

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு "சல்யூட்' அடித்து வெளியேறியவருக்கு சற்றும் எதிர்பாராமல் அண்ணா விருது கிடைத்தது. அதைவிட வியப்பான சம்பவம் இன்னொன்று நடந்திருக்கிறது. "பட்டது போதும் உன்னாலே' என்று பாட்டுப் பாடாத குறையாக விட்டுச் சென்றவருக்கு, மிஸ்டர் எதிர்க்கட்சி தான் நடத்தும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்குப் பிரத்யேக அழைப்பு விடுத்திருக்கிறாராம். அவர்மீது தனக்கு எந்தவிதக் கோபமும் கிடையாது என்பதைச் சொல்லாமல் சொல்லத்தான் இந்த முயற்சியாம். "உறவு பட்டுப் போய்விடவில்லை' என்கிற சமிக்ஞை அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே, மெய்யாலுமா?
===
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் நடைபெற்ற குளறுபடியால் முதல்வர் மிகவும் கோபமடைந்திருக்கிறாராம். இதுபோலப் பல தடவைகள் வேட்பாளரை அறிவிப்பதும், அதற்குப் பிறகு அந்த வேட்பாளரின் பின்னணி வெளிப்படுவதும், கடைசி நிமிடத்தில் அவரை மாற்றுவதும் வழக்கமாகி விட்டது என்று மூத்த அமைச்சர்களையும், ரகசிய போலீஸாரையும் கடிந்து கொண்டாராம். இனிமேல் காவல் துறையையும், மூத்த அமைச்சர்களையும் நம்பாமல், தனியார் புலன் விசாரணை அமைப்பு மூலம் தீர விசாரித்த பிறகுதான் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாமே, மெய்யாலுமா?
===
தனித்துப் போட்டியிட்டால், தமிழகத்தில் அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் கூடக் கிடைக்காத அவமானம் நேரிட வேண்டி வரும் என்பதால், இந்தியாவின் மிகப் பழைமையான கட்சி எப்படியாவது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறதாம். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரிடம் கடந்த வாரம் அந்தக் கட்சியின் இளைய தலைவரே வலியத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாராம். வயது வித்தியாசம் காரணமாகத்தான் அவரை நேரில் வந்து இதுவரை சந்திக்கவில்லை என்றும், தான் எப்போது வந்தால் சந்திக்கலாம் என்றும், அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் கேட்டபோது மூத்த தலைவர் அதிர்ந்துவிட்டாராம். இத்தனை நாள் இல்லாத "திடீர்' கரிசனம் அவருக்குத் தன்மீது வந்திருக்கிறது என்றுகூறிச் சிரிக்கிறாராமே, மெய்யாலுமா?
===
மிருகண்டு என்கிற முனிவர் சிவபெருமானிடம் பிள்ளை வரம் கேட்டுப் பிரார்த்தித்தார். 16 ஆண்டுகள் மட்டுமே வாழும் மெய்ஞானம் படைத்த புத்திசாலிக் குழந்தை வேண்டுமா? இல்லை அஞ்ஞானத்தில் மூழ்கிய நூறாண்டுகள் வாழும் குழந்தை வேண்டுமா? என்று சிவபெருமான் வினவ, பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழும் குழந்தையை யாசித்தார் மிருகண்டு முனிவர்.
பதினாறு ஆண்டு பூர்த்தியாகும் வேளையில் "மார்க்கண்டேயன்' என்கிற பெயருடைய அந்த பாலகனை அழைத்துச் செல்ல காலன் முற்பட்டபோது, அவன் காலனின் பாசக்கயிற்றிலிருந்து தப்பிக்க சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு விடுகிறான். சிறுவனது பக்தியால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் காலனை அழித்து மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக மரணமிலாப் பெருவாழ்வு வாழ வரமளித்தார் என்கிறது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத் தல புராணம். அதனால்தான், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய 60 மற்றும் 80ஆம் ஆண்டு நிறைவை இந்த ஆலயத்தில் யாகம் வளர்த்துக் கொண்டாடுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய "திருமெய்ஞானம்' எனப்படும் 11ஆம் நூற்றாண்டு ஆலயம் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு இப்போது பாழடைந்து கிடக்கிறது. அதேபோன்ற அமைப்புடைய இன்னொரு ஆலயம் கட்டப்பட்டு அங்குதான் இப்போது பூஜை வழிபாடுகள் நடந்து வருகின்றன.
