வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 26 – அதிசயப் பத்து - 4

தசை என்கிற ஓட்டை விழுந்த சுவரும், புழுக்கள் நெளிகிற, உளுத்துப்போன, நிணநீர் கசிகிற பொய்யான கூரையும் கொண்ட இந்த உடல் என்கிற வீட்டை உண்மை என்று கருதினேன், அதனால், துன்பக்கடலில் சுழியில் சிக்கி அலைந்தேன்,

News image
Updated On :14 டிசம்பர் 2015, 10:37 am

என்.சொக்கன்

சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.

162

பாடலின்பம்

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து

உளுத்துஅசும்பு ஒழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்எனக்கருதிநின்று

இடர்க்கடல் சுழித்துஅலைப்படுவேனை

முத்து மாமணி, மாணிக்க

வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

*

நீக்கி முன்எனைத் தன்னோடு

நிலாவகை குரம்பையில் புகப்பெய்து

நோக்கி நுண்ணிய நொடியன

சொல்செய்து நுகம்இன்றி விளாக்கைத்துத்

தூக்கி முன்செய்த பொய்அறத்

துகள்அறுத்துஎழுதரு சுடர்ச்சோதி

ஆக்கி ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

பொருளின்பம்

தசை என்கிற ஓட்டை விழுந்த சுவரும், புழுக்கள் நெளிகிற, உளுத்துப்போன, நிணநீர் கசிகிற பொய்யான கூரையும் கொண்ட இந்த உடல் என்கிற வீட்டை உண்மை என்று கருதினேன், அதனால், துன்பக்கடலில் சுழியில் சிக்கி அலைந்தேன்,

அத்தகைய என்னை, முத்து, மாமணி, மாணிக்கம், வயிரம், பவளம், இவை அனைத்தும் சேர்ந்தது போன்ற பிரகாசம் நிறைந்த முழுச்சோதியாகிய என் தந்தை சிவபெருமான் ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

*

முன்பு நான் செய்த குற்றங்களால், எம்பெருமான் என்னைத் தன்னிடம் சேராதபடி நீக்கினான், உடல் என்கிற சிறுகுடிலில் புகவைத்தான், பின்னர், என்னைக் கருணையோடு பார்த்தான், மிக நுட்பமான ஒரு சொல்லை / தத்துவத்தை ஒரு நொடியில் சொன்னான், நுகத்தடி இல்லாமல் நிலத்தை உழுவதுபோல என்னை மாயையிலிருந்து விலக்கிவிட்டான், நான் முன்பு செய்த பொய்களை நீக்கி, குற்றங்களை அகற்றினான்,

எழுச்சிமிகுந்த சுடர்ச்சோதியான சிவபெருமான் என்னைத் தன் அடிமையாக்கினான், ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

சொல்லின்பம்

பொத்தை: ஓட்டை

ஊன்: உடல்

அசும்பு: நிணநீர்

இத்தை: இதை

இடர்க்கடல்: துன்பக்கடல்

அலைப்படுவேன்: அலைமோதுவேன்/ துன்பப்படுவேன்

அத்தன்: தந்தை

நிலாவகை: நிற்காதபடி

குரம்பை: சிறுகுடில்

நுண்ணிய நொடியன: நுட்பமான, நொடியில் சொல்லக்கூடியவை

நுகம்: நுகத்தடி

விளாக்கைத்து: உழுது

துகள்அறுத்து: குற்றங்களை நீக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.