

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டுமா? சில வேளைகளில் கட்டும் போலிருக்கிறதே. மாநிலங்களவைக்குப் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஊராட்சிக் குழு நிதியில் சுமார் 2 கோடி ரூபாய் முறைகேடுகளுக்காக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை வளையத்தில் இருப்பதால், ஆளுங்கட்சியால் வேட்பாளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் அந்த துரையின் சின்ன விவகாரம் பெரிய விவகாரமாக வேறு திசையை நோக்கிப் பயணிக்கும் போலிருக்கிறதே. கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அடுத்த வாரிசுக்கும் அதில் தொடர்பு இருக்கிறதாமே? விசாரணை வளையத்தில் அவரும் சிக்கக் கூடும் என்கிறார்களே, மெய்யாலுமா?
===
மத்திய அமைச்சரவையிலிருந்து கட்சிப் பணிக்காகத்தான் பதவி விலகுவதாக அறிவித்து ராஜிநாமா செய்த தமிழகப் பெண்மணி வீட்டை விட்டே வெளியில் வருவதில்லையாம். கட்சித் தலைமை பழையதுபோல அவரைப் பத்திரிகைத் தொடர்பாளராகவும் அறிவிக்கவில்லை, மாநில கட்சி அமைப்பிலும் பொறுப்பு எதுவும் கொடுக்கவில்லை. சுற்றுச்சூழல் சரியில்லை என்பதால் சிறிது காலம் அரசியல் வனவாசம் போய்விடுவது என்று முடிவெடுத்துத் தனது அத்யந்த உதவியாளருடன் தலைமறைவாகிவிட்டிருக்கிறாராமே, மெய்யாலுமா?
===
1998இல் சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்த இடத்தில் இயங்கும் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் அதிபர் மீது தேவகோட்டை நடுவர் நீதிமன்றம் 2013 மார்ச் 22ஆம் தேதி பிறப்பித்திருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் கிடப்பில் போடப்பட்டிருக்கிறதாமே? இதைக் காரணம் காட்டி சில காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது தங்கள் முத்துப் பல்லை இளித்துப் பச்சை பச்சையாகக் கரன்சி நோட்டுக்களை வாங்கிக் கொள்கிறார்களாமே? வாரண்ட் ரத்து செய்யப்படாத நிலையில், எந்த நேரத்திலும் உளவுத் துறை கைது செய்யக்கூடும் என்கிற பயத்தில் இருக்கிறாராமே தன்னை முல்லைக்குத் தேர் ஈந்த கடையேழு வள்ளலாகக் கருதும் பகுதிநேர அரசியல் தலைவர், மெய்யாலுமா?
===
அ.தி.மு.க.வில் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் கி. மனோகரன், 1980இல் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது அவரை ஒரு மிகப்பெரிய பிரச்னை எதிர்கொண்டது. அதுவரை முழுக்கை வெள்ளை மஸ்லின் ஜிப்பா அணிந்து கைப்பகுதியைச் சுருட்டி விட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நாஞ்சில் மனோகரனால், பழையதுபோல மஸ்லின் ஜிப்பாவும் அணிய முடியவில்லை, கையை மடித்து விடவும் முடியவில்லை.
காரணம், எம்.ஜி.ஆரின் கட்டளைப்படி அ.தி.மு.க. கொடியை இடது கையில் பச்சை குத்திக் கொண்ட தொண்டர்களில் நாஞ்சில் மனோகரனும் ஒருவர். தி.மு.க.வில் சேர்ந்தபிறகு, தான் பச்சை குத்திக் கொண்டிருப்பது தெரிந்து விடாமல் இருக்க முழுக்கைச் சட்டை அணியத் தொடங்கினார் நாஞ்சில் மனோகரன்.
பொது அறிவு வாசனையுள்ள அந்த மத்திய அமைச்சரின் வடசென்னை நங்கூரமாக இருந்தவருக்கும் அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டிருக்கிறார்களாம். அவருக்கு வேண்டாதவர்கள் சிலரை துறைமுகத்திற்கான கமிட்டியில் நியமித்ததன் பின்னணியில்தான் கருத்து வேறுபாடாம். நாஞ்சில் மனோகரனுக்கு ஏற்பட்ட அதே தர்மசங்கடம் அவரது பெயரைக் கொண்ட இவருக்கும் ஏற்பட்டிருக்கிறதாமே? அப்போலோ மருத்துவமனைக்குப் போய், தனது கையில் பச்சை குத்தியிருந்த அமைச்சரின் பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழித்திருக்கிறாராமே, மெய்யாலுமா?
