

அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்வதிலும், நேர்காணல் நடத்துவதிலும் சுறுசுறுப்பாக இருக்கும்போது, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சி இப்போதுதான் அவசர அவசரமாகக் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதிலேயே கோஷ்டிகளுக்குள் பூசல் தீராமல் இருப்பதுதான் இன்னும் அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் மத்திய ஆளும் கட்சி இருப்பதற்குக் காரணமாமே, மெய்யாலுமா?
===
மத்திய சென்னை மக்களவை உறுப்பினராக இருப்பவரை தென் சென்னைக்கு மாற்றிவிட நினைக்கிறதாம் கட்சித் தலைமை. கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளராக ஆங்கில, இந்தி தொலைக்காட்சிச் சேனல்களுக்குப் பேட்டிகள் அளிக்கும் "இட்லி' நடிகையை மத்தியத் தொகுதியின் வேட்பாளராக அறிவிப்பதற்காகத்தானாமே இந்த முடிவு, மெய்யாலுமா?
===
தமிழகத்தில் பலமான மூன்றாவது அணி அமைப்பதில் முனைப்பாக இருக்கும் இந்தியாவின் மாற்று தேசியக் கட்சி, கூட்டணியில் இணைவதற்கு மாநிலக் கட்சிகள் நடத்தும் பேரத்தாலும், நிபந்தனைகளாலும் நிலைகுலைந்து போயிருக்கிறதாம். அவரவர் கேட்கும் தொகுதிகளைக் கூட்டிப் பார்த்தால், அவர்களுக்கு மட்டுமே 60 தொகுதிகள் தேவைப்படும் போலிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இன்ன தொகுதி வேண்டும் என்கிற நிபந்தனையுடன் நின்று விடாமல் தொகுதிக்கு இவ்வளவு என்று செலவுக்குப் பணமும் கேட்கிறார்களாம். ஆடு, புலி, புல்லுக்கட்டு கதையாகிப் போய்விட்டது நம்ம பிழைப்பு என்று சலித்துக் கொள்கிறார்களாமே, கமலாலயத்துக்காகத் தூது சென்றவர்கள், மெய்யாலுமா?
===
அமெரிக்காவில் 1966 முதல் 1982 வரை பரபரப்பாக செயல்பட்ட அமைப்புகளில் ஒன்று கருஞ்சிறுத்தைகள் (பிளாக் பேந்தர்ஸ்) கட்சி. கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாந்து என்கிற நகரத்தில் ஹென்றி நியூட்டன், பாபி சீயல் எனப்படும் இருவரால் கறுப்பர் இன மக்களின் பாதுகாப்புக்காகவும், காவல் துறையினரின் அத்துமீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்பவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இடதுசாரி சிந்தனையுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கறுப்பு இன மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
பால்டிமோர், பாஸ்டன், சிகாகோ, கிளீவ்லாந்து, டல்லாஸ், டென்வர், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சலஸ், நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க், பிலடெல்பியா, பிட்ஸ்பர்க், சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில், வாஷிங்டன் போன்ற நகரங்களில் இந்தக் கட்சிக்கு கணிசமான வரவேற்பும், உறுப்பினர் சேர்க்கையும் இருந்தன. எல்ட்ரிட்ஜ் கிளிபர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு இந்த இயக்கத்திற்காக வெளியிடப்பட்ட "பிளாக் பேந்தர்' என்கிற தினசரி இரண்டரை லட்சம் பிரதிகள் விற்பனையானது.
இனவெறிக்கு எதிராகவும், இடதுசாரிக் கொள்கையின் அடிப்படையிலும், "என்ன நினைக்கிறோம், என்ன எதிர்பார்க்கிறோம்' என்கிற தலைப்பில் கருஞ்சிறுத்தைகள் வெளியிட்ட 10 அம்ச அறிக்கை அறுபதுகளில் உலகளாவிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. குழந்தைகளுக்கு இலவச காலை உணவு உள்ளிட்ட பல சமுதாய நலத் திட்டங்களை இந்தக் கட்சி நிறைவேற்ற முற்பட்டது. ஆனால் காலப்போக்கில், இந்தக் கட்சி உறுப்பினர்களின் போதை மருந்துக் கடத்தல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகளும், காவல் துறைக்கு எதிரான செயல்பாடுகளும், வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கம் எதிரான ஆள் கடத்தல், பிளாக்மெயில் நடவடிக்கைகளும் கருஞ் சிறுத்தைகள் மீது மக்களை வெறுப்படையச் செய்தன. பலாத்கார, அடாவடிக் கும்பலாக மாறிய கருஞ் சிறுத்தைகள் அடையாளம் இழந்தனர்.
உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற அந்த அரசியல் கட்சித் தலைவர், காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளரை சமீபத்தில் சந்தித்தாராம். அப்போது அவர் "உங்களுக்கும் கருஞ் சிறுத்தைகள் கட்சிக்கும் என்ன தொடர்பு?' என்று கேட்டபோது, இவருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். "விடுதலைப் புலிகள்' பாணியில் பெயர் வைத்திருக்கிறோம் என்று சொல்ல வாயெடுத்தவர், அவர் என்ன நினைப்பாரோ என்று எதுவுமே பேசாமல் அசட்டுச் சிரிப்புச் சிரித்து மழுப்பி விட்டாராமே, மெய்யாலுமா?
===
ஆந்திர தேசத்தில் சைக்கிள் சின்னத்துக்கு சொந்தமான அந்த தெலுங்கு அரசியல் தலைவர் சென்னைக்கு வந்து இந்நாள், முன்னாள் முதல்வர்களை சந்தித்தற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறதாம். சமீபத்தில் வெளியான 2ஜி விவகாரம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள்போல, அந்தக் காவல் துறை மேலதிகாரிக்கும் தனது அரசியல் எதிரியான புதிய கட்சித் தலைவருக்கும் இடையிலான உரைடயாடல்களும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் வந்தாராமே. விரைவிலேயே அந்தத் தொலைபேசி உரையாடல்களும் கசியவிடப்படும் என்கிறார்களே, மெய்யாலுமா?
===
சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஐ.பி.எல். ஊழல் குறித்த விசாரணையில் கிரைம் பிராஞ்சு புலன்விசாரணைப் பிரிவுக் காவல் துறையினர் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறார்களாம். அதன் மூத்த அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாக வேண்டும் என்று முனைப்புக் காட்டுவதற்குக் காரணம் இருக்கிறதாம். முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டு, சாதாரண புக்கிகள் மீது மட்டும் குற்றம் சுமத்தி விவகாரத்தை முடித்துவிட முயற்சி நடக்கிறதாமே, மெய்யாலுமா?
===
கடந்த வாரம் வரை வாரிசுகள் யாருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்று சொல்லி வந்த தலைவர், இப்போது, அத்தனை தொகுதிகளிலும் வாரிசுகளை நிறுத்திவிடலாம் என்று யோசனை கூறுகிறாராம். ஏன் இந்த திடீர் தடாலடி மாற்றம் என்று உடன்பிறப்புகள் குழம்பிப் போய் இருக்கிறார்களாம். வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பளித்துவிட்டு, அவரவர் அவரவர் தேர்தல் செலவைப் பார்த்துக் கொள்ளுங்கள், என்னிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்லி விடுவதுதானாமே தலைவரின் திட்டம், மெய்யாலுமா?
===
மத்தியில் ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு தங்களுக்கு நிச்சயமாக உண்டு என்பதால், மக்களவை உறுப்பினர்களாக இருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் தங்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. அமைச்சர்களில் இருவரும், மேயர்களில் இருவரும் தங்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று நம்புகிறார்கள். இப்போதே மத்திய அமைச்சர்களாகிவிட்ட கற்பனையில் மிதக்கிறார்களாமே அந்த சாமிகள், என்னப்பா, சொல்லப்பா மெய்யாலுமா?
===
அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது என்றால், முதல் ஆளாக அழைப்பு அவருக்குத்தான் போகும். முரசொலியைத் தனது பெயராக்கிக் கொண்டிருந்த அந்த மறைந்த தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பொருளாதார நிபுரணர் அவர். அவரது திட்டமிடலும் சரியாக இருக்கும், தயாரிப்பும் கச்சிதமாக இருக்கும். முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் புற்றில் முடங்கிய பாம்பாக அவர் அறிவாலயம் பக்கமே தலைகாட்டுவதில்லையாமே, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.