மெய்யாலுமா..?

சூதாட்ட விவகாரம் மீண்டும் பூதாகாரமாக வெடிக்கும் போலிருக்கிறது. மூடி மறைத்துவிட்டதாக இறுமாந்திருந்த அதிகாரிகளும், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தைரியமாக இருந்த வி.ஐ.பி. புக்கிகளும் இப்போது குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
மெய்யாலுமா..?
Updated on
2 min read

சூதாட்ட விவகாரம் மீண்டும் பூதாகாரமாக வெடிக்கும் போலிருக்கிறது. மூடி மறைத்துவிட்டதாக இறுமாந்திருந்த அதிகாரிகளும், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தைரியமாக இருந்த வி.ஐ.பி. புக்கிகளும் இப்போது குழம்பிப் போய் இருக்கிறார்கள். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற நிலையில், முக்கியமான நபர்கள் சிலரை அதில் சம்பந்தப்படுத்தாமல் இருக்கப் பல கோடிகள் பேரம் பேசப்படுவதாக காவல் துறை வட்டாரங்களில் வதந்தியோ வதந்தி.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நட்சத்திர ஹோட்டல் நடத்துபவரிடம் ஹோட்டலையே தனது உறவினர்கள் பெயரில் மாற்றிக் கொடுக்கக் கேட்டாராம் ஒரு அதிகாரி. ஏபிக்கு இவ்வளவு, எஸ்பிஎஸ்சுக்கு இவ்வளவு என்றெல்லாம் சங்கேத மொழியில் பேரம் நடக்கிறதாம். உளவுத் துறையும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் இந்த விவகாரத்தைக் கசியவிட்டவரைக் கைது செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்தனராம். ஆனால், தமிழக அரசு இவர்கள் பேரங்களை மோப்பம் பிடித்துவிட்டதால் பரிந்துரைக்கு செவி சாய்க்கவில்லையாமே, மெய்யாலுமா?

===

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு எட்டிவிட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி தனது கூட்டணியில் உள்ள ஏனைய தோழமைக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறதாம். புதிய தமிழகம், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போல வேறு யாரையும் இழந்துவிடக் கூடாது என்பதால் அவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி தரப்பட இருக்கிறதாமே, மெய்யாலுமா?

===

வாரியம் என்றதும் நினைவுக்கு வருகிறது. நீதிபதி ஜனார்தனம் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது. விரைவிலேயே வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு அல்லது வன்னியர் நல வாரியம் பற்றிய அறிவிப்பு முதல்வரிடமிருந்து வரக்கூடும் என்றும், அப்படியொரு அறிவிப்பின் மூலம் வடமாவட்டங்களில் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்று நினைக்கிறதாமே ஆளும் கட்சி, மெய்யாலுமா?

===

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான உரையாடல் ஒலிநாடாவை வெளியிட்ட இணையதளம் மீது அறிவாலயம் ஆத்திரமடைந்திருப்பது புரிகிறது. ஆனால், இந்தப் பிரச்னையில் உயர்நீதிமன்ற நீதியரசரே ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகிறார் என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் வழக்குரைஞர்களும், காவல் துரையினரும். இணையதளம் நடத்துபவரை உடனே கைது செய்ய அவர் உத்தரவிட்டாலும், இணையதள சேவை நல்கும் அமெரிக்க நிறுவனத்தின் உதவி இல்லாமல் எந்தவொரு இணையதளத்தையும் முடக்கவும் முடியாது, நடத்துபவரைக் கைது செய்யவும் முடியாதாமே? நீதியரசருக்கு இதை யார் எடுத்துச் சொல்வது, எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்புகிறதாமே காவல் துறை, மெய்யாலுமா?