===
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவை மூத்த வாரிசு "பளார்' என்று கன்னத்தில் அறைந்தாரா இல்லையா என்பதுதான் அறிவாலய வட்டாரங்களின் காரசாரமாக நடைபெற்று வரும் விவாதம். "நடமாட முடியாமல் இருப்பதால் உன்னை விட்டு வைக்கிறேன். இல்லையென்றால் நடப்பதே வேறு' என்று தலைவர் அலறியதாகச் சிலரும், ""அப்பா என்பதால் விட்டு வைக்கிறேன், இல்லையென்றால்...'' என்று மூத்த வாரிசு எச்சரித்ததாகச் சிலரும் கூறுகிறார்கள். இத்தனை களேபரங்கள் நடந்தது எதுவும் தெரியாமல் பத்து மாதம் சுமந்து பெற்றவர் இருப்பதுதான் சோகத்திலும் சோகம் என்று வருத்தப்படுகிறார்களாமே குடும்பத்தின் நீண்டநாள் ஊழியர்கள், மெய்யாலுமா?
===
மலேசியாவில் அரச பரம்பரையினரைக் குறிக்கவும், பிரபுக்களைக் குறிக்கவும் பல பட்டங்கள் வழங்கப்படுகின்றன. "துங்கு' என்பது அரச குடும்பத்தினருக்கான பட்டம். பல நூறு ஆண்டுகளாக மலேசியாவில் வழங்கப்படும் இன்னொரு அரச குலப் பட்டம் "துன்'. இந்தப் பட்டம் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும். சுமார் 35 குடும்பங்கள்தான் இந்தப் பட்டத்துக்கு உரியவர்களாக இருப்பார்கள். இதற்கு அடுத்தபடியான பட்டம் "தான்ஸ்ரீ'. இதற்கு அடுத்தபடியான பட்டம் "தாதுக்'.
"தத்தோஸ்ரீ' என்பதுதான் நமது பத்மவிபூஷணுக்கு அல்லது பிரிட்டிஷாரின் "சர்' பட்டத்திற்கு நிகரான மலேசிய விருது. இந்த விருது பெற்றவர்களின் மனைவி தத்தின்ஸ்ரீ என்று அழைக்கப்படுவார். அதிகபட்சம் நாற்பது ஐம்பது பேர்தான் இந்த விருது பெற்றவர்களாக இருப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
"தத்தோஸ்ரீ' பட்டம் பெற்ற, மலேசியாவில் மிக அதிக நாள்கள் அமைச்சராக இருந்த அந்தப் பிரமுகர், தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க விரும்பினாராம். முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொல்லி அவரிடமிருந்து பல லட்சங்கள் கறந்து விட்டிருக்கிறார்களாமே? ""என்னப்பா ஆண்டியாக்கிடாதே'' என்று கெஞ்சுகிறாராமே, அந்த வம்சாவழித் தமிழர், மெய்யாலுமா?
===
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்சனை நினைவுபடுத்தும் பெயர் கொண்ட காவல் துறை துணைத் தலைவர் அவர். ஒரு பெண்மணியுடன் கூட்டாக அவர் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டார். பெரும் லாபம் கிடைத்தபோது, அத்தனையும் தனக்கே கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில், பெண்மணி மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டாராமே? பாதிக்கப்பட்டவர், என்னென்னவோ சிரமங்களுக்குப் பிறகு காவல் துறைத் தலைவரிடம் புகார் தெரிவிக்க, இப்போது விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். இதிலிருந்து தப்பிக்க அந்த அதிகாரி அளித்த விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறதாமே, மெய்யாலுமா?
===
சமீபத்தில் நடந்த பிரச்னைகளுக்கு முன்னால் நடந்த உரையாடல் இது. குலாம் நபி ஆசாத் வந்து பேசிவிட்டுப் போனது பற்றி முக்கியமான தலைவர்கள், விசாரித்துக் கொண்டிருந்தனராம். ""நாம யாரெல்லாம் வேண்டாம்னு நினைக்கிறோமோ, அவங்க எல்லாம் நம்ம கூடக் கூட்டணி வேணும்னு நினைக்கிறாங்க. வலுவில வந்து பேசறாங்க. நாம யாரு வேணும்னு நினைக்கிறோமோ அவங்க நம்மை சட்டையே பண்ண மாட்டேங்கிறாங்க'' என்று தலைவர் சலித்துக் கொண்டாராமே, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.