பகுதி 26 – அதிசயப் பத்து - 3
எம்பெருமானைப் போற்றுகின்ற அடியவர்களின் அருகே சென்று நான் அவர்களுடன் இணைந்துகொள்ளவில்லை, பல மலர்களைப் பறித்து சிவனைப் போற்றவில்லை,


சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.
பரவுவார்அவர்பாடுசென்று
அணைகிலேன், பல்மலர் பறித்துஏத்தேன்,
குரவுவார் குழலார்திறத்தே
நின்று குடிகெடுகின்றேனை,
இரவுநின்று எரிஆடிய
எம்இறை, எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு தன் அடியரில்
கூட்டிய அதிசயம் கண்டோமே.
*
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு
எழுத்தும் என் ஏழைமைஅதனாலே,
நண்ணிலேன் கலைஞானிகள்
தம்மொடு, நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்துஇறந்து மண்
ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில்
கூட்டிய அதிசயம் கண்டோமே.
பொருளின்பம்
எம்பெருமானைப் போற்றுகின்ற அடியவர்களின் அருகே சென்று நான் அவர்களுடன் இணைந்துகொள்ளவில்லை, பல மலர்களைப் பறித்து சிவனைப் போற்றவில்லை, குரவமலர் சூடிய கூந்தலைக்கொண்ட பெண்களையே தேடிச்சென்று அழிகின்றேன்,
அத்தகைய என்னை, இரவு நேரத்தில் நெருப்பிடை நின்று ஆடிய எங்கள் இறைவன், சிவந்த சடை மிளிர்கின்றவன், பாம்பை அணிந்தவன், அந்தச் சிவபெருமான் ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!
*
என்னுடைய அறியாமையாலே, சிவபெருமானின் திருநாமமான அஞ்செழுத்தையும் நான் எண்ணவில்லை, கலைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளோடு நான் சேரவில்லை, நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை, மண்ணில் பிறந்து, இறந்து மீண்டும் மண்ணாக ஆவதற்கே விரும்புகிறேன்,
அப்படிப்பட்ட என்னை, அண்ணல் சிவபெருமான் ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா?
சொல்லின்பம்
பரவுவார்: போற்றி வணங்குபவர்
பாடு: பக்கத்தில்
அணைகிலேன்: சேரவில்லை
ஏத்தேன்: போற்றவில்லை
குழலார்: கூந்தலைக் கொண்டவர்கள்
குடிகெடுகின்றேன்: நிலை அழிகின்றேன்
அரவன்: பாம்பை அணிந்தவன்
ஏழைமை: அறியாமை
நண்ணிலேன்: சேரவில்லை
நயவாதே: விரும்பாமல்
ஒருப்படுகின்றேன்: விரும்புகின்றேன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...