மெய்யாலுமா.?

பெரம்பலூரிலிருந்து நீலகிரிக்கு இடம் பெயர்ந்து வெற்றி பெற்றவர், வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் இன்னொரு தொகுதிக்கு மாற நினைக்கிறாராம்.
மெய்யாலுமா.?
Updated on
3 min read

பெரம்பலூரிலிருந்து நீலகிரிக்கு இடம் பெயர்ந்து வெற்றி பெற்றவர், வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் இன்னொரு தொகுதிக்கு மாற நினைக்கிறாராம். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் எனப்படும் நந்தனாரின் பெயரைச் சொன்னால் நினைவுக்கு வரும் திருத்தலத்தின் பெயரிலான தொகுதி அது. இது என்ன "தொல்'லை என்று "திரு' திருவென்று விழிக்கிறாராம், அந்தத் தொகுதிக்கு சொந்தக்காரர். கூட்டணிக் கட்சித் தலைமை மேற்படியார் என்ன சொன்னாலும் "ஆ'ஹா என்று ஆமோதிக்கும் என்பது தெரிந்ததால் சிறுத்தை போலச் சீறிக் கொண்டிருக்கிறாராம் சின்னக் கட்சியின் தலைவர். தொகுதி மாறச் சொன்னால் கூட்டணியை மாற்றிக் கொண்டு விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்திருக்கிறாராமே, மெய்யாலுமா?

===

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில், அந்தக் கட்சியை எதிர்த்துப் போட்டியிட இடதுசாரிகளுக்கு இடம் ஒதுக்க முடிவெடுத்திருக்கிறதாம் ஆளும் கட்சி. அறிவாலயமும் சரி, பா.ஜ.க. நிற்கும் இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க நினைக்கிறதாம். தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்குத்தான் இப்படி உத்தியாமே, மெய்யாலுமா?

===

கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் அது குறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தகவல்கள் அனுப்ப வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உண்டு. மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் அறிக்கைகளைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரிக்கிறார்களாம். ஒரு காலத்தில் வடக்கத்தியருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்து வந்த தமிழகத்திலிருந்து, தப்புத் தப்பான ஆங்கிலத்தில் அறிக்கைகள் அனுப்பப்படுவதுதான் காரணமாம். நேரிடையாக ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதாமல் பதவி உயர்வால் ஐ.ஏ.எஸ். ஆனவர்களை கடலோர மாவட்டங்களில் ஆட்சியராக நியமிப்பதால் ஏற்படும் அவமானம் இது என்று மூத்த அதிகாரிகள் காரணம் சொல்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

அதிரடியாக நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்ததில் தமிழக காங்கிரஸின் பல்வேறு கோஷ்டிகள் கொதித்துப் போய் இருக்கின்றன. அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு மாவட்டச் செயலாளர்களும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பரிந்துரைத்த நபர்கள் என்பது ஒரு காரணம். முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் மூவர் அதிரடியாய் மாற்றப்பட்டது இன்னொரு காரணம். விரைவிலேயே, சிதம்பரம் கோஷ்டிக்கு எதிராக இன்னொரு அதிரடி மாற்றம் ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறதே, மெய்யாலுமா?

===

தி.மு.க.வின் ஜெயலலிதா' என்று தில்லி பத்திரிகையாளர்களால் வர்ணிக்கப்படும் நடிகை அவர். ஒரு காலத்தில் பிரபு, ரஜினி, கமல், விஜயகாந்த் என்று எல்லா முன்னணி கதாநாயகர்களின் ஆதரவுடன் சூப்பர் ஸ்டாரிணியாக வளைய வந்தவருக்கு கடுமையான பணமுடையாம். பல கோடிகள் கடன் என்று கூறி அழுகுகிறாராம். அவர் தமிழகத்தின் மிக மூத்த தலைவரின் கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறாராம். விளைவு, ஊழலுக்குக் கால்வாய் வெட்டியவரிடமும், இந்திய கஜானா பஞ்சாமிருதத்தில் கையை விட்டவரிடமும் அவருக்கு உதவ உத்தரவு இடப்பட்டிருக்கிறதாமே... மெய்யாலுமா?

