மெய்யாலுமா..?

வாழ்வுரிமைக்காகக் கட்சி தொடங்கி "வெற்றி வேல், வீர வேல்' என்று தனது முன்னாள் தலைவருக்கு எதிராக சொற்போர் நடத்தி வரும் தலைவர், அவசர அவசரமாக முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தது ஏனாம்?
மெய்யாலுமா..?
Updated on
2 min read

வாழ்வுரிமைக்காகக் கட்சி தொடங்கி "வெற்றி வேல், வீர வேல்' என்று தனது முன்னாள் தலைவருக்கு எதிராக சொற்போர் நடத்தி வரும் தலைவர், அவசர அவசரமாக முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தது ஏனாம்? இத்தனை நாள்களும் அறிவாலயமே கதி என்று கிடந்தவர், இப்போது திடீரென்று கோட்டையில் சரணடைந்ததன் பின்னணி என்னவாம்? அன்புச் சகோதரியிடம் பழைய பாசத்துடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஸ்டெதாஸ்கோப்பும் கையுமாக தனது முன்னாள் தலைவர் முனைந்து விடக் கூடாதே என்பதற்காகத்தானாம் இந்த நாடகம். அறிவாலயத்தின் ஆலோசனைப்படிதான் இந்த நாடகம் நடக்கிறதாமே, மெய்யாலுமா?

==========================

சென்னையிலுள்ள பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு வழக்கு சென்னை மாநகர காவல் துறையிடம் விசாரணைக்கு வந்திருக்கிறது. விஷயத்தைத் தெரிந்து கொண்ட கருணைக் கடலான ஒரு உயர் அதிகாரி, தியேட்டர் அதிபருக்கு சாதகமாக விஷயத்தை முடித்துத் தருவதாக சத்தியம் செய்து பெரும் பணம் வசூலித்து விட்டாராம். முதலில் ரெடி என்று சொல்லிக் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை அள்ளிக் கொடுத்தவர், இப்போது வாயைப் பொத்திக் கொண்டு கோடி, கோடி என்று குமுறுகிறாராமே, மெய்யாலுமா?

==========================

ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யக் கூட்டணிக் கட்சி ஒன்றின் மகளிர் அணித் தலைவி ஐம்பது கோடி கேட்கிறாராம். தான் பிரசாரத்திற்கு போவதால், தொலைக்காட்சியில் கிடைக்கும் வருவாயை இழக்க நேரிடும் என்றும், ஆளும் கட்சி சேனலில் வாய்ப்புக் கிடைத்தாலும், தற்போது இருக்கும் வரவேற்பு இருக்காது என்றும் கூறுகிறாராம். வேட்பாளர் கனவு கலைந்துவிட்ட நிலையில், பணமாவது மிஞ்சட்டும் என்கிற சமத்துவக் கண்ணோட்டம்தான் காரணமாமே மெய்யாலுமா?

==========================

எம்.ஜி.ஆர். பாணியில் கணக்குக் கேட்கத் தயாராகி வருகிறாராம் மூத்த வாரிசு. அறக்கட்டளை சொத்துகளைத் தம்பியின் ஆசியுடன் அவரது ஆதரவாளர்கள் அபகரித்து வருவதாகவும், கட்சியின் வரவு-செலவு கணக்குகள் முறையாகத் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்ட இருக்கிறாராமே, மெய்யாலுமா?

==========================

முத்த வாரிசு முறுக்கிக் கொண்டு முறைத்தாலும், மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அவரது மகளைத்தான் நிறுத்த இருக்கிறதாம் கட்சித் தலைமை. அதுமட்டுமல்லவாம். மூத்த வாரிசின் ஆதரவாளரான நடிகர்தான் சேதுபதி சமஸ்தானத்தின் தலைநகரை உள்ளடக்கிய தொகுதியின் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்படுவார் என்கிறார்கள். மூத்த வாரிசு வாக்குகளைப் பிரித்து விடாமல் இருப்பதற்குக் கட்சித் தலைமை கைவசம் வைத்திருக்கும் பேரம் இதுதானாமே, மெய்யாலுமா?

==========================

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் அருகே இருக்கிறது ஒரு பீடா ஸ்டால். அங்கே வடநாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பீடா வாங்கிச் செல்வது வழக்கம். நடிகை ஹேமமாலினியின் கணவர் பெயர் கொண்ட அதிகாரி யாதவர்களின் பிரதாபங்களை அந்தக் கடையின் முன்னால் நின்றபடி தனது நண்பர் ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த காவல் துறையினர் பீடாக் கடையைப் பூட்டும்படி கூறி, அங்கிருந்தவர்களைக் கலைந்து போகச் சொல்லி இருக்கிறார்கள்.