ஆண்டுதோறும் ஆளுநர் உரையின் மீது முதலில் பாராட்டிப் பேசுபவர்களுக்கு ஏதாவது பதவி, குறிப்பாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் ஒரு நம்பிக்கை. இரண்டெழுத்து மறுமலர்ச்சி அரசியல்வாதியின் பாசறையிலிருந்து உருவானவருக்கு இப்போதே தான் அமைச்சராகிவிட்ட பூரிப்பாமே, மெய்யாலுமா?
===
இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களிலேயே இரண்டாவது சீனியர் அவர். உடன் பிறப்புகளின் ஆட்சி என்றால் பொதுப்பணித் துறை அவருக்கு என்பது எழுதப்படாத சட்டம். அவரது வாரிசை மக்களவைத் தேர்தலில் களமிறக்க இருக்கிறாராம் துரை. அவருக்கு வேண்டிய 20 பேர் அவரது மகனின் பெயரில் அறிவாலயத்தில் போட்டியிடுவதற்குப் பணம் கட்டி மனு சமர்ப்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வேறு யாரும் மனு சமர்ப்பித்து விடாமல் உருட்டியும் மிரட்டியும் பார்த்துக் கொள்கிறார்கள்.
வேட்பாளராக விரும்புபவர் கட்சிப் பிரமுகர்களையும் தலைவரையும் வந்து பார்த்தாரா என்றால் இல்லை. அவர் ஆனந்தமாக மகாதேவமலை, மலைக்கொடி, ரத்னகிரி சாமியார்களைப் பார்த்து ஆசி பெற்றுக் கொண்டிருக்கிறாராமே? பகுத்தறிவின் புதிய பரிமாணம் இது என்று அறிவாலயத்திலேயே இதைப் பலர் கிண்டலடிக்கிறார்களாமே, மெய்யாலுமா?
===
ஒரு புறம் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள். மறுபுறம், மதுபானத் தயாரிப்புத் தொழிற்சாலை. இன்னொரு புறம் "நாராயணா, நாராயணா' என்று ஆழ்வார்களை மையமாக்கி வைணவப் பிரசாரம். இத்தனையும் போதாதென்று அரசியல். இப்படிப் பன்முகப் பரிமாணம் கொண்ட அந்த உலகப் பாதுகாவலர் தமிழகத்தில் போட்டியிடத் தொகுதி இல்லாமல், அண்டை மாநிலமான புதுவையில் போட்டியிடுவதாக இருக்கிறாராம். அரைக் கோணம் முழுக் கோணலாகி, பெரும்புதூர் பெரும் புதிராகி, கட்சித் தொண்டர்களின் எதிர்ப்பு அதிகரித்ததுதான் காரணமாமே, மெய்யாலுமா?
===
கடந்த ஆட்சியில் புலனாய்வுத் துறையின் தலைமைப் பொறுப்பு வகித்தவருக்கும் அன்றைய முதல்வரின் பெயரிலான தொலைக்காட்சியுடன் தொடர்புடையவர்களுக்கும் இடையிலான உரையாடல்கள் இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. பல்லாயிரம் கோடி பரிவர்த்தனைகள் அந்த காவல் துறை உயரதிகாரி மூலம் நடைபெற்றிருப்பதால், இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்குமோ என்று ஆடிப்போய் இருக்கிறதாமே அந்த அரசியல் குடும்பம்? கூட இருந்தே குழி பறித்த அந்த உடன்பிறப்பு, குடும்ப அங்கத்தினராகவே இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறதாமே, மெய்யாலுமா?
===
தங்களது கூட்டணியின் முரசாக செயல்படுவதற்கு அதிகாரபூர்வ எதிர்க்கட்சிக்கு மாநிலங்களவை இடமும் நூறு கோடி ரூபாயும் பேரம் பேசியிருந்தார்களாம். பேரம் படியாத நிலையில், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன்பிறப்பு ஆசிபெறச் சென்றபோது, "நூறு கோடி ரூபாய் விலை மதிப்புள்ள சீட்டய்யா இது, ஞாபகமிருக்கட்டும்!' என்று எதிர்பார்ப்பு பொய்த்த விரக்தியில் சொன்னாராமே தலைவர், மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.