===

திரையுலகின் அஷ்டாவதானி அவர். தனது லட்சியத்தைக் காற்றில் பறக்கவிட்டு, பழைய அவமானங்களை எல்லாம் மறந்து அறிவாலயத்தில் கொஞ்ச நாள் முன்னால் சரணடைந்தார். தாய்க் கழகத்திற்குத் திரும்பி விட்டார் என்றெல்லாம் சேதி வந்தது. ஆனால், அவர் இன்னும் கட்சியில் அதிகாரபூர்வமாகச் சேரவில்லையாம். உறுப்பினர் அட்டையை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கட்சி அலுவலகத்திலிருந்து பலமுறை தொடர்பு கொண்டு அழைத்தும் மெüனம் சாதித்து வருகிறாராம். தந்தையின் அரசியல் நிலைப்பாடு தனது வருங்காலத்தைப் பாதித்துவிடும் என்று நட்சத்திரமாக வளையவரும் மகன் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால்தான் இந்தப் பாராமுகமாமே, மெய்யாலுமா?

===

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் திரும்பவும் யூனியன் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோம் என்கிற நம்பிக்கை அந்த சாமிக்கு இல்லை. தனக்கு எதிராக போட்டி காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் மட்டுமே தான் வெற்றி பெற வாய்ப்பு என்பதால், இத்தனை நாளும் தனது பரம எதிரியாகக் கருதியவருடன் சினேகம் பாராட்ட முயற்சித்து வருகிறாராம் அந்த மத்திய அமைச்சர். "நாராயணா, நாராயணா' என்று அவர் உச்சரிக்கிறாரோ இல்லையோ, "ரங்கா, ரங்கா' என்று இவர் புலம்பிய வண்ணம் இருக்கிறாராம். மக்களவை எனக்கு, மாநிலங்களவை உனக்கு என்று பிரித்துக் கொண்டு பொது எதிரியை வீழ்த்த முடியும் என்று இவர் கூறும் கணக்கை அவர் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. எல்லாமே எனக்கு என்று சொல்கிறதாமே துலுக்க நாச்சியாருடைய சாமி, மெய்யாலுமா?

===

சமீபத்தில் தமிழகத்தின் பரிந்துரையை ஏற்று ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்ட பத்து குரூப் 1 அதிகாரிகளில் மூவர் மீது அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாம். "இந்த மூவர் மீதும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி ஐ.ஏ.எஸ். அந்தஸ்து கொடுக்கலாம்' என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

ஆட்சியும், அமைச்சர்களும்தான் மாறிக் கொண்டிருப்பார்களே தவிர அந்த அதிகாரியின் பொதுப்பணி மட்டும் எப்போதும் போல தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் யார்?'' என்று தலைமைச் செயலகத்தின் கடைநிலை ஊழியர்களுக்குக்கூடத் தெரியும். அமைச்சரின் பெயரால் வசூல் வேட்டை நடத்தும் அந்த அதிகாரியின் வசூலுக்கும் அமைச்சருக்கும் சம்பந்தா சம்பந்தமில்லை என்று சொன்னால், அதை தலைமைச் செயலக ஊழியர்களில் பலர் "ஓ' போட்டு ஆமோதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவருக்கு தலைமைச் செயலகத்தில் வளைய வரும் ஒப்பந்தக்காரர்கள் வைத்திருக்கும் பெயர் திருவாளர் 5%. அவருக்குத் தரப்படும் பணத்துக்கான கணக்கை "அண்ட் கோ' கணக்கு என்று குறிப்பிடுகிறார்களாமே, மெய்யாலுமா?''

===

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என்று அ.தி.மு.க. தவிர ஏனைய பெரிய கட்சிகள் எல்லாம் தங்கள் கூட்டணியில் தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியை இணைத்துக் கொள்ளத் துடிக்கின்றன. ஆனால் அந்தக் கட்சித் தலைவரோ, தன்னைக் கேப்டனாக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று முரசறைந்து தெரிவித்து விட்டிருக்கிறார். விசாரித்தால் அந்த அறிவிப்பே தனது மார்க்கெட் வேல்யூவைக் கூட்டுவதற்காகத்தானாம். அவரைப் பொருத்தவரை, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதில் ஆர்வமே இல்லையாம். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தனது கட்சியை வளப்படுத்திக் கொள்வதில்தான் முனைப்பாக இருக்கிறாராம். அதற்கு உதவும் கட்சி எது என்பதில்தான் பேரமே இருக்கிறது என்கிறார்களே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com