===

உடன்பிறப்புகள் மலைக்கோட்டை மாநகரில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 50 கோடி ரூபாய் செலவில் நடத்தும் மாநாட்டுக்குத் தண்ணீராகப் பணம் செலவு செய்யப்படுவதன் பின்னணியில் வியாபார நோக்கம் இருக்கிறதாமே? அந்த இடத்தின் நிஜ மதிப்பீடு (ட்ரூ வால்யூ) மாநாடு முடிந்த பிறகுதான் தெரியுமாம். மாநாடு நடக்கும் இடம் உடன்பிறப்பின் உறவினர்களுக்குச் சொந்தமான இடம்தானாம். மாநாடு நடத்தி இடத்தின் மதிப்பை அதிகரிப்பது என்றும், மாநாட்டுக்குப் பின் உடன்பிறப்பின் இளவல் நடத்தும் குடியிருப்பு நிறுவனம் அங்கே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்க இருப்பதாகவும் கூறப்படுகிறதே, மெய்யாலுமா?

===

திருச்சி தி.மு.க. மாநாடு பற்றி இன்னொரு செய்தி. மாநாட்டுக்காக கருணாநிதி, ஸ்டாலின் பேனர்களும், கட் அவுட்டுகளும், தோழமைக் கட்சித் தலைவர்களின் படங்களும் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டிருந்தனவாம். ஆனால் ஒரு இடத்தில்கூடக் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் படமோ கட் அவுட்டோ வைக்கப்படவில்லையாம். மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்டாலினுக்குத் தகவல் சொல்ல, கடைசி நேரத்தில் பெயருக்கு ஒரு அன்பழகன் கட் அவுட்டும் சில படங்களும் வைக்கப்பட்டனவாமே? "மற்றவர்களுக்குக் கட் அவுட். பேராசிரியருக்குக் கட் அண்ட் அவுட்' என்று காமென்ட் அடித்தனராமே அடுத்த வாரிசின் ஆதரவாளர்கள், மெய்யாலுமா?

===

அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் தலைநகரம் சென்றது, பிரதமரை சந்தித்தது எல்லாமே மற்றவர்களைக் குழப்பவும், தனது பேரத்தை அதிகரிக்கவும்தானாம். ஆனால், தில்லி பாதுஷாக்கள் இவரைவிடக் கில்லாடிகளாக இருக்கிறார்களாம். இவர் சந்திக்க நேரம் கேட்டு ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் இருவருக்கும் செய்தி அனுப்பியும் அவர்களிடமிருந்து எந்தவித சலனமுமில்லையாம்.

கூட்டணிக்கு ஒப்புதல் அளித்த பிறகுதான் சந்திக்க வேண்டும் என்று பேசாமல் இருந்துவிட்டதாம் காங்கிரஸ் தரப்பு. தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆதரவு தேவைப்படலாம் என்பதால் இவரை சந்திப்பதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் பேசாமல் இருந்துவிட்டதாம் பா.ஜ.க. தரப்பு. மற்றவர்களைக் குழப்ப நினைத்துத் தான் குழம்பிப்போய் திரும்புகிறாராமே மிஸ்டர் எதிர்க்கட்சி, மெய்யாலுமா?

===

சமீபத்தில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தினர் ஒரு கள்ளநோட்டுக் கும்பலைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பல், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்டிலிருந்து செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலும் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளருக்கும் கள்ளநோட்டுக் கும்பலுக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்று கவுண்டமணியை அழைத்து வந்து நான்கு அடி, இரண்டு உதை கொடுத்தால்தான் தெரியும் என்கிறார்களே, மெய்யாலுமா?

===

கூட்டணி வலுவாக அமைத்து தேர்தல் களத்தில் ஆளும்கட்சியை எதிர்க்கும் பலம் இல்லாமல் போனால், தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு மிகப்பெரிய ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் திட்டத்தில் இருக்கிறதாமே முன்னாள் ஆளும்கட்சி. தன்னுடன் இணைந்திருக்கும் மூன்று கட்சிகளுமே கலவரத்தைத் தூண்ட பயன்படும் என்று திட்டமிட்டேதான் கூட்டணியில் சேர்க்கப்பட்டிருக்கிறதாமே? இதுபற்றி உளவுத் துறை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் வாளாவிருப்பது ஏன் என்று காவல் துறை வட்டாரங்களிலேயே கேள்வி எழுப்பப்படுகிறதாமே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com