண்பாட்டின் அடித்தளத்தின் ஒரு தூணை உருவாக்கினர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் நெய்தல், பாலை, குறிஞ்சித் திணைகளின் பண்பாட்டுக் கருவை, வாழ்க்கை முறைகளை உருவாக்கினர் எனலாம். இவர்கள் என்ன மொழி பேசினர் என்பது ஒரு புரியாத புதிர் எனலாம். இவர்கள் திராவிட மொழிகளின் மூத்த மொழியைப்பேசினரா? அல்லது வேறு மொழிக் குடும்பத்து மொழியைப் பேசினரா என்பது தெரியவில்லை. ஆனால் இக்கால மனிதர்களின் மரபணு இன்று தமிழகத்தில் வாழும் மக்களிடையே உள்ளது என்பது தெளிவாகும். தமிழகப்பண்பாடு எனப்படும் ஆல மரத்தில் இவர்களது விழுதுகளும் ஒன்றாகும்.