பேசிக் கொண்டிருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று காவல் துறை கான்ஸ்டபிளுக்கு எப்படித் தெரியும்? அதிகாரிக்கு வந்ததே பார்க்கலாம் கோபம். வாய்த் தகராறு முற்றியதும், அந்த அதிகாரியை ரோந்து வாகனத்தில் ஏற்றி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குக்கொண்டு சென்றுவிட்டனர்.

அபூர்வமாக நடந்துவிட்ட தவறு என்று விட்டுவிடாமல், ஏதோ ஐ.ஏ.எஸ். மீது ஐ.பி.எஸ். நடத்திய தாக்குதல் என்று வன்மம் கொள்கிறாராம் காவல் துறையைக் கட்டுப்படுத்தும் அந்தப் பெண் அதிகாரி. சென்னை மாநகர காவல் துறையின் இணை ஆணையர் ஒருவரை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டித் தீர்த்துவிட்டாராம். "தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் ஜாமத்துக்கு ஜாமம் கொட்டும் என்பது உண்மை போலிருக்கிறது' என்று அந்தப் பெண் அதிகாரியைக் கிண்டலடிக்கிறதாமே காக்கிகள் வட்டாரம், மெய்யாலுமா?

==========================

திருவாளர் பொதுப்பணித் துறை என்று பரவலாக அறிவாலய வட்டாரத்தில் அறியப்படும் அந்த மூத்த தலைவர் இதுவரை பத்து முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எட்டு தடவை வெற்றி பெற்றவர். மக்களவைத் தேர்தலில் தனது வாரிசைக் களமிறக்கத் தயாராகி இருக்கிறார் 1984, 1991 அனுதாப அலைகளால் மட்டுமே தோற்கடிக்கப்பட்டவர் அந்த துரை. சிப்பாய் கலகத்துக்குப் பேர் போன ஊரின் பெயரிலான மக்களவைத் தொகுதியில் இருக்கும் ஏறத்தாழ 2 லட்சம் சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெற்று விடலாம் என்றும், அதன் மூலம் மகனின் வெற்றியை உறுதிப்படுத்தி விடலாம் என்று நம்புகிறாராம். "கவலைப் படாதீர்கள், ஏசுநாதரையே அழைத்து வந்து உங்கள் மகனின் வெற்றியை உறுதிப்படுத்துகிறேன்' என்று சொல்லால் பால் மாரி பொழிந்திருக்கிறாராமே அந்த மத போதகர், மெய்யாலுமா?

==========================

சின்னக் கவுண்டரையும், எஜமானையும் நினைவுபடுத்தும் இயக்குநரின் பெயர் கொண்ட அமைச்சர் அவர். அவரும், அவரது ஆதரவாளர்களும், "அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் அண்ணன் பொதுப்பணித் துறை அமைச்சராகப் போகிறார் என்று அடித்துச் சொல்கிறார்களாமே? விளையாட்டு வினையாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசிக் கொள்கிறார்களாமே, மெய்யாலுமா?

==========================

கடந்த ஒரு வாரமாக தலைமைச் செயலகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கு பட்ஜெட் கூட்டத் தொடர் மட்டுமே காரணமில்லையாம். அமைச்சர்களின் உதவியாளர்களிடமும், பல்வேறு துறை அதிகாரிகளிடமும் தங்களது வேலை நடப்பதற்குப் பேசி வைத்திருப்பவர்கள் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு விடுமே என்கிற பயத்தில் கோட்டைக்குப் படையெடுப்பதுதான் காரணமாமே மெய்யாலுமா?

==========================

தாமரைப் பூவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூட்டணிக்குத் தயார் என்று திருவாளர் எதிர்க்கட்சி முரசறைந்து விட்ட நிலையில், ஞானப்பழம் எனக்கு என்று பத்து விரல்களையும் விரித்துக் கொண்டிருந்த மருத்துவர், ஏமாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாராம். பத்தில் பாதி கிடைத்தாலும் போதும் என்கிற மனநிலையில் அவரும், வட மாவட்டத்தில் மூன்று மட்டும் என்றால் கூட்டு என்கிற பிடிவாதத்தில் கமலாலயமும் இருக்கிறதாமே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com